சென்னை.பிப்.15. “நான் ஆறுதல் தருவதற்காக வரவில்லை. பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றும், பதவியில் உயர்ந்த இடத்தில் இடம்பெறுவது சுலபம். உள்ளத்தில் இடம்பெறுவது தான் கடினம். அப்படி உள்ளத்தில் இடம் பெற்றவர் மு.சித்தார்த்தன் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சித்தார்த் தன் அவர்களின் புகழை ஓங்கி ஒலித்து உரையாற்றினார்.
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில், 14.02.2026 அன்று மாலை 6:00 மணியளவில் சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் மு.சித்தார்த்தன் அவர்களின் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமையேற்று படத்தைத் திறந்து வைத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், புகழ் வணக்க உரையாற்றினார்.
நிகழ்வில், திராவிடர் கழக வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் நா.கணேசன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மதுரை உயர்நீதிமன்றம் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஆர் பாஸ்கரன், சென்னை உயர்நீதிமன்றம் அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.சந்திரமோகன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் வழக்குரைஞர் ஜி.தாளமுத்தரசு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் வழக்குரைஞர் பா.அசோக், திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் முன்னிலை ஏற்று, மு.சித்தார்த்தன் அவர்களின் பெருமைகளை பல்வேறு கோணங்களில் விளக்கி, புகழ் வணக்க உரையாக நிகழ்த்தினர். கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர், மதுரை வே.செல்வம் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி நடத்தினார்.
இறுதியாக, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தலைமை உரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், “நான் இதுபோன்று படத்திறப்பு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு சங்கடப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் வழங்குவதற்காக சென்றிருக்கிறேன். ஆனால், இங்கே ஆறுதல் வழங்க வரவில்லை. ஆறுதல் பெறுவதற்காக வந்திருக்கிறேன்” என்று மிகுந்த சங்கடத்துடன் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், சித்தார்த்தன் அவர்களின் தந்தையாரை பற்றி குறிப்பிட்டார். அதாவது, சித்தார்த்தனின் தந்தை முத்து அவர்கள், தான் சிறு வயதாக இருந்த காலத்திலேயே தந்தை பெரியாருடனும் அன்னை மணியம்மையாருடனும் மிகவும் நெருக்கமாக இருந்தவர் என்று விவரித்து, படமாக மாறி இருக்கும் வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் அவர்களின் கொள்கை வேர் எவ்வளவு ஆழமானது என்பதை விளக்கினார். மேலும் அவர், “சித்தார்த்தன் சிறந்த கொள்கையாளர்; கடமையாளர்; சமூகவாதி; அதையும் தாண்டிய சிறந்த பண்பாளர்; இப்படிப்பட்ட பண்புகள் இணைந்த ஒருவரை நாம் இழந்திருக்கிறோம் என்பதுதான் துயரத்தை அதிகப்படுத்துகிறது” என்று மிகவும் வேதனையுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர், “நமது கொள்கைக்கு நேர் எதிரானவராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் இருந்தாலும், அவர் நேரில் வந்து, மதுரையில் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார்” என்று குறிப்பிட்டு, வழக்குரைஞர் மு.சித்தார்த்தன் அவர்களின் கொள்கைச் சிறப்பை அளவிட்டுக் காட்டினார். மேலும் அவர், “திராவிடர் கழகத்தின் கருஞ்சட்டைத் தொண்டர்கள் சமூகத்தின் இதயம் போன்றவர்கள். அது வெளியே தெரியாது. ஆனால், அது தன்னுடைய கடமையை செய்து கொண்டே இருக்கும். அப்படி செய்து கொண்டிருந்தவர் தான், பாடமாக இருந்து, இன்று படமாக மாறியிருக்கும் நமது சித்தார்த்தன்” என்று குறிப்பிட்டு அவரின் இழப்பு, தனக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை உணர்த்தினார். தொடர்ந்து, “பதவியில் உயர்ந்த இடத்திற்கு செல்வது சுலபம். ஆனால், உள்ளத்தில் இடம் பெறுவது தான் கடினம். அப்படி உள்ளத்திலும் இடம் பெற்றவர்தான் நமது சித்தார்த்தன்” என்று குறிப்பிட்டு, எவ்வளவு சிறந்த மனிதரை; கருஞ்சட்டை வீரரை இழந்திருக்கிறோம் என்பதை உணர வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், “தந்தை பெரியாரின் தொண்டர்களான நாம்; பகுத்தறிவாளர்களான நாம்; இந்த துயரத்தையும் கடந்து, சித்தார்த்தன் போன்று பலரையும் உருவாக்குவதுதான் அவருக்கு நாம் செய்யும் உண்மையான புகழ் வணக்கம்” என்றும், “சித்தார்த்தன் குடும்பம் என்பது நமது குடும்பம்” என்றும், இந்த இயக்கம் அவர்கள் பக்கம் எப்போதும் இருக்கும்” என்றும் கூறி, தனது புகழ் வணக்க உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொருவரும் அவரவரது அனுபவங்களைச் சொல்லும் போது, தவிர்க்க முடியாமல் சித்தார்த்தன் குடும்பத்தினரையும் தாண்டி, ஆண் பெண் பாகுபாடு இல்லாமல், மற்றவர்களுக்கும் துயரத்தை மறைக்க முடியாமல் கண்ணீர் கசிந்தது. கழகத் தலைவரின் உரை தான் அனைவரும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகாட்டுதலை; நம்பிக்கையை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியார் உலகத்திற்கு 50 ஆயிரம் நிதி அளிப்பு

மு.சித்தார்த்தனின் தாயார் டி.எஸ்.கல்யாணி அம்மா, வாழ்விணையர் வழக்குரைஞர் சி.சுஜாதா, மகள் சி.யாழினி, மருத்துவர் நிருபன், மருத்துவர் நிரஞ்சன் மற்றும குடும்பத்தினர் சார்பில் பெரியார் உலக நன்கொடை ரூ.50 ஆயிரத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர்.
நிறைவாக, திருச்சி மருத்துவமனை மருத்துவர் நாகமணி அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர்கள் மு.சென்னியப்பன், தளபதி பாண்டியன், பகுத்தறிவாளன் உள்ளிட்டோரும், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வழக்குரைஞர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் சித்தார்த்தன் குடும்பத்தினர், நண்பர்கள் என்று ஏராளமானோர் வருகை தந்து, சித்தார்த்தனுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு மீளாத் துயரத்திலிருந்து ஆறுதல் பெற்றனர். அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
