தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் படிப்பகத்தை திறந்து வைத்து
தமிழர் தலைவர் ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்!
குடந்தை, பிப்.15 ‘‘இருட்டைக் குறை சொல்வதை விட; ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது சிறந்தது! பெரியார் பற்றாளர் குடந்தை நடராஜன் அதைத்தான் செய்திருக்கிறார்!” என்று தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் படிப்பகத்தை திறந்து வைத்து, முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் மக்களிடம் கழகத் தலைவர் தன்னம்பிக்கை ஊட்டி உரையாற்றினார்.
கபிஸ்தலம், தமிழ் மக்கள் கலை விழா – 2026 நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், கும்பகோணம் வட்டம் வலங்கைமான் வழி – தில்லையம்பூரில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிட்டுச் செல்வதாக பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி அங்கு சென்றார். அங்கு “இளம் புயல் ஹரி டிரம் செட் பூக்கொல்லை குழுவினர், ‘டிரம் செட்’ இசைத்து கழகத் தலைவரை உற்சாகமாக வரவேற்றனர். இசை ஏற்படுத்திய கிளர்ச்சியால் கிராமத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு கூடத் தொடங்கிவிட்டனர். காப்பகத்தின் நிரந்தரக் காப்பாளரும், ஓய்வு பெற்ற பொறியாளருமான நடராஜன் மற்றும் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் வாசல் வரை வந்து கழகத் தலைவரை அழைத்துச் சென்றனர். உள்ளே நுழைந்ததும் காப்ப கத்தில் தங்கியிருக்கும் மக்கள் பலமாக கையொலி செய்து கழகத் தலைவரை வரவேற்றனர். நடராஜனும், தென்கச்சி சுவாமிநாதனும் பியூசி வரை ஒன்றாகப் படித்து, வேளாண்மைத் துறையில் ஒன்றாக பணி யாற்றியவர்கள். தென்கச்சி சுவாமிநாதன் மறைந்த பின்னர் நண்பர் என்ற முறையில் இங்கு அவருக்கு மார்பளவு சிலை அமைத்திருந்தார். ஆசிரியர், அன்னாரின் சிலைக்கு மரியாதை செய்தார். தொடர்ந்து, அந்த காப்பகத்தில் இருந்த படிப்பகத்தை, கழகத் தலைவர் திறந்து வைத்தார்.
ஜாதி, மதம், பேதம் இல்லாமல்…
நிகழ்ச்சி தொடங்கியது. காப்பகத்தின் பொறுப்பாள ரும், பெரியார் பற்றாளருமான நடராஜன் அனைவரையும் வரவேற்று, காப்பகம் கடந்து வந்த பாதையைப் பற்றி சுருக்கமாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து, குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் முன்னிலை வகித்து உரையாற்றினார். தொடக்க காலத்தில், தென்சென்னையில் நடராஜன், வீரபத்திரன் அவர்களுடன் இணைந்து திராவிடர் கழகத்தில் பணியாற்றியிருக்கிறார் என்பதும், இக்காப்பகம் 22.07.1998 அன்று தொடங்கப்பட்டது என்பதும், ஜாதி, மதம், பேதம் இல்லாமல், ஆதரவற்றவர்கள் அனைவரையும் இக்காப்பகம் அரவணைத்துச் செல்கிறது என்பதும், தற்போது 170 பேர் இங்கே தங்கியிருக்கின்றனர். அதில் ஆண்கள் 80 பேர். பெண்கள் 90 பேராவர் என்பதும், இவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி வழங்குவது மட்டுமல்லாமல், குரூப் 4 அரசுத் தேர்வுக்கான பயிற்சியும் கொடுக்கப்படுகிறது என்பதும், இந்த காப்பகத்தில் இறந்தவர்களை ஜாதி வேற்றுமை காரணமாக ஊரில் உள்ள சுடுகாட்டில் அனுமதிப்பதில்லை. ஆகவே, காப்பகத்தின் வளா கத்திலேயே தனி சுடுகாடு அமைத்து, இறுதி நிகழ்வு களை செய்து வருகின்றனர் என்பதும் நடராஜன் பேசியவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். நிறைவாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் சார்பில், படிப்பகத்திற்கு நூல்களை நன்கொடையாக வழங்கி, உரையாற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
ஆசிரியர் தமது உரையில், ‘‘வேறொரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியுள்ளதால் குறுகிய நேரமே உங்களுடன் செலவழிக்க வேண்டியுள்ளது. அடுத்த முறை இதற்காகவே வந்து நான் பேசுவதை விட, உங்களை பேசவிட்டு நான் கேட்கப்போகிறேன்” என்று தொடங்கினார். மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கைதட்டி மகிழ்ந்தனர். தொடர்ந்து, “பழையவற்றை மறந்து புதிய வாழ்க்கையை வாழ்ந்து பாருங்கள்” என்றார். அடுத்து, “இங்கேயும் சில குறைகள் இருக்கத்தான் செய்யும். இருட்டைக் குறை சொல்வதை விட, ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்துவது தான் சிறந்தது” என்றார். அதே வேகத்தில், “அந்தப் பணியைத் தான், நடராஜன் செய்துவருகிறார்” என்றும், “நடராஜன் தன் பெண்டு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்றில்லாமல், தொல்லுலக மக்களெல்லாம் நம் மக்கள் என்று தொண்டு செய்து வருகிறார்” என்றும் அவரைப் பாராட்டிப் பேசி னார். மக்கள் அந்தக் கருத்தை ஆதரிக்கும் வண்ணம், கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“எல்லாம் முடிந்துவிட்டது’’ என்று எண்ணாதீர்கள்!
தொடர்ந்து, “ஜாதி, மத, பேதமில்லாமல் பழ குங்கள். நன்றாக உண்டு, உறங்கி, தேவையான அளவுக்கு உடற்பயிற்சி செய்து உடல் நலத்தைப் பேணுங்கள்” என்றும், “எல்லாம் முடிந்துவிட்டது என்று எண்ணாமல், இனிமேல் தான் வாழ்க்கை இருக்கிறது என்று வாழுங்கள்” என்றும் தன்னம்பிக்கையூட்டி, “ஏற்கெனவே குரூப் 4 தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக அறிந்தேன். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் கல்வி தொடர்பாக உங்களுக்கு என்ன செய்வது என்று ஆலோசிக்கிறோம்” என்றும் நம்பிக்கை அளித்து, “எதையெல்லாம் வீட்டில் விட்டுக்கொடுக்க முடியவில்லையோ, அதை எல்லாம் இங்கே விட்டுக் கொடுத்து பாருங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்” என்று கூறி, தமது உரையை நிறைவு செய்தார். தொடர்ந்து அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்குப் புறப்பட்டார்.
நிகழ்ச்சியில் பெரியார் பெருந்தொண்டர் வீரபத்திரன், தாராசுரம் இளங்கோவன், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் நிம்மதி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொறுப்பாளர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்களும் கலந்து கொண்டு கழகத் தலைவர் உரையை செவிமடுத்தனர்.
