கபிஸ்தலத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் மக்கள் கலை விழா – 2026 நிகழ்வில்
‘‘சமுதாயத் தொண்டர் – 2025–க்கான விருது”
தஞ்சை.பிப்.15 கபிஸ்தலத்தில் நடைபெற்ற மாபெரும்
தமிழ் மக்கள் கலை விழா – 2026 நிகழ்வில் ”சமுதாயத் தொண்டர் – 2025 க்கான விருது” திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப் பட்டது!
“அந்தி முதல் விடியல் வரை”
தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றம் சார்பில், சுயமரியாதைச் சுடரொளி கபிஸ்தலம் தி.கணேசன் அவர்கள் நினை வாக, “தமிழ் மக்கள் கலைவிழா – 2026” தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் கபிஸ்தலத்தில் கடந்த 7.2.2026 அன்று, “அந்தி முதல் விடியல் வரை” எனும் பொருளில், மாலை 5.30 மணிமுதல் அடுத்த நாள் (8.2.2026) விடியும் வரை, மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், அதனுடன் உணவுத் திருவிழாவும் இணைந்து ஆண்டுதோறும் தொடர்ந்து நடைபெற்றது. இது 20 ஆம் ஆண்டு நிகழ்வாகும். இதில், சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் நினைவு, “சமுதாயத் தொண்டர் – 2025 விருது”க்கு, திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
கழகத் தலைவர் 8 மணியளவில் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். விழாக்குழுவினர் சிறப்பான வரவேற்பை நல்கினர். தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வி.மோகனின் நெறியாள்கையில், முதலில் தமி ழுக்காக உயிர்த் தியாகம் செய்த மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, உலக சாதனை செய்த நீச்சல் வீரர் புவியரசு மற்றும் அவரது பயிற்சியாளர்களுக்கும், குருதிக்கொடை, உடற்கொடை கொடுத்தவர்களுக்கும், நினைவுப்பரிசும் கழகத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
பெரியார் உலகம் நிதியளிப்பு
அதைத் தொடர்ந்து பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் வி.மோகன் பெயர்களை வாசித்தார். உரியவர்கள் மேடையேறி வருகை தந்து, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் காசோலைகளை வழங்கி மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன், குடந்தை சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன், உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். குடந்தை மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் நிம்மதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
‘‘சமுதாயத் தொண்டர் 2025 விருது!”
நிறைவாக, ‘‘சமுதாயத் தொண்டர் 2025 விருது” திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது” என்று ஒருங்கிணைப்பாளர் வி.மோகன் பலத்த கைதட்டல்க ளுக்கிடையே அறிவித்தார். நிர்வாகிகள் ஒரு வெள்ளி பதக்கம் மற்றும் நினைவுப் பரிசினை கழகத் தலைவருக்கு வழங்கினர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
கழகத் தலைவர் ஆசிரியர் உரை
அவர் தமது உரையில், “வெள்ளம் போல் ஜாதி, மத, பேதமில்லாமல், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, இதோ தமிழர்கள் குழுமியிருக்கிறோம்; நாங்கள் தமி ழுக்கு விழா கொண்டாடுகிறோம்” என்று எடுத்த எடுப்பிலேயே உரத்த குரலில் தொடங்கினார். தொடர்ந்து, “பெருங்கூட்டமாகக் கூடியிருக்கிறோம் என்பது பெருமை அல்ல. அந்த பெருங்கூட்டத்தில் எந்தவிதமான சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல் 20 ஆண்டுகளாக நடக்கிறது. இது ஆய்வுக்குரியது” என்றார்.
திராவிடர் இயக்கம் பாடுபட்டதின் விளைவாக தமிழுக்கு தனித்தன்மை வந்தது!
தொடர்ந்து, ‘‘பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் இதுபோன்ற பெருங்கூட்டத்தை கட்டுப்பாட்டுடன் நடத்துவதற்கு ஒரு சிறந்த தலைமை தேவை. அதற்காகவே ஆடிட்டர் சண்முகம் அவர்களை இந்தப் பகுதி தந்திருக்கிறது” என்று குடந்தை மக்களைப் பாராட்டினார். மேலும் அவர், “இந்த 20 ஆண்டுகளில் 4 முறை இதில் நான் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதுதான் எனக்கு மகிழ்ச்சி” என்றார். தொடர்ந்து, “ஏன் தமிழ் மக்கள் கலைவிழா என்று நடத்த வேண்டும்?” என்று கேள்வி கேட்டுவிட்டு, இங்கே இருவேறு கலாச்சாரங்கள் இருக்கின்றன என்றும், ஒன்று ஆரியம்? மற்றொன்று திராவிடம்! அந்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை தடுத்து நிறுத்துவதற்கு பெரியார்; திராவிடர் இயக்கம் பாடுபட்டதின் விளைவாக தமிழுக்கு தனித்தன்மை வந்தது” என்று பதில் அளித்தார்.
அப்படித்தான் ”புத்தாண்டு எது? என்று கேட்க முடிந்தது” என்றார். ”மனுவின் மொழி அறமானது ஒரு நாள்? அதை மாற்றி அமைக்கும் நாளே தமிழர் திருநாள்! மாற்றங்கள் இருந்தால்தான் வளர்ச்சி சாத்தியம்” என்றார். “தமிழனுக்கு ஈடு இணை இல்லாத ஒரு விழா இருக்கிறது என்றால் அது பொங்கல் தான்!” என்று, கம்பீரமாகத் தொடர்ந்தார். ‘‘கபிஸ்தலம் என்பதே பண்பாட்டு படையெடுப்புக்காளான பெயர் தான். இதன் உண்மையான பெயர், குரங்காடுதுறை” என்றார். இப்படித்தான் தமிழே நீஷப் பாஷை ஆனது? சமஸ்கிருதம் தேவ பாஷை ஆனது” என்றார். ‘‘அதன் காரணமாகத்தான் இப்படிப்பட்ட விழாக்கள் நமக்கு தேவைப்படுகின்றன” என்று தொடர்ந்து சொல்லி, “இந்த நிகழ்ச்சியில் இயல், இசை இருக்கிறது. நாடகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அண்ணா வடித்த நாடகங்களை நடத்திக்காட்டுங்கள்” என்று ஓர் ஆலோசனையை வழங்கி, தமது உரையை நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் குடந்தை மாவட்டத் தோழர்கள் மற்றும் பல்வேறு மாவட்டத்திலிருந்தும் கழகத் தோழர்கள் வருகை தந்திருந்தனர். அதுமட்டுமின்றி கட்சி பாகுபாடு இன்றியும், கட்சி சாராத பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக பனிப்பாதுகாப்புக் கருவிகளோடு, கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை அமர்ந்திருந்தனர். பசிக்கிறவர்கள் உணவு வழங்கும் இடங்களுக்குச் சென்று இலவசமாக பெற்று உண்ணும் வசதி இருந்தது. ஆகவே, ’தமிழ் மக்கள் கலை விழா – 2026’ செவிக்கு மட்டுமல்ல, வயிற்றுக்கும் கொடுத்து, மக்களை இரவு முழுவதும் நிகழ்ச்சிகளை காணக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விளையாட்டுத் திடல் நிறைந்த பின்னரும் மக்கள் வரிசையில் நின்று உள்ளே வர முயன்று கொண்டிருந்தனர். அந்தளவுக்கு மக்கள் மனங்களை, இந்நிகழ்ச்சி கொள்ளை கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
