சென்னை, ஏப். 16- அதிமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக அண்ணாமலை வெளியிட்டால் அதை சந்திக்க தயார் என்று மேனாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்டது அதிமுக. பாஜக அண்ணாமலை வெளியிட்டிருப்பது திமுகவின் சொத்துப் பட்டியல்.
பிற கட்சியினரின் பட்டியலையும் வெளியிடுவேன் என்று தான் அண்ணாமலை கூறினார். அதிமுகவின் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறவில்லை. எங்களுக்கு மடியில் கனம் இல்லை என்பதால், ஒன்றிய முகமைகளான சிபிஅய்,வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை குறித்து எங்களுக்கு கவலை இல்லை. அண்ணாமலையை பார்த்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை.
அப்படி அதிமுகவினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்டால், எல்லாவற்றையும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மறைமுக பூச்சாண்டி வேலைகள் எல்லாம் எங்களிடம் பலிக்காது. தைரியம் இருந்தால் எங்கள் கட்சி பெயரை சொல்லி பார்க்கட்டும். தேர்தலில் எங்கள் தலைமையில்தான் கூட்டணி இருக்கும். நாங்கள் கொடுக்கும் இடங்களைத்தான் கூட்டணிக் கட்சிகள் வாங்கிச் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.