சென்னை, பிப்.14- மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூ.5,000 வங்கி கணக்கில் செலுத்தப்பட்டிருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: சட்டப்பேரவை தேர்தலை காட்டி அடுத்த சில மாதங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தடுக்கப் பார்த்தவர்கள், வாயடைத்துப் போகும் வகையில் 1.31 கோடி மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்றால் மகளிர் நாடு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது திமுக அரசு.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முடக்க பாஜக முயற்சித்த தடைகளையெல்லாம் தகர்த்து இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: மகளிர் நலன் காக்கும் பல்வேறு திட்டங்களால் பெண்களின் பேராதரவு திமுக-வுக்கு பெருகிக்கொண்டே போகிறது.
விசிக தலைவர் திருமாவளவன்: முதலமைச்சர் செய்த இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை அளிக்கிறது. இது வெறும் வாக்குக்கானதல்ல. மகளிரின் வலிமைக்கானது.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: தமிழ்நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் முதலமைச்சர். திமுக-வுக்கு செல்வாக்கு உயர்ந்து விடுமோ என்ற அச்சத்தால் ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட நினைப்பது கண்டனத்துக்குரியது.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: முதலமைச்சரின் அறிவிப்பு அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மநீம தலைவர் கமல்ஹாசன்: இது அற்புதமான அறிவிப்பு. இதற்கு பொறாமைப்பட்டு திட்டத்தை தடுப்பதற்கு பதிலாக, இதைவிட சிறப்பாக செய்யவேண்டும் என அடுத்த தலைவர்கள் நினைத்தால் தமிழ்நாடு தலைநகரமாகிவிடும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன்: 3 மாதங்களுக்கு உரிமைத் தொகையை முடக்க பார்த்த நிலையில், தமிழ்நாட்டு மகளிருக்கு ரூ.5000 வழங்கியிருப்பது திமுக ஆட்சிக்கு மேலும் ஒரு மகுடம்.
