நூற்றாண்டு விழாவினை இரண்டு இயக்கங்கள் கொண்டாடும் ஆண்டாக கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் செய்திகள் நிரம்பியிருந்தன.
அதில் முதலாவதாக ஃபர்ஸ்ட இஸ் பெஸ்ட என்ற ஆங்கிலப் பழமொழிக்கு ஏற்ப பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் திராவிடர் கழகம் ஒரு நூற்றாண்டை நிறைவு செய்திருக்கிறது. அதன் அனைத்து கொள்கைகளும் வெளிப்படையானதாகவும், மனிதனுக்கு பயன்படக்கூடியதாகவும் முன்னேற்றப் பாதையில் முற்போக்கு சிந்தனையோடு முன்னெடுத்துச் செல்லும் வழிமுறையில் பீடுநடைபோட்டு வருகின்றன.
பல்லாயிரம் ஆண்டுகளாக பிறவியிலேயே இழிவை ஏற்படுத்தி பற்பல ஜாதிகளாக, மனித சமூகம் பிரிக்கப்பட்டு கல்வி, வேலைவாயப்பு என்ற அனைத்து ரீதியிலும் ஓடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின் மக்களை தட்டியெழுப்பி மனிதனுக்கு மனிதன் எந்த வேறுபாடும் இல்லை. பெண்களையும் மனிதர்களாக நடத்த வேண்டும் என்ற பல சித்தாந்த கோட்பாடுகளை உள்ளடக்கி வெளிப்படைத் தன்மையோடு இறுதி மூச்சுவரை பாடுபட்ட இயக்கமாகவும்,
அதன் அய்ம்பெரும் தலைவர்களாக பேரறிஞர் அண்ணா. ஈ.வி.கே. சம்பத், நடமாடும் பல்கலைக்கழகம் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, தற்கால திராவிட மாடல்’ ஆட்சியாளர்கள் வரை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அரசியல் விமாசனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ‘இந்திய அளவில் ஏன் உலகளவில் தமிழனை தலைநிமிர வைத்து நரணியெங்கும் போற்றும் இன்றையநிலைக்கு உயர்த்தியது தந்தை பெரியாரின் திராவிட பகுத்தறிவு மாடல் சித்தாந்தமே’ என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.
பெரியாரின் வார்த்தையும், வரலாறும் ஆதாரப் பூர்வமாக அவர் பிறந்ததில் இருந்து இறுதி மூச்சுவரை அனைத்துமே சென்னை பெரியார் திடலில் நீங்கள் நேரடி சாட்சியாகக் காண முடியும். என்றுமே, எப்போதுமே அவர் நடத்திய அனைத்துப் போராட்டங்களும் எந்தவொரு தனி மனிதனுக்கும் தீங்கை விளைவிக்காதவை. அவரால் வெளிவந்த தின, வார, மாத ஏடுகளும் அதன் பெயர்களும் வஞ்சகத் தன்மை கொண்ட ஆரிய வருணாசிரமத்திற்கு எதிராக போர் பூண்டவை என்றாலும், தனி மனித ஒழுக்கத்தைப் பேணுவதில் பெரியாரின் சித்தாந்தம் இமாலயத்தின் உச்சியில் வைத்து கொண்டாடப்படக்கூடியது.
அவருடைய கடவுள் மறுப்புக் கொள்கையானாலும், ஏனைய கருத்தியல்களானாலும் எந்த மதத்தாலும் –எந்த வர்க்கத்தாராலும் – எந்த மனிதராலும் வெறுக்கத் தக்கவையல்ல. புடம் போட்ட தங்கமாக அவரின் நாணயத்தின் இரு பக்ககங்களும் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றன’ என்பதில் எதிர் கருத்துக்கு இடமில்லை.
எல்லா மதங்களையும் நாணயத் தன்மையோடு சாடினாலும் அவரின் இஸ்லாமியர்கள் பால் இருந்த பாசமும் நேசமும், உரிமையான கண்டிப்பும் ‘‘இன இழிவை ஒழிக்க இஸ்லாமே நன்மருந்து’’ என்ற அவரின் சிறு நூலில் எந்த வித ஒளிவு மறைவும் இன்றி தன்னுடைய கருத்தை முன்வைக்கிறார். இதை இஸ்லாமியர்கள் சீர்தூக்கி வாசிக்க வேண்டியது.
பெரியாரின் அவர் நிறுவிய திராவிடர் கழகத்தின் சேவை – பணி இன்னும் நூற்றாண்டுகள் கடந்து குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான தேவையாய் இருக்கிறது. திராவிடர் கழகம் தனது ஆசான் பெரியாரின் பணியைத் தொடர்ந்து நூற்றாண்டு கொண்டாடும் வேளையில் எமது இதயப் பூர்வமான நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாழ்க பெரியார்!
இரண்டாவதாக ‘ராஸ்டிரிய சுய சேவக் சங்’ – ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பும் தன் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. அதன் ஆதாரப்பூர்வமான ஒரு நூற்றாண்டின் சேவைகளை பட்டியலிடும் போது வஞ்சகம், சூது, வாது, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல், கொலை, கொள்ளை, தீவிரவாதம் வரலாற்றுத் திரிபுகள், அராஜகம், பிடிவாதப்போக்கு மனிதனை ஜாதிகளாக பிரித்தாளும் சூழ்ச்சி என்ற கயமைத் தனங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதற்கு தேசத் தந்தை காந்தியாரின் படுகொலை ஆரம்பித்தது முதல். இந்திய அரசால் மூன்று முறை தடைசெய்யப்பட்டது, அது நடத்திய கலவரங்கள் மதவெறியை பரப்புவது, சித்தாந்தங்களில் நேர்மையற்ற தன்மை, ஜாதி மத மோதல்களை தூண்டிவிடுவது, தன்னுடைய நிழல் இயக்கங்களை தோற்றுவித்து அதை தூண்டிவிட்டு சிறுபான்மை சமுகங்களின் மீது ஏவிவிட்டு தான் தப்பித்துக் கொள்வது, இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாமல் ஆங்கிலேயர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தது, சுதந்திரக் கொடியை இன்று வரை அங்கீகரிக்காதது, நாதுராம்கோட்சேவின் அஸ்தியை கங்கையில் கரைக்காமல் பூஜை செய்து வருவது – அவை அனைத்தும் செய்தும் நாளது வரை உறுப்பினர் அட்டையே வைக்காமல் இருப்பது,
உலகத்தில் யூதமதத்தைத் தவிர அனைத்து மதங்களின் மீதும், மதத்தினர் மீதும் வெறுப்பை பல விதங்களில் கக்குவதும் – எவ்வளவோ அடாவடித்தனங்களும், அயோக்கியத்தனங்களும் செய்துகொண்டே ‘தாம் அமைதியான ‘புனித சேவை’ செய்யும் அமைப்பு’ என்று தன்னைத்தானே ஆர்எஸ்எஸ் சொல்லிக்கொள்வது தான் ஹைலைட்!
இன்னும் பற்பல குற்றச்சாட்டுகளும் கடுமையான வார்த்தை பிரயோகங்களும் நாம் சொல்வதில் கிஞ்சிற்றும் பொய்யல்ல என்பதில் அவர்களின் ஆதாரப்பூர்வமான ஏடுகளிலும் செயல்களிலும் நீக்கமற நிறைந்து கிடப்பதோடு அதைவிட்டு வெளியேறியவர்கள் எழுதிய அனைத்து நூல்களிலும் சர்வாதிகார தன்மையை குறிப்பிட்டுள்ளது எங்கும் எதிலும் எப்போதும் தேடி எடுத்துக்கொள்ளலாம்.
எனவே பெரியாரின் திராவிட மாடல் சித்தாந்தமும் அண்ணா எழுதி வெளிப்படுத்திய ஆரிய மாயை. ‘பேச நா இரண்டுடையாய் போற்றி’ என்ற சொற்றொடரும் நம்முடைய தலையங்கம் எவ்வளவு சரியானவை என்பதை உணர்த்தும்.
சிந்திப்போம்! செயல்படுவோம்!!
நன்றி: ‘தர்கா’ இதழ் – தலையங்கம் (ஜனவரி 2026)
