வீட்டுவேலை செய்யும் மகளிர் உரிமைகள் தொடர்பான பொதுநல மனுவை விசாரித்தபோது, இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்த கருத்துகள், தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
நீதித்துறையின் தலைவரின் கருத்து முதலாளிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்குச் சாதகமாக உள்ளதாகவும், அரசியலமைப்புச் சட்ட உரிமைகளைத் தாக்குவதாகவும் தொழிலாளர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஜனவரி 29, 2026 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த வீட்டு வேலைகள் செய்யும் பெண்கள் இணைந்து உருவாக்கிய ‘பெண் தொழிலாளர்கள் சங்கம் vs இந்திய ஒன்றியம்’ என்ற வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி பின்வரும் கருத்துகளை முன்வைத்தது பெரும் பிரச்சினையாகியுள்ளது.
‘‘நாட்டின் தொழில்துறை வளர்ச்சி மந்தமடைந்ததற்குத் தொழிற்சங்கங்களும், அதன் தலைவர்களுமே பெருமளவு பொறுப்பு!”. தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் எதிர்க்கின்றன; இது முதலீடுகளைத் தடுக்கிறது. வீட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது, நடுத்தர வர்க்கத்தினர் வேலை வழங்குவதைக் குறைக்க வழிவகுக்கும், இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் பாதிக்கப்படும்’’ என்று வழக்கின் போக்கு குறித்த கருத்தை தெரிவிக்காமல் பேசியுள்ளார்.
‘இது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தனிப்பட்ட கருத்து– தீர்ப்பு அல்ல’ என்று கூறப்படுகிறது.
இந்திய தொழிற்சங்க மய்யம் இந்தக் கருத்துகளை மிகவும் அபாயகரமானது மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது” என்று கண்டித்துள்ளது. அவர்களின் முக்கிய வாதங்கள்:
தொழில்துறை மந்தநிலைக்குத் தொழிற்சங்கங்கள் தான் காரணம் என்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை. மாறாக, பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்களே அதிக உற்பத்தித் திறனை வழங்குகிறார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19(1)(c)-இன் படி சங்கம் அமைப்பது அடிப்படை உரிமை. தலைமை நீதிபதியின் கருத்து இந்த உரிமையைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
பிப்ரவரி 12, 2026 அன்று நடைபெறவிருந்த நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக இக்கருத்துகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது! இது ‘ஒன்றிய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்களின் (Labour Codes) குரலாகவே ஒலிக்கிறது’ என தொழிற்சங்கங்கள் கருதுகின்றன.
தொழிற்சங்கங்கள் அரசுத் தரவுகளைச் சுட்டிக்காட்டி தலைமை நீதிபதியின் கருத்தை மறுக்கின்றன.
2006-இல் 430 ஆக இருந்த தொழில்துறை தகராறுகள், 2023 செப்டம்பர் நிலவரப்படி வெறும் 30 ஆகக் குறைந்துள்ளன. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இது குறைந்துள்ளது
கடந்த அய்ந்து ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கு நிர்வாக தோல்வி, பணப் பற்றாக்குறை மற்றும் கார்ப்பரேட் கொள்கைகளே காரணமே தவிர, தொழிலாளர் போராட்டங்கள் அல்ல என்பது தொழிற்சங்கத்தின் கருத்தாகும்.
இந்த வழக்கில் தொழிற்சங்கங்கள் கூறிய கருத்துகள் கருத்திலெடுத்துக் கொள்ள வேண்டியவையாகும்.
‘வீட்டுத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் கோரிய இந்த வழக்கில் ெதாழிற்சங்கங்களின் வாதங்கள் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை மய்யமாகக் கொண்டவை.
அரசியலமைப்பு அடிப்படைப் பிரிவுகள் 14 (சமத்துவம்) 21 (வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திர உரிமை) 23 (கட்டாய உழைப்பு மற்றும் மனித விற்பனைத் தடை) ஆகியவை ‘வீட்டுத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உரிமையாக அறிவிக்க உத்தரவிட வேண்டும்’ என வாதிடப்பட்டது.
குறைந்தபட்ச ஊதியச் சட்டம் 1948 மற்றும் 2019 ஊதியக் கோடின் கீழ் வீட்டுத் தொழிலாளர்களை அதிகாரப் பூர்வ அட்டவணையில் சேர்க்க வேண்டும்.
சிங்கப்பூர், அய்ரோப்பிய நாடுகளில் வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. இது இந்தியாவிலும் சாத்தியம் என்பதுதான் தொழிற்சங்கவாதிகள் எடுத்து வைத்த வாதங்களாகும்.
கடைசியாக ‘நமக்கு ஏனிந்த வம்பு’ என்ற தோரணையில் ‘குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது’ என்று கைவிரித்து விட்டது உச்சநீதிமன்றம்.
மாநிலங்கள் தொழிலாளர் புகார்களைப் பரிசீலித்து ஊதியம் மற்றும் நலன் தொடர்பான வழிகளை உருவாக்க வேண்டும் என்பதுதான் நீதிமன்றத் தீர்ப்பாகும்.
தொழிற்சங்கம், தொழிலாளர்கள் குறித்து சொந்தக் கருத்துகளை ஒருபக்கம் சொல்லி விட்டு இன்னொரு பக்கம் மாநில அரசுகளின் தலையில் கட்டுவது வேடிக்கையானதாகும்!
