திராவிடர் கழக மாநாடுகள் என்றால், ஏதோ கூடிக் கலைபவை அல்ல! திராவிடர் கழக மாநாட்டின் முடிவுகள் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல – எதிர்காலத்திற்குமான கலங்கரை விளக்குகளாகும்!
1929 செங்கற்பட்டு மாநாடு– இன்றும் பேசுபொருளாக இல்லையா? அந்த மாநாட்டை மய்யப்படுத்தி, எத்தனை
பிஎச்.டி.கள் உலா வருகின்றன!
தஞ்சையில் இருபால் இளைஞர்கள் மாநாடு என்பது இந்தக் காலத்திற்கான – பசியாற்றும் உணவுச் சாலையாகும்!
ஒன்றிய பி.ஜே.பி. அரசால் இருபால் மாணவர்களின் கல்விக்கு மிகப்பெரும் சவால்கள்! வேலை வாய்ப்பில் இளைஞர்களை வீழ்த்தும் வெறி கொண்ட சக்தியாக வீறுகொண்டு நிற்கிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு!
சமூகநீதிக்கான சவக் குழியை நாளும் தோண்டிக் கொண்டிருக்கிறது.
உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்று தந்திரமாக நுழைவு வாயில்களைப் பார்ப்பனர்களுக்கு அகலத் திறந்து விட்டுக் கொண்டிருக்கிறது!
இது, ஏதோ தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – நாம் வழிகாட்டப் போவது அகில இந்தியாவுக்குமானது!
திராவிடர் கழகத்தின் அரும்பெரும் முயற்சியால் (42 மாநாடுகள், 16 போராட்டங்கள்) இந்தியா முழுமைக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு கொண்டு வரப்படவில்லையா?
ஜாதி ஒழிப்பானாலும் சரி, சமூகநீதியானாலும் சரி, பெண்ணுரிமையானாலும் சரி, சமத்துவக் கோட்பாடாக இருந்தாலும் சரி, தந்தை பெரியாரின் சிந்தனைகள் – கோட்பாடுகள் அகில இந்தியாவிற்கே தேவையானவைதானே!
எல்லா உரிமை மறுப்புகளையும் பந்தாடப் புறப்படுங்கள் தோழர்களே!
‘‘இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்’’ என்று வீறுகொண்டு
தஞ்சை நோக்கி வாரீர்! வாரீர்!!
இடையில் இருப்பது ஆறு நாள்களே, மறந்துவிடாதீர்! மறந்துவிடாதீர்!!
