‘திராவிட மாடல்’ அரசை – முதலமைச்சரைப் பாராட்டி வாழ்த்துகிறது! குற்றம் சொல்பவர்கள், குறை சொல்பவர்கள் – தாங்கள் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் புலம்புபவர்களே!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” ரூ.3000–மும், கோடை சிறப்புத் தொகுப்பாக ரூ.2000-மும் சேர்த்து மொத்தம் ரூ.5000 மகளிர் வங்கிக் கணக்குகளில் தமிழ்நாடு அரசால் செலுத்தப்பட்டது!
மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000–மாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் அறிவிப்பு!
தாய்க்கழகமான திராவிடர் கழகம் வரவேற்று,

“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”யின் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகை ரூ.3000–மும், கோடை சிறப்புத் தொகுப்பாக ரூ.2000-மும் சேர்த்து மொத்தம் ரூ.5000 மகளிர் வங்கிக் கணக்குகளில் தமிழ்நாடு அரசால் நேற்று (13.2.2026)  செலுத்தப்பட்டுள்ளது.  மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.2000–மாக உயர்த்தப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை தாய்க்கழகமான திராவிடர் கழகம் வரவேற்று,  ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மீண்டும் மீண்டும் நமது பாராட்டு களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. இதைக் குற்றம் சொல்பவர்கள், குறை சொல்பவர்கள் – தாங்கள் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையால் புலம்புபவர்களே என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசும், அதனைத் தலைமையேற்று நடத்துகிற ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும் எவ்வளவு விழிப்போடு ஒவ்வொரு செயலையும் கண்காணித்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நமக்கு வியப்பே ஏற்படுகிறது.

நேற்று (13.2.2026) அதிகாலையிலேயே தமிழ்நாட்டு மகளிருக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி! தங்களது வங்கிக் கணக்கில் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது – எப்படி? ஏன்?  என்று யோசிக்கிறபோது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அதனைத் தொலைக்காட்சி வாயிலாக மகிழ்வுடன் தெளிவுபடுத்தினார்.

ரூ.5000 மகளிர் வங்கிக் கணக்குகளில்
தமிழ்நாடு அரசால் ெலுத்தப்பட்டுள்ளது!

தி.மு.க. கடந்த 2021 தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின்படி மாதந்தோறும் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”யின் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான தொகையும், கோடை சிறப்புத் தொகுப்பாக ரூ.2000-மும் சேர்த்து மொத்தம் ரூ.5000 மகளிர் வங்கிக் கணக்குகளில் தமிழ்நாடு அரசால் செலுத்தப்பட்டுள்ளது.

மாதந்தோறும் தவறாமல் 15 ஆம் தேதி அன்று வழங்கப்படும் இந்தத் தொகை, 15 ஆம் தேதி ஞாயிறு வங்கி விடுமுறை என்பதால், இரு நாட்களுக்கு முன்பே செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்தடுத்த மாதங்களுக்கும் சேர்த்து ஏன் வழங்கப்பட்டது என்பது தான் ‘திராவிட மாடல்’ அரசு விழிப்போடு செயல்படு கிறது என்று நாம் சொன்னதற்கான காரணம்.

உச்சநீதிமன்றத்தில்
வழக்கு ஒன்று தாக்கல்!

நடைபெறவிருக்கும் தேர்தலைக் காரணம் காட்டி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் அஸ்வின் உபாத்யாய் என்பவர் இலவச லேப்டாப், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றுக்கெதிராக வழக்கு ஒன்றைத் தொடுத்திருப்பதாகவும், உச்சநீதிமன்றம் அதனை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

அது மட்டுமல்லாமல், தேர்தல் தேதியை அறிவித்து, அதன் மூலம் இத்தகைய திட்டங்களைத் தடுக்கலாம் என்றும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. அவர்களே தடுத்துவிட்டு, “பார்த்தீர்களா.. முன்பு கொடுத்தார்கள். இப்போது கொடுக்கவில்லை” என்று பிரச்சாரம் செய்ய லாம் என்று கருதிக் கொண்டிருந்தார்கள் – அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும்!

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் சேர்த்துச் செய்திருக்கிறது ‘திராவிட மாடல்’ அரசு!

இவற்றையெல்லாம் அறிந்து தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், எதிர்க்கட்சிகளின் கையில் இருக்கும் ஆயுதத்தைப் பறித்தது போல, சிறப்பான இந்தச் செயல்பாடு மூலம் மகளிருக்கு வழங்குவோம் என்று சொன்ன உரிமையை எவரும் தடை செய்ய முடியாத வகையில், கைகளில் கொண்டு சேர்த்து, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் சேர்த்துச் செய்திருக்கிறார்கள். இது ஓர் அரசு எப்படி வருமுன் கணித்து நடக்க வேண்டும் என்பதற்கான பாடமாகும்.

இதைக் குற்றம் சொல்பவர்கள், குறை சொல்பவர்கள் – தாங்கள் ஏமாந்துவிட்டோமே என்ற ஆற்றாமையில் புலம்புபவர்களே! பாஜக கூட்டணியில் உள்ள பீகார் நிதிஷ் குமார் அரசு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் ரூபாய் 10 ஆயிரத்தை மகளிருக்கு வழங்கினார்களே, அப்போதெல்லாம் அதை ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ என்றவர்கள் இப்போது புலம்புவது ஏன்? இத்தனைக்கும் பீகாரில் இப்படி ஒரு திட்டம் கிடையாது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மாதம் தோறும் தேதி தவறா மல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மகளிரை சென்றடைந்து கொண்டிருக்கிறது. அதை முறைப்படி முன்கூட்டியே தந்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டு மகளிர்
அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்!

மகளிர் உரிமை என்று சொன்னது வெற்று வார்த்தை அல்ல! அந்த உரிமையை எப்படியேனும் தருவது தான் ஓர் அரசின் கடமை என்பதை முதலமைச்சர் அவர்களின் இந்த செயல்பாடு உறுதிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை தடை செய்ய நினைப்பவர்களையும், இடையூறு செய்பவர்களையும் தமிழ்நாட்டு மகளிர் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

திராவிடர் கழகம் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது!

அதுமட்டுமல்லாமல் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்ததும், மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்துவோம் என்ற அறிவிப்பும், தேனில் தோய்ந்த பலாச்சுளை போன்ற இனிப்பான அறிவிப்பாகும். மகளிருக்கு உரிமை வழங்கும் இந்த அறிவிப்பை திராவிடர் கழகம் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எப்போதுமே சொன்னதைச் செய்து முடிக்கும் இயக்கம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்; இப்போது அகில இந்தியாவும் அதனை உணர்ந்திருக்கிறது!

எத்தனைத் தடைகள் வந்தாலும் இடையூறுகள் என்றாலும் அவற்றையெல்லாம் தாண்டி பீடு நடை போடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ‘திராவிட மாடல்’ அரசுக்கும், அதன் முதலமைச்சருக்கும் மீண்டும் மீண்டும் நமது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
14.2.2026

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *