கேள்வி : பெங்களூருவில் நடைபெற இருக்கின்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – எழுச்சி மாநாடு (28.02.2026) குறித்து இப்போதே இளைஞர்களிடமும் - மாணவர்களிடமும் உற்சாகமும், உத்வேகமும் காணப்படுவது தந்தை பெரியார் கொள்கைக்கு உரம் சேர்ப்பதாக அமையுமா?
– மு.கவுதம், பெங்களூரு
பதில் : மும்பை திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகத்துடன் இணைந்து அண்மையில் நடத்திய, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – மாநாடு மராத்தியத்தில் வரலாறு படைத்தது போல, கருநாடகத்திலும் மூன்று மொழிகளில், தமிழ், கன்னடம், ஆங்கில மொழிகளில் ஒரு நாள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற, பொறுப்பாளர்கள் கடுமையாக உழைப்பார்கள் – நிச்சயம் வெற்றி பெறும்.
கேள்வி : பிப்ரவரி-12 அன்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் என்ற வஞ்சகத்தின் தோலை மக்கள் மத்தியில் உரித்துக்காட்டவும், மனு தர்மத்தையும், அர்த்த சாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒன்றிய பி.ஜே.பி. அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பைக் கண்டித்தும் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் திராவிடர் கழகம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு ஆற்றிய எழுச்சி முழக்கங்கள் டில்லி செங்கோட்டைக்குக் கேட்குமா? ஒன்றிய அரசு மறு பரிசீலனை செய்யுமா?
– ஜெ.இராஜன், கிழக்கு தாம்பரம்
பதில் : மக்கள் மன்றத்தின் எழுச்சி முன் எந்த ஆட்சியும் வளைந்துதான் ஆக வேண்டும். வன்மம், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு இறுதி வெற்றி எப்போதும் கிடையாது!
கேள்வி : “பெண்கள் மேம்பாட்டுக்கு எப்போதும் துணை நிற்பேன்” என்று ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் நடந்த விழாவில் பேசியிருப்பது, ‘தந்தை பெரியார் கொள்கை மட்டுமே பெண்களை தலைநிமிரச் செய்யும்’ என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டல்லவா?
– கா.நளினி, செய்யாறு
பதில் : அதனால்தானே ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மீண்டும் ஆட்சியமைத்து விடக் கூடாதென்று துடியாய்த் துடிக்கின்றார்கள்,
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அவற்றினுடைய திரிசூல வளைவு நிர்ப்பந்தித்து அடகு வைக்கப்பட்டுள்ள கூட்டணியில் சேர்ந்தவர்கள் – ஊடக வெளிச் சத்திலும் உலா வருகின்றனர். மீண்டும் அவரே முதலமைச்சர் ஆவார் பெரும் தனிப் பலத்தோடு!
கேள்வி : ‘மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி காலதாமதத்துக்கு தி.மு.க. அரசுதான் காரணம்’ என்று பா.ஜனதா மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருக்கும் குற்றச்சாட்டை மக்கள் நம்புவார்களா?
– ப.தங்கம், திருச்சி
பதில் : அரை வேக்காட்டுக்காரரின் அபத்த உளறல் அது!
கேள்வி : திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மகளிர் உரிமைத் தொகை, இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை பெண்களுக்கு வாரி வழங்கி இருக்கும் நிலையில், அவை வருகின்ற (2026) சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு துணை நிற்குமா?
-ஆர்.கலைவாணி, மேடவாக்கம்
பதில் : நிச்சயம். நமது மகளிர் தங்களது பேராதரவினைத் தந்து, பயனடைவர் என்பது உறுதி!
கேள்வி : நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி அவர்களுக்குப் பேச அனுமதி மறுத்ததை அடுத்து, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முடிவு செய்திருப்பதற்கு உரிய பலன் கிட்டுமா?
– இர.கார்த்தி, புது டில்லி
பதில் : எதிர்ப்பை உலகறியச் செய்யும் உத்திதான் அது. வெற்றி வாய்ப்பில்லாதெனினும், அப்பதவியாளர் போக்கை உலகறியச் செய்யும் ஒரு முறை – ஜனநாயக வழிமுறைப்படி! பலன் உலகறியச் செய்வதுதான்!
கேள்வி : “வாழ்க்கை உண்மையில் எளிமையானது, ஆனால் நாம்தான் அதனை சிக்கலாக்கிக் கொள்கிறோம்” என்று சீன அறிஞர் கன்பூசியஸ் கூறும் கருத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
– அ.மணி, அம்பத்தூர்.
பதில் : சீனப் பேரறிஞர் கன்பூசியஸ் கருத்து 200 சதவிகிதம் உண்மை. தேவையற்ற மனக்குழப்பம், பலரது மகிழ்ச்சியைக் களவாடி வருகிறது!
கேள்வி : “தாய்மொழியில் திறமை வேண்டும். அதேநேரத்தில் ஆங்கிலத்திலும் தங்கள் ஆற்றலை வளர்த்துக்கொண்டால் உள்நாட்டு நிறுவனங்களில் மட்டுமல்லாமல், வெளிநாட்டு நிறுவனங்களிலும் கோலோச்ச முடியும்” என்று கருநாடக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் எம்.சி.சுதாகர் துணிச்சலாகக் கூறுகிறாரே?
– பொ.சுமதி, கோவை.
பதில் : நூற்றுக்கு நூறு சரியானது; உண்மையிலும் கூட!
கேள்வி : தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 1.30 லட்சம் தூய்மைப் பணியாளர்களுக்கு முதல்வரின் உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்திருப்பது முதலமைச்சரின் தாயுள்ளத்தைப் பறைசாற்றுகிறது அல்லவா?
– ந.திருநாவுக்கரசு, திருவள்ளூர்.
பதில் : மனிதநேய மக்களாட்சிக்கு மறு பெயரே ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி என்ற குரல், தமிழ்நாட்டு மக்கள் பெரும்பாலோரிடமிருந்து கேட்கிறதே!
கேள்வி : இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பிறகு பா. ஜனதா கட்சியின் முதலமைச்சராக யும்னம் கெம்சந்த் சிங் பதவியேற்ற மறுநாளே வன்முறை வெடித்திருப்பது எதைக் காட்டுகிறது?
– ம.சந்தானம், வெங்கோடு
பதில் : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஒன்றிய ஆட்சி எப்படித் திறனற்ற, மக்கள் இசைவினைப் பெற முடியாத ஆட்சியாக உள்ளது என்ற உண்மைக்கு உரைகல்லாகி உணர்த்துகிறது.
