இத்தாலியின் கிராட்டா டெல்லா மொனாக்கா குகையில் அண்மையில் மானுடவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டன. மத்திய தரைக்கடல் பகுதிகளில் தொல்லியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மாக்ஸ் பிளான்க் ஹார்வர்டு ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் ஃபிரான்சிஸ்கோ ஃபொன்டானி தலைமையில் நடத்தப்பட்ட இந்த தனித்துவ ஆராய்ச்சியில் சுமார் 3,700 ஆண்டுகள் பழமையாக மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
தெற்கு இத்தாலியின் பொலின்னோ மாசிஃப் மலை கடல் மட்டத்திலிருந்து 600 கி.மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கு தான் கிரட்டா டெல்லா மொனாகோ குகை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு ஆராய்ச்சிக்குச் சென்றவர்களுக்கு முதற்கட்டமாக அங்கு கரித்துண்டுகள், சடங்குகள் செய்யப்பட்ட சில பொருட்கள், எலும்புகள் மற்றும் சில கனிமப் படிமங்களும் கிடைத்தன. தொடக்கத்தில் இது மனிதர்கள் வாழ்ந்த குகை என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அதுவொரு கல்லறைக் குகை என்பதை கடந்த 2025 டிசம்பரில் தான் கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் தோண்டிப்பார்த்த போது செம்புகால நாகரிக மனிதர்களுடைய டிஎன்ஏவில் இவர்கள் கிமு.1780 முதல் 1380 வரையிலான ஆண்டுகளுள் வாழ்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டது. இங்கு மொத்தமாக 23 பேருடைய எலும்புக்கூடுகள் தோண்டியெடுக்கப்பட்டதில் அனைவரும் ஒரே கூட்டத்தைச் சார்ந்தவரில்லை என்பதும், 10 பெண்களும் 8 ஆண்களும் போக மீதமுள்ளவை பதின்ம வயதுச்சிறுவர்களுடையது என்பதும் தெரியவந்தது.
டிஎன்ஏ பரிசோதனையில் அதில் சிலர் சிசிலியிலிருந்தும், சிலர் வடக்கு இத்தாலியிலிருந்தும் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். இவர்கள் அய்ரோப்பிய வேட்டையாடிகள், அனடோலியா வேளாண்மை சமூகம் மற்றும் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்த கலப்பினத்தவராவர். கிமு.3,700 ஆண்டுகளுக்கு முந்தைய அய்ரோப்பியர்களுக்கு மத்திய ஆசிய கலப்பின டிஎன்ஏவும் உடலில் பதிவாகியுள்ளது வியப்பளிப்பதாக ஆராய்ச்சியாளர் அலிஸா மிட்னிக் கருத்துத் தெரிவிக்கிறார்.

இதில் பதின்ம வயதுச் சிறுவனுடைய டிஎன்ஏவில் அவனது தாத்தா தான் அவனுக்கு தந்தையாகவும் இருந்திருக்கிறார். அதாவது அவனது அம்மாவும், அவனது தந்தையும் அப்பா – மகள் உறவு கொண்டவர்கள் என்பதும், அந்த காலகட்டத்தில் ஒரே குடும்பத்தினருடன் உறவு வைத்துக்கொள்வது இயல்பானதாக இருந்திருக்கலாம் என அனுமானிக்கின்றனர்.
“பெற்ற மகளுடன் உறவு வைத்து அவள் மூலம் மற்றொரு குழந்தை பெற்றுக்கொண்டது கட்டாயத்தில் நடந்த ஒன்றா அல்லது இது அவர்களது மரபுகளில் தொடர்ந்து வந்த ஒன்றா” என்பதை உறுதி செய்ய விரிவான ஆராய்ச்சிகள் தேவை என்கிறது இக்குழு. எகிப்திலும், ரோமானியர்களிடமும் ராஜ இரத்தம் வெளியே செல்லக் கூடாது; அரச பதவி தங்கள் குடும்பத்திலேயே தொடர வேண்டும் என்பதற்காக சொந்த அக்கா – தம்பி திருமணம், அம்மா – மகன் உறவெல்லாம் இருந்துள்ளதை நாம் வரலாறுகளில் படிக்கிறோம். மானுடவியலில், மனிதர்கள் சமூக வரையறைகளுக்கு உட்படாத காலத்தில் இத்தகைய பழக்கங்கள் இருந்திருக்க வாய்ப்புண்டு. கிராட்டா டெல்லா மொனாக்கா ஆய்வும் அதையே மெய்ப்பிப்பதாக உள்ளது.
எனினும், வரலாற்றுக்கு முந்தைய கால அய்ரோப்பாவில் இப்படியொரு தடயம் கிடைப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
– எஸ். நஸ்ரத் ரோஸி
