எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் என் நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவர் எங்கள் வீட்டிற்கு வருவது அதுவே முதல் முறை. கொடைக்கானலைச் சேர்ந்த அவர், மதுரைக்கு அவ்வப்போது வந்து செல்வார். வேலை முடிந்ததும் மின்னல் வேகத்தில் மலைக்கு திரும்பிவிடுவார்.
சில சமயங்களில் இரவு நேரங்களில் பேருந்து இருக்காது என்பதால், தனது மோட்டார் சைக்கிளை வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு பேருந்தில் மதுரைக்கு வருவார். கூடுதல் உற்சாகம் இருக்கும் நாட்களில், அவரது இருசக்கர வாகனமே மதுரையை பார்த்து ரசித்து விட்டு மலைக்கு திரும்பும்.
நான் கூப்பிட்ட போது எல்லாம் வராதவர் வந்திருக்கிறார், வாராது வந்த மாமணி வந்ததுபோல்… எனக்கு ஒன்றுமே புரியவில்லை. “இல்ல… முத்து… என் மகனுக்கு திருமணம் நிச்சயமாயிடுச்சு. மண்டபம் பார்க்க வந்தோம். எல்லா இடமும் புக்காயிடுச்சு. கடைசியாக திருப்பரங்குன்றத்தில் உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற மண்டபம் தான் கிடைச்சிச்சு. நீங்களும் கொஞ்சம் வந்தீங்கன்னா பேசி ஒரு அட்வான்ஸ் குடுத்திடலாம்” என்றார்.
என் துணைவி சோபியா என்னை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தார். மாப்பிள்ளை மதுரைக்காரர் இல்லை, பெண் வீட்டாரும் மதுரை இல்லை என்றதும், அந்த சிரிப்பின் அர்த்தம் வேறு ஒன்றுமில்லை, “கைபுள்ள உன்னைய இனி புடிக்க முடியாது” என்பதே..
மேளம், அழைப்பிதழ், திருமண மாலைகள், நான்கு வேளை உணவு, தங்கும் விடுதிகள், தாம்பூலப் பை—எல்லாமே “முத்துமயமாக” இருந்தது. இடையில் பல குழப்பங்கள், புரிதல் குளறுபடிகள் இருந்தாலும், இதையெல்லாம் நான் இழுத்துப் போட்டு செய்து கொடுத்ததற்கான முக்கிய காரணம் அவர் என் நண்பர் என்பதல்ல. அதைவிட முக்கியம் — இது ஒரு காதல் திருமணம். மதங்களை கடந்த திருமணம்.
மதுரையில் இந்து முறைப்படி ஒரு திருமணம், நாரோயிலில் கிறித்துவ முறைப்படி மீண்டும் ஒரு வரவேற்பு — பொதுவாக சடங்கு, சம்பிரதாயங்கள் என எதிலும் எனக்கு உடன்பாடில்லை. சிறிதளவு இடர்பாடாகத் தோன்றிய விஷயங்கள் நடந்த போதிலும், மதங்களை கடந்த புதிய உறவுகள் மலர்வதே எனக்கு முக்கியமாகத் தோன்றியது. மதுரையில் அந்த திருமண ஏற்பாடுகள் உண்மையிலேயே இயல்பாக மிக அழகாக அமைந்தன.
முதல் நாள் மதியமே உணவை பற்றி பாராட்டுகள் குவிந்தன, இரவு உணவு ஒரு கொண்டாட்டமாகவே மாறியதும் எனக்கு பெரும் ஆறுதலாக இருந்தது, அனுபவத்தின் பயனாக இத்தனை பாராட்டுகள் என்பது அலுப்பை எல்லாம் போக்கியது.
முதல் நாள் எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். அடுத்த நாள் அதிகாலை மீண்டும் சென்று, எல்லாம் சரியாக செல்கிறதா என்று பார்த்துவிட்டு வந்தேன். அப்போது திடீரென “ஒரு குடை வேண்டும்” என்றார்கள். எங்கள் வீட்டில் இருந்த குடையை கொடுத்து வந்தேன்.
மேளதாளத்துடன் பெரும் கூட்டம். திருமண மண்டபம் நிரம்பி வழிந்தது. இந்த சடங்குகள் நடக்கும் இடங்களில் நான் நிற்பதில்லை, ஆகையால் நான் மண்டபத்தின் முதலாளியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். நிர்வாக அறையில் இருந்து பார்த்தால், அது ஒரு கண்ட்ரோல் ரூம் போல—முழு மண்டபமும் கண்ணுக்குத் தெரியும்.
தாலி கட்டும் நேரம் நெருங்கியதை, மேளத்தின் தாளமே எங்களுக்கு உணர்த்தியது.
ஒரு இந்து இளைஞன், தனது கிறித்துவ காதலியின் கழுத்தில் தாலி கட்டும் தருணம் அது.
மண்டபத்தின் முதலாளி திடீரென ஊழியரை பார்த்து,
“டேய், வேகமா ஓடி ஜெனரேட்டர் ரூம்ல ஆட்டோமாட்டிக் ஸ்விட்ச் போடு” என்றார்.
உடனே அந்த ஊழியர்,
“சார், மண்டபம் உறுதி செய்யும்போது ஜெனரேட்டர் வேண்டாம்னு தானே சொன்னாங்க” என்றார்.
“ஆமாண்டா, அது எல்லாம் எனக்கு தெரியும். இருந்தாலும் நான் சொல்றதை இப்போ செய்யப் போறியா, இல்லையா?” என்று உரக்க ஒரு அதட்டு போட்டதும், அவர் தலைதெறிக்க ஓடினார்.
தாலி கட்டி முடிந்ததும், அவன் மீண்டும் நிர்வாக அறைக்கு வந்தான்.
அப்போது மண்டபத்தின் முதலாளி சொன்னார்:
“இங்க பாருடா… இந்த குழந்தைங்க இப்பதான் புதுசா ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கப் போறாங்க. தாலி கட்டுற நேரத்துல கரண்ட் கட் ஆச்சுனு வச்சிக்கே… அபசகுனம், இதுனு தேவையில்லாம பேசுவானுங்க. பாவம் குழந்தைங்க. அவங்க நல்லா இருக்கணும் டா. ஜெனரேட்டர் போட்டதால என்ன குறைஞ்சு போயிடுச்சு நமக்கு?”
அந்த மண்டப முதலாளி முபாரக்கை நான் பல நாட்களாக அறிந்திருந்தேன். ஆனால் அந்த நாளில்தான் அவரை கட்டித்தழுவினேன்.
கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. பேச வார்த்தைகள் இல்லாமல், அமைதியாக அங்கிருந்து வெளியேறினேன்.
பொதுவாக இந்த சமூகம் காதலுக்கு எதிரானது, அதுவும் ஜாதி-மதங்களை கடந்த காதல் என்றால் அதனை எப்படியாகிலும் தலையில் குட்டியபடி இருக்கும், சிறுமைப்படுத்த முயலும், அதனை ஒழித்துகட்ட ஏதேனும் காரணங்களை தேடும் ஆனால் அப்படியான ஒரு குறுகிய சமூகத்தில் தான் முபாரக்களும் வாழ்கிறார்கள் என்பது எத்தனை பெரிய நம்பிக்கை.
இரண்டு மாதங்களாக பார்த்த வேலைக்கு இந்த ஒரு வரி போதுமானது, ஒரு முபாரக் போதுமானது. திருப்பரங்குன்றம் மதங்களை கடந்த நிலம் என்பதற்கு உங்களுக்கு இன்னும் ஒரு ஆயிரம் உதாரணங்களை கொடுக்க அந்த ஊரும் மனிதர்களும் காத்திருக்கிறார்கள்.
