மதுரை எய்ம்ஸ் ஊசலாடும் நம்பிக்கை! வரும் ஆனா வராது!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பாணன்

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு, மதுரையின் தோப்பூரில் பிரதமர் மோடி பிரம்மாண்டமாக அடிக்கல் நாட்டியபோது, தென் தமிழ்நாடே திருவிழாக் கோலம் பூண்டது. “இனி டில்லி எய்ம்ஸ் போல மதுரையிலும் உயர்தர சிகிச்சை கிடைக்கும்” என மக்கள் நம்பினார்கள். ஆனால், இன்று 2026-லும் அந்தப் பகுதியில் கட்டடம் எழும்புவதை விட, அரசியல் அறிக்கைகளே அதிகம் எழும்பி வருகின்றன.

‘சிங்கிள் செங்கல்’ அரசியலும்… 3D மாடலும்!

தமிழ்நாட்டு அரசியலில் ‘மதுரை எய்ம்ஸ்’ என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது உதயநிதி ஸ்டாலின் கையில் ஏந்திய அந்த ஒரு செங்கல் தான். 2021 தேர்தலின் போது அந்த ஒரு செங்கல் ஏற்படுத்திய தாக்கம், டில்லி வரை அதிர்வுகளை உண்டாக்கியது. அதன் பிறகு, “கட்டுமானம் இதோ ஆரம்பிக்கிறது, அதோ ஆரம்பிக்கிறது” என ஒன்றிய அரசு சொல்ல, ஆனால் நிதி இன்றும் வந்தபாடில்லை.  இதனால் சிக்கித் தவித்தது என்னவோ தமிழ்நாடுதான்.

தற்போது 2026இல், “கட்டுமானப் பணிகள் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை முடிந்துவிட்டது, 2027இல் பயன்பாட்டுக்கு வரும்” என்று அறிக்கைகள் வருகின்றன. ஆனால், தேர்தலுக்கு முன்பு திறக்கப்படுமா என்றால், “வரும்… ஆனா வராது” என்ற மர்மம் நீடிக்கிறது.

காலதாமதத்திற்குச் சொல்லப்படும் ‘காரணங்கள்’

  • நிதி நெருக்கடி: மற்ற மாநிலங்களில் ஒன்றிய அரசே நேரடியாக நிதி ஒதுக்கிய நிலையில், மதுரைக்கு மட்டும் ஜப்பானின் ‘ஜெய்கா’ (JICA) நிறுவனத்திடம் கடன் கேட்டு நின்றது முதல் சொதப்பல்.

பொதுவாக கரோனாவில் மருத்துவ சேவைகள் அதுதொடர்பான பணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று உலக நாடுகள் அனைத்தும் செயல்பட்ட நிலையில் ஒன்றிய அரசோ கரோனாவைக் காரணம் காட்டி  ஏற்கெனவே ஒற்றைச் செங்கல்லோடு இருந்த நிலத்தில் வேலி கூட போடாமல் முற்றிலும் முடக்கியது.

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் தற்காலிகமாக எய்ம்ஸ் மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஒரு மருத்துவமனையே இல்லாத இடத்தில் மாணவர்கள் மட்டும் படித்து வருவது, “சமையல் கூடமே இல்லாத ஓட்டலில் மெனு கார்டை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்புவது போல” இருக்கிறது என அந்த மாணவர்களே சமூகவலைதளத்தில் எழுதி புலம்புகின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, எப்படியாவது ஒரு பகுதியைத் திறந்துவிட வேண்டும் என பாஜக தரப்பு துடிக்கிறது. அதாவது “கை அறுவை சிகிச்சை என்றால் மயக்க மருந்து ஒரு இடத்தில் கொடுத்துவிட்டு அறுவை சிகிச்சைக்கு வெட்ட ஒரு இடம், அதனை தையல் போட வேறு இடமா?” என்று மதுரை மக்கள் கேட்கின்றனர்.

“நீங்கள் முழுமையாக முடித்துவிட்டு திறங்கள்; அரைகுறையாகத் திறந்து மேலும் அசிங்கப் படவேண்டாம்” என்று பாஜக கூட்டணியினரே புலம்புகின்றனர்.

அதிலும் சில கூட்டணி பிரமுகர்களே எய்ம்ஸ் விவகாரத்தில் ஏற்கெனவே அசிங்கப்பட்டாகி விட்டது. மேலும் என்ன அசிங்கப்பட இருக்கிறது? என்று மேடைகளிலேயே புலம்பும் அளவிற்கு போய்விட்டது.

முழுமையான சிகிச்சை எப்போது கிடைக்கும் என்பது இப்போதும் ஒரு மில்லியன் டாலர் கேள்விதான்.

“அடிக்கல் நாட்டியாச்சு, செங்கல் எடுத்தாச்சு, இப்போது 3D மாடல் வீடியோவும் வந்தாச்சு… ஆனால், மருத்துவமனை எங்கே?” என்பதுதான் மதுரைக்காரர்களின் ஒரே கேள்வி.  தென் தமிழ்நாட்டு மக்களுக்கு இது உயிர் காக்கும் மருத்துவமனை. இனியாவது “வரும்… ஆனா வராது” கதையை விடுத்து, உண்மையாகவே எய்ம்ஸ் மருத்துவமனை கதவுகள் திறக்கப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

ஞாயிறு மலர்

இங்கே எம்ய்ஸ் ஒன்றை மோடி துவக்கி வைத்து 8 ஆண்டு ஆகிவிட்டது; அதுதான் எங்கே என்று தேடுகிறேன்.

மதுரை எய்ம்ஸ் ஒற்றை செங்கலை
நட்ட பிறகு மோடி அளந்தவைகள்

27 ஜனவரி 2019 அன்று மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மோடி. மதுரையை “தமிழ் சங்கத்தின் இருப்பிடம்” என்றும், ‘புனிதமான தலம்’ என்றும் புகழ்ந்து தனது உரையைத் தொடங்கினார்.

எப்போதும் போல் மேடைக்கேற்ப வேடமிடும் கூத்துக்காரரைப் போல் தமிழ்நாட்டிற்கு வந்ததும் வேட்டி சட்டை அணிந்து கொண்டு தமிழில் ‘வணக்கம்’ என்று துவக்கினார்.

“டில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை உயர்தர சிகிச்சைக்கு ஒரு அடையாளமாகத் திகழ்வது போல, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்கும். இது ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ (Ek Bharat Shreshtha Bharat) என்ற தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றாகும்.

மலிவான மற்றும் தரமான சிகிச்சை: ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவான விலையில் உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதே அரசின் நோக்கம்.

அப்போது தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி. ஆகையால், அந்த அரசைப் பாராட்டி  வைக்க, 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு 2023-லேயே அதைச் சாதிக்க இலக்கு வைத்திருப்பதாகப் பாராட்டிப் பேசினார்.

உலகத்தரம் என்பது எய்ம்ஸ் மருத்துவமனையால் கிடைக்கப் போகிறது என்ற மாயையை உருவாக்கினார் மோடி. ஆனால், உண்மையில் ஆசியாவின் மருத்துவ தலைநகரம் என்ற பெருமையை சென்னை – தமிழ்நாடு பெற்றுள்ளது.

உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள்

தமிழ்நாட்டில் உள்ள பல தனியார் மருத்துவமனைகள், மாவட்டம் தோறும் உள்ள அரசு மருத்துவமனைகள், பன்னாட்டு தரம் வாய்ந்தவைகளாக உள்ளன. இவை உலகளாவிய தரச் சான்றிதழ்களை (JCI மற்றும் NABH) பெற்றுள்ளன.

குறைவான சிகிச்சைச் செலவு

மேற்கத்திய நாடுகளுடன் (அமெரிக்கா, லண்டன்) ஒப்பிடும்போது, சென்னையில் சிகிச்சைக்கான செலவு மிகக் குறைவு. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் ஒரு இதய அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் தொகையிலேயே இங்கு உயர்தர சிகிச்சை கிடைக்கிறது.

சிறந்த மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்பம்

உலகிலேயே மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களும், கதிர்வீச்சு மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை போன்ற அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பங்களும் சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் ஒரு அறுவை சிகிச்சைக்குப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருக்கும். ஆனால், சென்னையில் மருத்துவப் பயனாளிகள் வந்தவுடன் விரைவாகச் சிகிச்சையைத் தொடங்க முடியும்.

மருத்துவ விசா (Medical Visa): வெளிநாட்டவர்கள் எளிதில் மருத்துவ விசா பெறுவதற்கான வசதிகள் உள்ளன.

போக்குவரத்து: பன்னாட்டு விமான நிலையம் மற்றும் நகருக்குள் இருக்கும் சிறப்பான போக்குவரத்து வசதிகள் வெளிநாட்டு மருத்துவப் பயனாளிகளுக்குப் பேருதவியாக இருக்கின்றன.

இந்தியாவிற்கு வரும் மருத்துவச் சுற்றுலாப் பயணிகளில் சுமார் 40 சதவீதம் பேர் சென்னையைத் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 300 வெளிநாட்டு மருத்துவப் பயனாளிகள் வரை சென்னைக்கு வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் (2020-2022), சென்னை பன்னாட்டு விமான நிலையம் ஒரு மிக முக்கியமான மருத்துவ மய்யமாகச் செயல்பட்டது.

சிறப்பு மருத்துவ விமானங்கள்

முழு அடைப்பு காலத்தில் பன்னாட்டுப் போக்குவரத்து தடைபட்டிருந்த போதும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டு மருத்துவப் பயனாளிகளுக்காகச் சிறப்பு ஏர்-ஆம்புலன்ஸ் விமானங்கள் சென்னைக்கு அனுமதிக்கப்பட்டன.

மாலத்தீவு, இலங்கை, வங்கதேசம், ஓமன் மற்றும் அய்க்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மருத்துவப் பயனாளிகள் இதய அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அவசரப் புற்றுநோய் சிகிச்சைக்காகச் சென்னை வந்தனர்.

மாலத்தீவு அரசாங்கத்துடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், அங்கிருந்து மருத்துவப் பயனாளிகள் இந்தியாவுக்கு (சென்னை மற்றும் கொச்சி) சிகிச்சைக்காகச் சிறப்பு அனுமதி பெற்று வந்தனர்.

கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தச் சிறப்பு விமானங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. மருத்துவ சிகிச்சைக்காக வந்த பயணிகளுக்குத் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை அளித்தது. அவர்கள் நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவோ அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவோ அனுமதி வழங்கப்பட்டது.

பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தின் போது சென்னைக்கு வந்த பயணிகளுக்காக வாரத்திற்குச் சராசரியாக 5 முதல் 10 விமானங்கள். மாதம் ஒன்றுக்குச் சுமார் 100-150 வெளிநாட்டு மருத்துவப் பயனாளிகள்  மற்றும் 402 மெட்ரிக் டன் மருத்துவ உபகரணங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தன.

ஓமிக்ரான் மற்றும் பிற அலைகளின் போது, சிகிச்சைக்காக வருபவர்களுக்கெனத் தனிப்பாதைகள் அமைக்கப்பட்டன.

அய்க்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூரில் இருந்து வந்த முதல் சில விமானங்களில் 20 சதவீதப் பயணிகள் அவசர மருத்துவத் தேவைக்காக (கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்கள்) வந்தனர்.

2021 (இரண்டாம் அலை): இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிய போது, சென்னை விமான நிலையம் வழியாகச் சிங்கப்பூர் மற்றும் குவைத்திலிருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சிலிண்டர்கள் அதிகளவில் வந்தன.

2022 (மீட்பு காலம்): ஜனவரி மாதத்தில் ஓமிக்ரான் பரவலின் போது, கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டாலும், வளைகுடா நாடுகளில் இருந்து சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சிகிச்சைக்காகச் சென்னை வந்ததாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையின் மருத்துவக் கட்டமைப்பு காரணமாகச் சில குறிப்பிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் அதிக ஆர்வம் காட்டினர்.

மாலத்தீவு: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய நோய்கள். (அரசாங்க ஒப்பந்தம் மூலம் அதிக விமானப் போக்குவரத்து நடந்தது).

வங்கதேசம்: புற்றுநோய் சிகிச்சை மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை.

ஓமன் & அய்க்கிய அரபு அமீரகம்: முதியோர் பராமரிப்பு மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள்.

இலங்கை: அவசர இதய அறுவை சிகிச்சைகள் மற்றும் கண் மருத்துவச் சிகிச்சை.

கோவிட் உச்சத்தில் இருந்தபோது, பொதுவான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், தனியார் ஏர்-ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் சென்னையில் மும்முரமாகச் செயல்பட்டன. மருத்துவப் பயனாளிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்துகள் மூலம் கொண்டு வந்தன. குறிப்பாக, தென்னாப்பிரிக்கா மற்றும் அய்ரோப்பாவிலிருந்து கூட சென்னைக்குச் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *