வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் எழுச்சி ஆர்ப்பாட்டம்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒன்றிய பிஜேபி அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை ஓரவஞ்சனையின் உச்ச கட்டமாகும்.

டபுள் என்ஜின் மாநிலங்களின் கண்களுக்கு வெண்ணெய்யும் மற்ற மாநிலங்களின் கண்களுக்குச் சுண்ணாம்பும் வைக்கப்பட்டுள்ளது.

அதுவும் தமிழ்நாடு மிகப் பெரிய அளவில் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் தி.மு.க. ஒருங்கிணைப்பில் தோழமைக் கட்சிகளின் ஆர்ப்பாட்டம் வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

இது ஏதோ சில அரசியல் கட்சிகள் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் என்று சொல்லி குறுக்கிவிட முடியாது. ஒட்டு மொத்தமான தமிழ்நாடே ஒன்றிய பிஜேபி அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளதால், இது தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியை – ஒன்றிய பிஜேபி அரசு, அதற்குத் துணை போகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் மீதான எதிர்ப்பைக் காட்டக் கூடிய ஒன்றாகும். அந்த எழுச்சியையும், வெறுப்பையும் தமிழ்நாடு தழுவிய அளவில் காண முடிந்தது.

16ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு கவலைக்குரியதாகும்.

தமிழ்நாட்டின் ஜி.எஸ்.டி.பி. (GSDP) பங்களிப்பு 9.14 விழுக்காடாகும். ஆனால் ஒன்றிய அரசு அளித்திருப்பதோ 4.1 விழுக்காடாகும்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கருத்துக் கூறுகையில் ‘மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ.5000 கோடி கூடுதல் இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

16ஆவது நிதிக் குழு தனது அறிக்கையில் இந்தியாவிலேயே பொதுத் துறை நிறுவனங்கள் அதிக நட்டத்தை சந்திக்கும் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாட்டை அடையாளப்படுத்தியுள்ளது.

நிதிக் குழுவிடம் தமிழ்நாடு அரசு முன் வைத்த முக்கிய கோரிக்கைகள் :

1) மத்திய வரிகளில் மாநிலங்களுக்கான பங்கை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும்.

(2) 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பதில், குடும்பக் கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களைத் தண்டிக்காத வகையில், 1971 கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

(3) அதிக நகரப்புறங்களைக் கொண்ட மாநிலம் என்பதால் அதற்கான சிறப்பு நிதியாக 10 விழுக்காடு வழங்கப்பட வேண்டும்.

(4) தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் அதிக வரி வருவாயை ஒன்றிய அரசுக்கு வழங்கினாலும், நிதிப் பகிர்வில் பின் தங்கிய மாநிலங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதால் தமிழ்நாடு தொடர்ந்து ‘‘செயல் திறனுக்கான தண்டனையை’’ அனுபவிப்பது ஏற்புடைத்தது தானா?

ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்புத் திட்ட நிதி ரூ.3112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காதது எத்தகைய கொடுமை!

இயற்கைப் பேரிடர்கள் குறிப்பாக மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களின் வெள்ளப் பாதிப்புகளுக்குத் தமிழ்நாடு அரசு கேட்ட ரூ.37,907 கோடிக்குப் பதில் ஒன்றிய அரசு அளித்த நிதி ரூ.276.10 கோடி என்பது எவ்வளவு இளக்காரம்!

தமிழ்நாட்டில் சுமார் 3000 கி.மீ. தூரத்திற்குப் புதிய ரயில் வழித்தடங்களுக்கான ஆய்வுகள் முடிக்கப்பட்டும், அவை செயல்படுத்தப்படவில்லை.

2014 முதல் தேசிய அளவில் ரயில்வே பட்ஜெட் 25 மடங்கு அதிகரித்துள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு ஏழரை மடங்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாறாக குஜராத் (29 மடங்கு) டெல்லி (27 மடங்கு) போன்ற மாநிலங்களுக்கு நிதி வாரி வழங்கப்பட்டுள்ளது.

மதுரை மற்றும் கோவை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து எந்தத் தெளிவான அறிவிப்பும் ஒன்றிய அரசிடமிருந்து வெளிவரவில்லை.

தமிழ்நாட்டில் 30க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ் சாலைத் திட்டங்கள் (844கி.மீ) நிலுவையில் உள்ளன.

மொழிப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் சமஸ்கிருத மொழிக்கு ஒன்றிய பிஜேபி அரசு ஒதுக்கிய நிதி (2014–2015, 2024–2025) ரூ.2532.59 கோடி; ஆனால் தமிழுக்கு இந்தக் கால கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.113.48 கோடி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு மொத்தத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.113.48 கோடியாகும்.

இ்வ்வளவுக்கும் இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் தொகை வெறும் 24821 (0.002%)

நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போர் அல்ல – ஆரியர் – திராவிடர் போராட்டமே என்று தந்தை பெரியார் கூறியது (‘விடுதலை’ 22.5.1967) எத்தகைய உண்மை என்பதற்கு இன்னமுமா ஆதாரமும், ஆய்வுகளும் தேவை?

அந்த வகையில் தமிழ்நாடு தழுவிய அளவில் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு பற்றி விளக்கி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நல்ல பாடம் கற்பிக்கும் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *