‘அவலை நினைத்து வெறும் உரலை இடிக்க’ முனையவேண்டாம்!

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

1952 முதற்கொண்டே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி கிடையாது – இது தமிழ்நாட்டின் தனித்தன்மை!
திட்டமிட்டே சிலர் தி.மு.க. – காங்கிரஸ் நல்லுறவைச் சிதைக்க முயல்கின்றனர்!
கூட்டணி ஆட்சி ஒத்துவராது என்ற முதலமைச்சரின் கருத்து தமிழ்நாட்டின் வரலாறு – ‘‘மக்களின் மனோபாவம்!’’

‘‘கூட்டணி ஆட்சி தமிழ் மண்ணுக்கு ஒத்து வராது’’ என்று முதலமைச்சசர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்து தமிழ்நாட்டின் வரலாறு – தமிழ் மக்களின் மனோபாவம் – திட்டமிட்டே சிலர் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியைக் குலைக்க முயலுகின்றனர். இதில் ஏமாறவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் கடந்த 11.2.2026 அன்று ‘இந்தியா டுடே’ நடத்திய அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில்,

‘‘ராகுல் காந்தியைப் பொறுத்தவரை அரசியலைத் தாண்டி ஒரு சகோதரராக என்னைப் பார்க்கிறார். ஒரு குடும்ப உறுப்பினராக அவர் என்னைக் கருதுகிறார். நானும், அவரை அப்படியே கருதுகிறேன்.

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பதுபோல் இல்லை. சிலர் பிம்பங்களை ஏற்படுத்துகின்றனர் – நாங்கள் நன்றாக இருக்கிறோம்.

ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது என்பது எங்களுக்குத் தெரியும். அது அவர்களுக்கும் தெரியும். சிலர் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தலாம் என்று ‘திட்டமிட்டுச் சதி’ செய்கிறார்கள். அதைப்பற்றி நாங்களும் கவலைப்படவில்லை – அவர்களும் கவலைப்படவில்லை’’

என்று கூறியுள்ள கருத்து, அவருடைய கருத்து மட்டுமல்ல! தி.மு.க. கூட்டணியில், கொள்கை அடிப்ப டையில் இணைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் பலரும், குழப்பத்திற்குச் சற்றும் இடந்தராது, நாட்டை மதவெறி, ஜாதி வெறி, பாசிச வெறிகளிலிருந்துக் காப்பாற்றி, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, ‘அனைவருக்கும் அனைத்தும்’ தரும் மதச்சார்பற்ற சமதர்ம ஆட்சியை மீண்டும் அமைப்பதை, குறுக்கு வழிகளில் தடுக்கத் திட்டமிடும் தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் வியூகங்களை முறியடிக்க ஒன்றுபட்டு, ஓரணியில் திரண்டு, தமிழ்நாட்டையும், இந்தியாவையும் காப்பற்ற வேண்டிய இந்தத் தருணத்தில்,

அம்பலத்திற்கு வந்துவிட்டது!

திடீரென்று சிலர், திட்டமிட்டே தி.மு.க. கூட்டணி – காங்கிரஸ் நல்லுறவைச் சிதைக்கவும், கொள்கை எதிரிகளுக்கு மறைமுகமாக உதவிடும் நிலையிலும், ஒரு தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி, ஊடகங்களுக்குத் ‘தீனி’ போட்டுக் கொண்டிருப்பது ஏற்கத்தக்கது அல்ல. அதுமட்டுமல்லாது, இதில் ‘ஆரிய மாயை’ உள்ளே புகுந்து தனது திருவிளையாடலைத் திட்டமிட்டே நடத்தி வருவது அம்பலத்திற்கே வந்துவிட்டது! இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

மக்களின் மனோபாவத்தை அறிந்தே
கூறப்படும் முதிர்ச்சியான ஒன்று!

‘ஒத்து வராது’ என்று முதலமைச்சர், தி.மு.க. கூட்டணியின் தலைவர் கூறியிருப்பது, தமிழ்நாட்டு அரசியல் வரலாறு, மண்ணின் – மக்களின் மனோ பாவத்தை (Soil Psychology) அறிந்தே கூறப்படும் முதிர்ச்சியான கருத்துரையாகும்!

முன்பு, கலைஞர் ஆட்சிக் காலத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்ததைச் சுட்டிக்காட்டும் அவர்கள், ஒன்றை மறந்துவிட்டார்கள். காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது ஏன்? தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், கூட்டணி ஆட்சி ஏற்பட்டதே இல்லை என்பதால்தான். எடுத்துக்காட்டாக 1952 முதல்  தேர்தல் முடிந்து, காங்கிரஸ் கட்சிக்குப் போதிய அறுதிப் பெரும்பான்மை கிட்டாதபோது, ‘பெரும்பான்மையான தனித்த கட்சி’ என்று காரணம் கூறி, காங்கிரசை ஆட்சி அமைக்க ஆளுநர்மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆச்சாரியார் – மேலவை நியமன உறுப்பினராகி, முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தபோது, தங்களுக்குப் போதிய பலம் ஏற்பட, காங்கிரசை எதிர்த்து 6 இடங்களில் வென்ற மாணிக்கவேலு (நாயக்கர்) கட்சியான ‘காமன் வீல்’ (சைக்கிள் பெட்டிச் சின்னம்) கட்சியை காங்கிரசுடன் இழுத்து, இணைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தியது.

தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் கடுமையாக எதிர்த்ததால்…

ஆச்சாரியார் (ராஜாஜி) ஆட்சி முழுமையாக 2 ஆண்டுகள்கூட நடைபெறாத நிலையில், அவரது குலக்கல்வித் திட்டத்தைத் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் கடுமையாக எதிர்த்ததால், பதவியை இராஜினாமா செய்து வெளியேறிய நிலை ஏற்பட்டது 1951 இல்.

தந்தை பெரியார், டாக்டர் வரதராஜூலு (நாயுடு) ஆகிய பெருந்தலைவர்கள் வற்புறுத்த, காமராசர் முதலமைச்சர் ஆக இசைவு தந்து, பதவியேற்றார். அப்போது போதிய பலம் காமராசர் ஆட்சிக்கு இருப்பதற்காக, 20 உறுப்பினர்களைக் கொண்ட எஸ்.எஸ்.இராமசாமி (படையாட்சியார்) அவர்களது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி (Tamilnadu Toilers’ Party)யை காமராசர், காங்கிரஸ் கட்சியில் இணைத்து, எஸ்.எஸ்.இராமசாமி (படையாட்சியார்) அவர்களை உள்ளாட்சித் துறை அமைச்சராக ஆக்கினார்!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே கூட்டணி என்பது கிடையாது. சேர்ந்தவர்களையும் இணைத்த, தனித்த பெரும்பான்மை ஆக இருந்த கட்சி ஆட்சிதான்!

அதுபோல, மக்கள் 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி (கூட்டணிக் கட்சிகள் இருந்த நிலையிலும்) தனித்த ஆட்சிக்கு, தனிப் பெரும்பான்மை கொடுத்தனர்.

காங்கிரஸ் எதிர்க்கட்சியான நிலை, முன்பு தி.மு.க.வுக்குக் கொடுத்திருந்த கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையை காங்கிரசுக்குத் தந்தார்கள்.

அதைப்பற்றி ஒருமுறை தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிட்டபோது, ‘‘தோசையைத் திருப்பிப் போட்டுள்ளார்கள் தமிழ்நாட்டு மக்கள்’’ என்று குறிப்பிட்டார்.

அரசியலில், கூட்டணி மனோபாவம் கேரளா அல்லது மற்ற வட மாநிலங்களில் ஏற்படுவது சாதாரணமாக இருக்கலாம்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் அணுகுமுறை உண்டு. வட மாநிலங்களில் சோஷியல் எஞ்சினியரிங் (social engineering) என்ற பெயரில் பல்வேறு சிறு சிறு ஜாதிகளைக் கொண்டு பா.ஜ.க. செய்த வித்தைகள் தமிழ்நாட்டில் எடுபடாது என்று அவர்களே அதைக் கைவிட்டுவிட்டார்கள். மாநிலங்களுக்கு ஏற்பத் தான் கூட்டணிகளின் முடிவுகள் அமையும்.

எது சரியான முடிவு என்பதை தலைமை (கேப்டன்) தான் முடிவெடுக்க முடியும்.

ஆனால், தமிழ்நாட்டில் அதற்குரிய தேவையோ, நியாயங்களோ இல்லை.

மேலும்,  இப்போது அதைத் திடீரென்று வலியுறுத்தவேண்டிய அவசியம் என்ன?

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனரை, காங்கிரஸ் கட்சி சார்பாக, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தும் முயற்சிகள் – தீவிரமாக அழுத்தம் கொடுத்து செய்யப்பட்டபோது,

கள நிலவரம் அறிந்து, அப்படி அவரை அந்தத் தொகுதி வேட்பாளராக நிறுத்தினால், வெற்றி வாய்ப்பு இருக்காது என்று முதலமைச்சர் அவர்கள் கூறிய பிறகே, தகுதி வாய்ந்த, அதே கட்சியைச் சார்ந்த – பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி (வழக்குரைஞர்) நிறுத்தப்பட்டு, வெற்றி வாய்ப்பைப் பெற்று, நாடாளுமன்றத்தில் அவர் சிறப்பாகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்.

நட்பு வேறு; யதார்த்தம் வேறு!

அதனை மனதிற்கொண்டோ, அந்த ஏமாற்றம் காரணமாகவோ, திட்டமிட்டு ஆரியம் இப்படி குறுக்குச்சால் ஓட்டுகிறது, அதற்குச் சிலர்  ‘ஆரிய மாயை’யில் சிக்கி, ‘‘ஆமாம் சாமி’’ போட்டு, தி.மு.க. அவரது வெற்றிக்குக் கடுமையாக உழைத்ததையும் ஏனோ ‘‘வசதியாக மறந்துவிட்டு’’, ‘குறுக்குச்சால் குணாளராக’ இருக்கிறார் என்பது வேதனை. தனிப்பட்ட முறையில் இவர்கள் மீது எந்தக் காழ்ப்புணர்வும் இல்லை. நட்பு வேறு; யதார்த்தம் வேறு.

இப்போது மிக முக்கியமான இந்தத் தேர்தலில், இப்படி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வது விரும்பத்தக்கதல்ல!

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், அந்த சிறந்த முடிவு எடுத்ததால், 40–க்கும் 40 என்ற வரலாறும், காங்கிரசுக்குக் கணிசமான எண்ணிக்கையாளர்களும் கிடைத்தார்கள்!

குறுக்குச்சால் ஓட்டும் நண்பர்கள் தங்கள் மனச்சாட்சியை எதற்காகவும் தள்ளிவிடக் கூடாது.

தற்காலிக சிறு மகிழ்ச்சி ஏற்படுமே தவிர,
வேறு பெரிய தாக்கம் ஏற்படாது!

2026 இல், தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி செய்யப்பட்ட வெற்றி! அதற்கு உள்ளிருந்தே இப்படி குறுக்குச்சால் விட்டு, குட்டையைக் குழப்பினால், இன எதிரிகளுக்கும், தமிழ்நாட்டைக் காவி மயமாக்கி, காவி மண்ணாக்கத் துடிப்பவர்களுக்கும் தற்காலிக சிறு மகிழ்ச்சி ஏற்படுமே தவிர, வேறு பெரிய தாக்கம் ஏற்படாது!

நினைவூட்டுவது நமது அன்பான கடமையாகும்!

‘அவலை நினைத்துக்கொண்டு, வெறும் உரலை இடித்தால்’, என்ன லாபம்?

ஆழ்ந்து சிந்திக்க வேண்டுகிறோம்!

பொறுப்பைக் காட்ட வேண்டியவர்களுக்கு, அதனை நினைவூட்டுவது நமது அன்பான கடமையாகும்!

 

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை   
13.2.2026    

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *