பெருந்தன்மை மிக்க பேராளுமை பெரியார்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

முனைவர் மறைமலை இலக்குவனார்

நெகிழ்ந்த உள்ளமும், பிறரை நெகிழச்செய்யும் நேயமும், அடுத்தவர் துயர்கண்டால் அலறிப் பதைத்து ஓடோடி உதவத் துடிக்கும் உழுவலன்பும் கொண்ட பெரியார் தமது தொண்டர்களுக்குச் செவிலித்தாயாகவும், கருத்தியல் எதிரிகளுக்குப் பேரிடி வழங்கிச் சீறும் சிறுத்தையாகவும் ஒரே நேரத்தில் இருவேறு பண்புகளின் இருப்பிடமாகத் திகழ்ந்த விந்தை மனிதராவார்.

புறநானூற்றின் உயிரோவியமே பெரியார்

அதியமான் நெடுமான் அஞ்சியின் பட்டத்து யானை நீர்த்துறையில் குளிக்கவரும் வேளையில் தன்மேல் ஏறி மிதித்து விளையாடும் சிறுவர்களுக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் இருந்தநிலையையும், அதே யானை போர்க்களத்தில் பகைப்புலத்தோரைப் படாதபாடு படுத்தி எட்டி உதைக்கும் சீற்றத்தையும் அவ்வைப் பெருமாட்டி புறநானூற்றில் உயிரோவியமாய்ப் புனைந்துகாட்டியுள்ளார்.அதனைப் போன்றே பெரியாரும் அன்பருக்குத் தாயாகவும், வம்பருக்குத் தீயாகவும் திகழ்ந்தார் எனலாம்.எனினும் கருத்துமாறுபாடு கொண்டோரையும் கனிவுடன் நடத்திய அவரது பேருள்ளம் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

பொருந்தாத தரவுகளைக் காட்டி பெரியார் என்னும் பேராளுமையைச் சிதைத்துக் காட்டும் முயற்சியில் சிலர் தொடர்ந்து முனைந்து வருகின்றனர்.

குருவி முட்டிக் குன்று சாயுமா?மாடு முட்டி மாமலை சிதையுமா?

தெளிந்த உள்ளம்கொண்ட இளைஞரையும், வஞ்சமறியாச் சிறாரையும் திசைதிருப்பும் வகையில் இவர்கள் காட்டும் உளுத்துப் போன உதவாக்கரைச் சான்றுகளும், பத்திரிகை நறுக்குகளும் வலிமையானவை அல்ல.ஆயினும் பலமுறை பலரிடம் கூறினால் ஒருமுறையாவது ஒருசிலர் நம்புவரே எனும் நப்பாசை இவர்களது முயற்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.

பத்திரிகை  நறுக்கே ஆதாரமாகுமா?

ஆங்கிலத்தில் ‘‘Reading between the lines’’ என்று ஒரு தொடர் வழங்கிவருகிறது.அதாவது  “எழுத்தில் அமைந்துள்ள வரிகளுக்குப் பின்புலமாகப் பொதிந்துள்ள உண்மையைக் கண்டறிதல்” என இதற்கு விளக்கம் வழங்கலாம்.பெரியார் எழுதியதாகக் காட்டப்படும் வரிகளின் பின்புலமாக அமைந்துள்ள வரலாற்றுப் பின்னணியைக் கண்டறிந்தால் அவர் என்ன எழுதினார்,எத்தகைய கருத்தை வலியுறுத்த எழுதினார் எனப் பொருள்கொள்ளலாம்.

ஆனால் அவற்றையெல்லாம் புறந்தள்ளி ஒரு பத்திரிகை நறுக்கைமட்டும் ஆதாரமாகக் கொண்டு ஒரு பெருந்தகையைப் பற்றிய முடிவுக்கு வந்துவிடமுடியுமா?

அண்மையில் நடந்த ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

பெண்ணடிமைப் புகுத்திய
காவியம் – சிலப்பதிகாரம்

அருப்புக்கோட்டையிலே நடந்த திராவிடர் கழக மாநாட்டைப் பற்றிய செய்தி ஒரு முழுப்பக்க அளவில் வெளிவந்திருந்தது.அந்த மாநாட்டையொட்டித் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைத்த என் தந்தையார் பேராசிரியர் சி.இலக்குவனார் ஆற்றிய சொற்பொழிவே அந்தப் பக்கம் முழுமையும் வெளிவந்திருந்தது.ஆனால் அவரை முன்மொழிந்தோர், வழிமொழிந்தோர் விவரங்களும் இடம்பெற்றிருந்தன.திருக்குறளைப் பற்றிப் பேசிய என் தந்தையார் பொழிவின் கடைசி இரண்டு பத்திகளில் சிலப்பதிகாரத்தைப் பற்றிய கருத்துகள் இடம்பெற்றிருந்தன.அந்த வரிகளின் மொழிநடைக்கும் என் தந்தையார் பொழிவின் மொழிநடைக்கும் பெருத்த மாறுபாடு காணப்பட்டது.என் தந்தையார் வடசொல்லைப் பொழிவில் எஞ்ஞான்றும் பயன்படுத்தியதில்லை.சிலம்பைக் கடிந்துரைத்த அந்த வரிகள் வேறு யார் பேசியவையாகவோ(முன்மொழிந்த அல்லது வழிமொழிந்தவர்கள்) இருக்கவேண்டும்.ஆனால் தரவுகளைப் பகுத்துணராமல் ஒரு தமிழ் முனைவர்   “அய்யகோ!இலக்குவனார் சிலம்பைப் பழித்துரைத்தாரே! “எனக் கூறி அந்த ‘விடுதலை’ நாளேட்டையே சான்றாதாரமாகக் காட்டினார்.

வரலாறோ வேறுவிதமாக அமைந்துள்ளது.தந்தை பெரியார் சிலப்பதிகாரத்தைப் பெண்ணடிமை புகுத்திய காப்பியம் எனக் கடிந்துரைத்துப் பொழிவாற்றிவந்த அதே நாள்களில் என் தந்தையாரின் ஆசான் சாமி.சிதம்பரனாரும், என் தந்தையாரும் ஊர் ஊராகச் சென்று சிலப்பதிகாரப் பரப்புரை நிகழ்த்திவந்தார்கள்.பெரியார் அவர்களின் சிலப்பதிகார மறுப்புரை வெளிவந்த அதே ‘விடுதலை’ நாளேட்டில் இவ்விருவரும் நிகழ்த்திவந்த சிலப்பதிகாரப் பரப்புரைகளும் வெளிவந்துகொண்டிருந்தன. சிலப்பதிகாரத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு பெரியாரைச் சாடியும், தூற்றியும் பேசிவந்த ம.பொ.சி.அவர்களுக்குக் கடுங்கோபம் வந்ததே பார்க்கவேண்டும்!

“என்ன இது? தலைவர் ஒரு பக்கம் சிலப்பதி காரத்தைப் பழித்துரைத்துப் பேசிவருகிறார்.

அவரது இரண்டு தொண்டர்கள் (சாமி.சிதம்பரனாரும் இலக்குவனாரும்) இன்னொரு பக்கம் சிலப்பதிகாரப் பரப்புரை நடத்திவருகிறார்களே.இரண்டு செய்திகளையும்

ஒரே பக்கத்தில் ‘விடுதலை’ வெளியிட்டு வருகிறதே?’’´ என வெகுண்டு எழுதியுள்ளார்.

பெரியாருக்கே உரிய தனிச் சிறப்பு

இங்கே கவனிக்கவேண்டிய இன்றியமையாச் செய்தி தமது கருத்தைத் தமது தொண்டர்கள் எற்காமல் மாற்றுக் கருத்தைக் கூறும் கருத்துச்சுதந்திரம் பெரியார் அவர்களுக்கே உரிய தனிச்சிறப்பு. தலைவரின் கருத்துக்கு மாறுபட்ட கருத்தையும் வெளியிடுவது ‘விடுதலை’ ஏட்டின் பெருந்தன்மை.

இந்த எடுத்துக்காட்டான அரசியல் நாகரிகத்தை இன்றைய அரசியலில் காணமுடியுமா?

இந்த வரலாற்றை உணராத் தமிழ் முனைவர் ஒருவர், “இலக்குவனார் சிலப்பதிகாரத்தைப் பழித்துப் பேசினார்” என்று கூறி அதற்கு ஆதாரமாக ‘விடுதலை’ ஏட்டைக் காட்டுவது பொருத்தமானதுதானா?அந்தப் பேராசிரியர் எட்டுச்சுரைக்காயையே இனிது எனக் கருதி தமது ஆய்வை மொழிந்தது சரிதானா?வரலாறு என்ன எனக் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு ஒரு முடிவுக்குவரலாமா?

இந்தக் கேள்வியையே பெரியாரைப் பழித்துப் பெரிதாகப் பேசிவரும்,சமூக வலைத்தளத்தில் எழுதிவரும். “பேரறிஞர்”களுக்குக் கேட்க விழை கிறேன்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *