சென்னை, பிப். 13- அண்ணா பல்கலைக்கழகத்தில் முன்னாள் மாணவர் வழங்கிய ரூ.1 கோடி நன்கொடையில் உருவாக்கப்பட்டுள்ள அதிநவீன ஏஅய் ஆய்வகம் 11.2.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) ஆய்வகத்தை அமைப் பதற்காக முன்னாள் மாணவரும், கார்சன் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலருமான சுந்தர் வைத்திய நாதன் ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார்.
இவர் அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரியில் 1990ஆம் ஆண்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
அவர் வழங்கிய ரூ.1 கோடி நிதியில் உயர் செயல் திறன் கொண்ட கணினி கட்டமைப்பு களைக் கொண்ட ஏஅய் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ரோபோட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ் ஆகிய வளர்ந்து வரும் துறைகளில் மாணவர் களின் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்துவதே இந்த ஆய்வகத்தின் முதன்மை நோக்கம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (11.2.2026) நடைபெற்ற விழாவில் சுந்தர் வைத்தியநாதன் இந்த அதிநவீன ஏஅய் ஆய்வகத்தை திறந்துவைத்தார். அவர் பேசும்போது, “எதிர்கால தொழில்துறையை செயற்கை நுண்ணறிவுதான் தீர்மானிக்கப் போகிறது.
எனவே, மாணவர்கள் இந்த நவீன வசதியை பயன்படுத்தி சமூகத்துக்கு தேவையான ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்” என்றார்.
தலைமை தாங்கிய பதிவாளர் வி.குமரேசன், “தொழில்துறைக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இடை யிலான பிணைப்பு மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம்” என்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரி தலைமைப் பொறியாளர் பி.அரிகரண், இசிஇ துறை தலைவர் எம்ஏ.பாக்யவேணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
