நவராத்திரி
“நவராத்திரி” என்ற பதம் ஒன்பது இரவு எனப் பொருள்படும். இது புரட்டாசி அமாவாசைக்குப் பின் உள்ள நவமியை இறுதியாக உடைய ஒன்பது நாள்கள் – இரவிலும் கொண்டாடப்படும் உற்சவம். இது சில ஆண்டுகளில் அய்ப்பசி மாதத்துக்குள்ளும் வரும். இந்நாள்களின் ஆரம்பத்தில் எல்லோர் வீட்டிலும் அவரவர் நிலைக்கேற்ப பொம்மைகள் கடவுள்களின் உருவமான படங்கள் வைத்து, ஒவ்வொரு சாயங்காலமும் ஒன்பது நாள் வரையில் பாட்டு முதலியவை பாடி, ஆரத்தி முதலியவைகள் சுற்றி, இந்த உற்சவத்தைப் பெண்கள் கொண்டாடுவது வழக்கம்.
நவராத்திரியில் கடைசி நாளாகிய நவமி தினத்தில் ஆண்கள் தமது வீட்டிலிருக்கும் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்து, காலை முதல் உபவாசமிருந்து சரஸ்வதியை பூசை செய்ய வேண்டும். இந்த நவமி அன்றைய தினமாவது அல்லது அடுத்த தினமாவது, தொழிலாளிகள் ஆயுதத்தையுடையவர்கள் ஆகியவர்கள் தங்கள் தங்கள் ஆயுதங்களை வைத்துப் பூசை செய்வது வழக்கம். அதனாலேயே இந்தப் பூசைக்கு ‘ஆயுத பூசை’ என்றொரு பெயரும் உண்டு. இந்த நவராத்திரியை இந்துமதப் பிரிவுகள் என்று சொல்லும் எல்லா மதத்தவர்களும் கொண்டாடுகிறார்கள். அன்றியும் சிவ, விஷ்ணு ஆலயங்களிலும் இதைப் பெரும் உற்சவமாகக் கொண்டாடுகிறார்கள். அங்கு அம்மனை அலங்கரித்து அநேக தீப அலங்காரங்கள் செய்து, ஒன்பது நாள் இரவும் ஆராதனை நடத்துவார்கள்.

இந்த நிகழ்வுகளை செய்வது பற்றி தனித்தனியே புராணக் கதைகளையம் எழுதி வைத்துள்ளனர். புராணக் கதை மூலம் கடவுளோடு தொடர்புபடுத்தி எந்தவொன்றைச் செய்யச் சொன்னாலும் மக்கள் பயபக்தியுடன் தவறாது செய்வர் என்ற சூழ்ச்சிதான் அதற்குக் காரணம்.
முன்னொரு காலத்தில் மகிஷாசூரன் என்ற எருமை ரூபமான அசுரனும் அவன் பரிவாரங்களும் விருத்தியாகி கடவுள் வரத்தால் சிறந்த பதவியை அடைந்து உலகை இம்சித்துக் கொண்டிருந்ததால்; இந்தக் கஷ்டம் பொறுக்க முடியாமல் தேவர்கள் பார்வதியிடம் முறையிட, பார்வதி ஒன்பது நாள் சிவபிரானைக் குறித்துத் தவமிருந்து, அவரிடமிருந்து தகுந்த சக்தி பெற்று, ஒன்பதாம் நாள் மகிஷாசூரனைக் கொன்று, பரிவாரங்களை நாசம் செய்து சாந்தமடைந்தார். மகிஷாசூரனைக் கொன்றதனால் பார்வதிதேவிக்கு மகிஷாசூரமர்த்தினி என்கிற பெயரும் வந்தது என்பர். எனவே, இந்தக் கதையின் ஆதாரத்தைக் கொண்டு அம்மன் தவமிருந்து விழித்த ஒன்பதாம் நாள் வேண்டிய வரங்கள் கொடுப்பார் என்னும் கதையின் மூலம் தூண்டினர்.
முன்னொரு காலத்தில், லட்சுமிதேவி உலகில் அலர்மேலு மங்கையாக வந்து, பரமதபதவாசியாகிய விஷ்ணுவான திருப்பதி பெருமாளை அடைந்து ஆனந்திக்க, இந்த ஒன்பது நாள் தவமிருந்தாராம். இதன் முடிவில் அவர் எண்ணம் முற்றுப்பெற விவாகம் பெரிய ஆடம்பரமாக முடிந்ததாம். இந்த விசேடத்தை முன்னிட்டுத்தான் வைணவ மாத்வர்கள் இந்நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்நாள்களில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடக்கிறது. பிரம்மாவின் பத்தினியான சரசுவதியும் இந்த நவராத்திரியில் தன் நாயகனை அடைந்து நிலைபெறத் தவமிருந்தாள் என்னும் கதையைக் கொண்டு, கடைசி மூன்று நாளும் சரசுவதிக்கு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. பத்தாம் நாள் விஜயதசமி அன்று சரஸ்வதி தவம் முடிந்து சந்துஷ்டியாயிருப்பதால், அன்று வாசிப்போருக்குக் கல்வி நன்றாக வருமாம்; தொழில் செய்கிறவர்கட்குக் காரியங்கள் கைகூடி வருமாம்” என்று சரஸ்வதி பூசைக்கு கதை கூறினர்.
மேலும் பூசையினால் ஏற்படும் பலனை உணர்த்த கீழ்க்கண்ட கதையைப் புனைந்து பரப்பினர்.
கிரேதாயுகத்தில் சுகேது என்னும் ஒரு அரசன் இருந்ததாகவும், அவன் சத்துருக்களால் அடிபட்டு காட்டை அடைந்து, காயத்தாலும், பசிப்பிணியாலும் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அங்கு வந்த அங்கிரஸ் என்னும் ரிஷி, அரசன் பெஞ்சாதியான சுவேதி என்பவளுக்கு லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவர்கள் செய்த மாதிரி நீயும் தவம் செய்வாய் என்று இந்தப் பூசையை உபதேசித்ததாகவும், அவ்வாறே அவள் செய்து அங்கிரஸ் என்னும் புத்திரனும் பிறந்து, அவன் சத்ருக்களை ஜெயித்துத் தகப்பனுக்கு ராஜ்யத்தை வாங்கிக் கொடுத்ததாகவும் இக்கதை சொல்லப்படுகிறது. நவராத்திரிக்கு இன்னும் இதுபோன்ற பல கதைகளும் உண்டு.

மேலும், விஜயதசமி அன்று சிவன் கோயிலில் ‘பரிவேட்டை உற்சவம்’ என்பதாக ஒன்று நடத்துகின்ற வழக்கமுண்டு. அன்று ‘பகவான்’ எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னிமரத்தில் நெருப்பிருக்கிறதாம். அதில் அம்பு பாய்ச்சினால் அந்த வேகத்தால் நெருப்புண்டாகி, அந்த மரத்தை எரித்து விடுமாம். அதனால் வேட்டையாடுவோருக்கும், ராஜாக்களுக்கும் எளிதில் ஜெயத்தைக் கொடுக்குமாம். இந்தக் காரணத்தால், இந்த வேட்டைத் தினத்திற்கு விஜயதசமி அதாவது, ஜெயத்தைக் கொடுக்கும் நாள் என்று பெயர்.
ஆனால், தந்தை பெரியார் நடைமுறையில் இப்பூசைகளால் எந்த பயனாவது ஏற்பட்டிருக்கிறதா என்பதை மக்களுக்கு உணர்த்த,
“மைசூர் மகாராஜா பரிவேட்டையால் அய்தருக்கு அடிமையானார். ஆனால், வெள்ளைக்காரப் பரிவேட்டை தான் அதை விடுவித்துக் கொடுத்தது. தஞ்சாவூர்ராஜா செய்த சரஸ்வதி பூசையும், ஆரிய பரிவேட்டையும் சரஸ்வதி மகாலில் அடுக்கி வைத்த குப்பைக் கூள ஏடுகளும், ஆயுதங்களும், முன்வாயிலில் துளசியைக் கொட்டி விட்டு, பின்வாயிலில் ராஜாவை ஓடச் செய்துவிட்டது. அதுபோலவே, திப்பு காலத்தில் திருவனந்தபுரத்து ராஜாவிற்கு வெள்ளைக்காரர்கள் அபயம் கொடுத்தார்களே ஒழிய, சரஸ்வதி பூசையும், பரிவேட்டையும் ஒன்றும் செய்யவே இல்லை. அந்தப்படி அபயம் கொடுத்திராவிடில், அனந்த சயனப் பிரபுவும், அவர் பெஞ்சாதியும், அவர் மருமகளும் ஓடிப் போயன்றோ இருக்க வேண்டும்? அனந்தசயனப் பிரபு பின்னும் ஓடிவந்து தங்கள் சொத்தென்று, அங்கு சயனித்துக் கொண்டிருப்பதாக இப்பொழுதும் சொல்லுகிறார்கள்.
சரஸ்வதியைக் கொலுவிருத்தி, பெரிய உற்சவங்கள் செய்யும் நமது நாட்டில் ஆயிரத்திற்கு 50 பேருக்குக்கூட கல்வி இல்லை. சரஸ்வதியே இல்லாத நாட்டில் ஆயிரத்திற்கு 996 பேர்கள் கல்வி கற்றவர்களாக இருக்கிறார்கள்.
நாம் சரஸ்வதிக்குச் செய்த தொண்டு சாமானியமல்லவே! ஒரு ஏட்டைக் கிழியோம்; ஒரு எழுத்தை மிதியோம்; இறைந்து கிடக்கும் இதழில் துப்போம்; படித்த ஒரு பழைய ஏட்டையும் வீசி எறியோம்; கால்பட்டால் தொட்டுக் கும்பிடுவோம்; கைபட்டால் கண்ணில் ஒத்திக் கொள்வோம்; எந்த ஏட்டிற்கும் காப்பு சொல்வோம்; செல்லரித்த ஏட்டையும் ‘புண்ணிய தீர்த்தத்தில்’ கொண்டு போய் போடுவோமே ஒழிய தெருவில் போடோம்; கற்றவர் நாவின் கருத்தும், கம்பன் கவித்திறனும் அவளே என்போம். இத்தனையும் போதாமல் வருடம் ஒருதரம் பத்து நாள் பள்ளியறையில் வைத்துக் கும்பிடவும் செய்கிறோம். இத்தனையும் நாம் இங்கு செய்ய, இந்த சரஸ்வதி கொஞ்சமும் நன்றி விசுவாசம் இல்லாமல் போனது ஏன்? நம் நாட்டில் 99% பேர் படிக்காதவர்களாகத்தானே இருந்தார்கள். நம்முடைய பிரச்சாரங்களும் போராட்டங்களும் தானே எல்லோருக்கும் கல்வி கொடுத்தது.
கல்வி, செல்வம், படை வலிமையுள்ள மேனாட்டில் உனக்குப் பூசையில்லை. நைவேத்தியமில்லை. பூசாரி, குருக்களுக்குக் காணிக்கையுமில்லை என்று கேலியாகக் கேட்கிறார்.
சரஸ்வதி மகாலும், லட்சுமி விலாசமும், பார்வதி மண்டபமும் கட்டி வைத்த தஞ்சாவூர் மகாராஜா குடும்பம் எங்கே? தப்பித் தவறி அந்த வம்சத்திற்கு ஒரு டிப்டி சூப்ரண்டெண்ட் வேலைக்குக்கூட எவ்வளவு கஷ்டமாய் இருக்கிறது? காரணமென்ன? வீண் பூசைகளும், கோயில் கும்பாபிஷேகமும் அல்லவா? அவர்கள் செய்த பிராமண போஜனமும், தட்சணையும், கோயில் பூசையும் என்ன பலனை அளித்தது? சரஸ்வதி பூசையின் கொலுவால் அல்லவா நாயுடுகளின் அரசாட்சி தஞ்சாவூரில் ஒழிந்தது? கிளைவும், டூப்ளேயும் எந்தச் சரஸ்வதியைப் பூசித்தார்கள்? என்று ஆழமாகவும், அறிவூட்டும் வகையிலும் கேட்டார் தந்தை பெரியார். பூசை செய்து பயன் பெறலாம் என்பது அறிவுக்கு உகந்ததா? இப்படிக் கூறும் ஆன்மிகம் அறிவைக் கெடுக்கத்தானே பயன்படுகிறது!
சரஸ்வதி பூசை என்பது ஒரு அர்த்தமற்ற பூசை. கல்வியையும், தொழிலையும் ஒரு பெண் தெய்வமாக்கி, அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து, அதைப் பூசை செய்தால் கல்வி வரும், வித்தை வரும் என்றும் சொல்லி, நம்மைப் பார்ப்பனர்கள் ஏமாற்றி, கல்வி கற்கச் சொந்த முயற்சி செய்து கொள்ளாமல், சாமியையே நம்பிக் கொண்டு இருக்கும்படி செய்து விட்டு, நாம் அந்தச் சாமி பூசையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே, அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளியாகிக் கொண்டு, நம்மைப் படிப்பு வரமுடியாத “மக்குகள்” என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றார்கள்.
முதலாவது, சரஸ்வதி எனும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால், அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது, சரஸ்வதி என்கிற ஒரு பெண், பிரம்மனுடைய சரீரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட பிறகு, அவள் அழகைக் கண்டு, அந்தப் பிரம்மனாலேயே மோகிக்கப்பட்டு, அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மனை தகப்பன் என்று கருதி, அதற்கு உடன்படாமல், பெண் மான் உருவம் எடுத்து ஓடவும், உடனே பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவமெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேடன் உருவமெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் பிரம்மனை உயிர்ப்பிக்கச் செய்து, பிரம்மனுக்கு மனைவியாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக் கதை கூறுகிறது.
இரண்டாவது, ஒருவிதத்தில் சரஸ்வதி பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஏற்பட்ட ஆசையின்போது வெளிப்பட்ட இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க, அக்குடத்தில் இருந்து அகத்தியன் வெளியாகி – அந்த அகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப்படுகிறது. அதனால் பிரம்மாவுக்கு சரஸ்வதி, மகன் வயிற்றுப் பேர்த்தியாகிறாள். எனவே, சரஸ்வதி பிறப்பும், வளர்ப்பும் மேற்படி நடவடிக்கையும் ஆபாசமும் எப்படி ஒழுக்கஈனமுமானதாகும்?
இந்தப் பூசையில் அரசன் தனது ஆயுதங்களையும் வியாபாரி தனது கணக்குப் புத்தகங்களையும், தராசு, படிக்கல், அளவு மரக்கால், படி, உழக்கு, பெட்டி முதலியவற்றையும், தொழிலாளிகள் தங்கள் தொழிலுக்குரிய ஆயுதங்களையும், இயந்திரக்காரர்கள் தங்கள் இயந்திரங்களையும், மாணவர்கள் தங்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மைகளையும், தாசிகள் தங்கள் ரவிக்கைகளையும், சேலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் தங்கள் வாத்தியங்களையும் இதுபோல் ஒவ்வொருவரும் தங்கள் இலட்சியத்திற்கு வைத்திருக்கும் அவரவர் ஆயுதங்களையும் வைத்துப் பூசை செய்கிறார்கள். இதனால் அந்தத் தினத்தில் தொழில்கள் நின்று, அதனால் வரும்படிகளும் போய் பூசை, ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காகத் தங்கள் கையில் இருக்கும் பணத்தில் ஒரு பகுதியைச் செலவழித்து, போதாவிட்டால் கொஞ்சம் கடன் வாங்கியும் செலவழிப்பதை விட இதனால் யாதொரு நன்மையும் ஏற்படுவதாகச் சொல்வதற்கு இடமே இல்லை.
சரஸ்வதி பூசை செய்யும் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்நிறை நிறுக்காமலோ குறையளவு அளக்காமலோ, தப்புக் கணக்கு எழுதாமலோ இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளர்கள் தங்கள் ஆயுதத்தைக் கழுவிச் சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து விழுந்து கும்மிடுவார்களே தவிர, அவர்களுள் எவனாவது நாணயமானவனாய் நடக்கின்றான் என்றோ தொழில்கள் தாராளமாய் கிடைக்கின்றது என்றோ சொல்லுவதற்கு இடமில்லாமல் இருக்கின்றார்கள். அதுபோலவே புத்தகங்களையும், கூளங் குப்பைகளையும் அள்ளி அவற்றிற்குப் பொட்டு வைத்துப் பூசை செய்கின்றார்களே அல்லாமல், காலோ கையோ பட்டு விட்டால், தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொள்கின்றார்களே அல்லாமல், நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்கள் என்றுதான் உள்ளார்கள்.
இவ்வளவு ஆயுத பூசை – சரஸ்வதி பூசை செய்தும் நமது வியாபாரிகள் நஷ்டமடைந்தும், தொழிலாளர்கள் பிழைக்கத் தொழில்கள் இன்றியும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். சரஸ்வதி பெண்ணாக இருந்தும், பெண்கள் 1,000-த்துக்கு 9 பேர் படித்து உள்ளார்கள். சரஸ்வதியால் பயன் என்ன?
கால வளர்ச்சிக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், தொழில் நுட்ப மேம்பாட்டிற்கும், மக்களின் தேவைக்கும், பிற நாடுகளின் போட்டிக்கும் ஏற்ப நாமும், கல்வி, இராணுவம், தொழில்நுட்பம், பொருளாதாரம் இவற்றில் மேம்பட வேண்டும் என்றால்,
எல்லோருக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும் – எல்லோருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்க வேண்டும் – எல்லோருக்கும் நல்ல மருத்துவம், உணவு, இருப்பிடம் கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.
கல்விக்குரிய கடவுளை நாம் பல நூறாண்டுகள் வணங்கினோமே அக்கடவுள் நமக்கு எல்லோருக்கும் கல்வியைக் கொடுத்ததா? எல்லோருக்கும் கல்வியைத் தர மறுத்து, தங்களுக்கு மட்டுமே உரியதாய்க் கல்வியை மாற்றியவர்களை கடவுள் தண்டித்ததா? ஆட்சியாளர்களை எல்லோருக்கும் கல்வியைக் கொடு என்று கூறியதா?
வீரத்திற்கு கடவுளான துர்க்கை நம் நாட்டை அன்னிய படையெடுப்பிலிருந்து காக்குமா? காத்ததாய் வரலாறு உண்டா?
செல்வத்திற்குரிய கடவுளான லட்சுமி இத்தனை ஆயிரம் ஆண்டுகளாய் நம் நாட்டு மக்களை வறுமையில் தானே வைத்திருந்தது?
சரஸ்வதியை வணங்காத அயல்நாடுகள் கல்வியில் சிறந்திருந்தன. அறிவிலும், அறிவிய லிலும் சிறந்து விளங்கின!
லட்சுமியை பூசை செய்யாத பிற நாடுகள் செல்வத்தில் சிறப்பாக இருந்தன!
துர்க்கைக்குப் பூசை செய்யாத நாடுகள்தான் வீரத்தில், படை வலிமையில் சிறந்து விளங்கின.
ஆயுத பூசைக் கொண்டாடாத நாடுகளில்தான் தொழில்நுட்பக் கருவிகள், படைக் கருவிகள், வாகனங்களையெல்லாம் உருவாக்கின.
உண்மை இப்படியிருக்க இப்படிப்பட்டக் கடவுள்களை, புராணங்களை, பூசைகளை, விழாக்களை உருவாக்கிய நம் ஆன்மிகத்தால் நமக்கு உண்டான நன்மைகள் என்ன? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
அதுமட்டுமல்ல இந்த பூசைகளால் நன்மை கிடைக்காமல் போனது மட்டுமல்ல. அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.
எடுத்துக்காட்டாக, தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது படைக்கலன்கள் எல்லாம் ஆயுத பூசைக்காகக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன மந்திரிகளையும், பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், “மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்” என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, தான் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி, அதிவிரைவாகவும், அனாயாசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.
இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், “வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயினை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது” என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.
ஒரு ஆண்டில் இந்தப் பூசையில், இந்த நாட்டில் செலவாகும் பணமும், நேரமும் கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால், மற்றப் பண்டிகை, உற்சவம், புண்ணிய தினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செலவாகும் தொகை சுலபத்தில் விளங்கிவிடும். இதை எந்தப் பொருளாதார இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.
இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு, பொழுது இழப்பு, அறிவு இழப்பு பற்றி சந்திக்க வேண்டாமா? பயன் தராது, இழப்புகளை ஏற்படுத்தும் இந்த விழாக்கள், பூசைகளை கற்பிக்கும் ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? செல்வத்தைக் கொடுக்கிறதா? செல்வத்தை இழக்கச் செய்கிறதா? சிந்தித்துப் பாருங்கள்.
