தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பிஜேபி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதைச் சொல்ல குறிப்பாக பிஜேபிக்கு அருகதை உண்டா?
சிவகங்கை மாவட்ட பாஜக மகளிர் அணித் தலைவியாக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் தலைமையில் காரைக்குடியில் நேற்றுமுன்தினம் (10.2.2026) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கான செலவு மற்றும் விளம்பர சுவரொட்டிகளில் நிர்வாகிகளின் நிழற்படங்களை இடம்பெறச் செய்வது தொடர்பாக, மாவட்டத் தலைவர் பாண்டித்துரை ஆபாசமாகப் பேசி, தனக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும், பாலியல் ரீதியாக இழிவாகப் பேசியதாகவும் ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ராஜேஸ்வரி மாநில மகளிர் அணித் தலைவி கவிதாவிடம் பேசிய உருக்கமான ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த உரையாடலில்:
“மாவட்டத் தலைவர் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகிறார்.”
“கட்சிப் பணிக்காகப் பணம் செலவு செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்.”
“ஆபாசமாகப் பேசுகிறார், என் சாவுக்கு அவரே காரணம்.” என்று ராஜேஸ்வரி கதறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மற்றொரு பெண் நிர்வாகி, “இதையெல்லாம் அட்ஜஸ்ட் செய்துதான் ஆகவேண்டும், பெரிய பதவிகளுக்கு வரவேண்டும் என்றால் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று பொறுப்பற்ற முறையில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்தக் கட்சியினரே இவ்வாறு பேசியதால் மனமுடைந்த ராஜேஸ்வரி, தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் உடனடியாகக் கதவை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரி அளித்த வாக்குமூலம் பின்வருமாறு:
“மாவட்டத் தலைவர் என்னைப் பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுகிறார். பணம் கேட்டுத் தொல்லை தருகிறார். ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள், இல்லையென்றால் செத்துப் போ’ என்று அவர் கூறியதால் மனவேதனையில் தற்கொலைக்கு முயன்றேன்” என்று அவர் அதில் கூறியுள்ளார்.
பெண்களுக்குப் பாதுகாப்பு கோரி வீதியில் இறங்கிப் போராடும் ஒரு கட்சியின் உள்ளேயே, ஒரு பெண் நிர்வாகிக்கு நேர்ந்த இந்த இக்கட்டான சூழல் அரசியலரங்கில் பெரும் விவாதத்தையும், கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
பிஜேபியின் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று நீட்டி முழங்குகின்றார். தமிழ்நாட்டில் பிஜேபியின் முக்கிய பொறுப்பாளராக இருந்த ராகவன் என்பவர்மீது எழுந்த குற்றச்சாட்டு என்ன?
பிஜேபி கட்சிக்குள்ளேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறுவது எல்லாம் ‘அக்மார்க்’ முத்திரைப் பொய்தானே!
உண்மை நிலை என்ன? பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழும் நிலையில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதன்மைப் பாத்திரத்தை வகிக்கிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பின் தற்போதைய நிலை (2025-2026 தரவுகளின்படி) என்ன?
தமிழ்நாடு பெண்களின் பாதுகாப்பிலும், வேலைவாய்ப்பிலும் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. குறிப்பாக 2026-இன் தொடக்கத்தில் அரசு அறிவித்துள்ள புதிய திட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் இந்த நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளன.
பாதுகாப்பான நகரங்கள்: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கைகளின்படி, இந்தியாவின் பாதுகாப்பான பெருநகரங்களில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் நகரங்கள் தொடர்ந்து முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன.
குற்ற விகிதம்: தேசிய சராசரியுடன் (ஒரு லட்சம் பெண்களுக்கு 4.7 வழக்குகள்) ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மிகக் குறைவாக (1.1 வழக்குகள்) உள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பணிபுரியும் சூழல்: ‘அவதார்’ (AVTAR) குழுமத்தின் 2024-2025 ஆய்வின்படி, பணிபுரியும் பெண்களுக்கு உகந்த சூழல் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முதல் 5 இடங்களுக்குள் உள்ளது.
2026 ஜனவரியில் உலக வங்கி உதவியுடன் ரூ.5,000 கோடி மதிப்பீட்டில் “தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு” (TNWESafe) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது பணியிடங்களிலும், பொது இடங்களிலும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.
டிஜிட்டல் தொல்லைகளுக்கு (Cyber Harassment) 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.
தேசிய அளவில் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது (உதாரணமாக உத்தரப்பிரதேசம், டில்லி), தமிழ்நாட்டின் குற்ற விகிதம் குறைவாக உள்ளது.
உண்மை நிலை இவ்வாறு இருக்க பிஜேபி கூட்டம் மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சிலை உமிழ வேண்டாம்!
