திருவனந்தபுரம், பிப்.12- அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இசுலாமிய வெறுப்பு காட்சிப் பதிவு கண்டனத்தை குவித்து வருகிறது.
“பாயின்ட் பிளான்க் சாட்” என்று தலைப்பிடப்பட்ட அந்த காட்சிப் பதிவில், முதலமைச்சர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறி பார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஅய் மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இசுலாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
காட்சிப் பதிவின் பின்னணி யில் “அந்நியர்கள் இல்லாத அசாம்” மற்றும் “இரக்கமே காட்ட மாட்டோம்” போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.
முதலமைச்சர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துகளை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த காட்சிப் பதிவு கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவின் காட்சிப் பதிவு இசுலாமிய சமூகத்தின் மீதான நேரடி வன்முறையைத் தூண்டும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செயல். தேர்தல் லாபத்துக்காக வெறுப்புணர்வை இயல்பானதாக மாற்ற துடிக்கும் முயற்சிகள் நமது அரசமைப்புக்கான தீங்கு விளைவிக்கும். இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் மவுனம் பிளவுவாத அரசியல் மீதான அவர்களின் பற்றைத் தெளிவாக்குகிறது.
இத்தகைய வகுப்புவாத வெறுப்புணர்வு செயல்களை எதிர்க்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவின் உயிர்ப்புத் தன்மையைப் பாதுகாக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.
