ஜப்பானில் செயற்கைக் குருதி கண்டுபிடிப்பு!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மனிதர்களிடமிருந்து கொடையாகப் பெறும் குருதி வகைகளைப் போல அல்லாமல், அனைத்து வகை குருதிக்கும் பொருந்தக்கூடிய, மிக அவசர காலத்தில் உயிர் காக்கும் சேவைக்காக ஜப்பான் விஞ்ஞானிகள் செயற்கை குருதியை உருவாக்கி வருகிறார்கள்.

எவ்வாறு உணவும், தண்ணீரும் உயிரைக் காப்பாற்றி வருகிறதோ, அதுபோலவே, கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றக் கூடிய ஒரு விசயமாக குருதியும் உள்ளது. அதனால்தான் குருதிக்கொடை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு மாறாக, எல்லா பிரிவு குருதிக்கும் பொருந்தக் கூடிய புதிய வகை செயற்கை குருதியை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இது தற்போது ஆய்வுக்கூட சோதனையில் உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்துவிட்டால் கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த செயற்கைக் குருதி, மனிதர்களிடமிருந்து பெறப்படும் குருதிக் கொடைக்கு முடிவு கட்டாது என்றும், அதன் ஒரு பகுதியாகவே இது தொடரும் என்றும் கூறப்படுகிறது. துல்லியமாகச் சொல்லப்போனால், காலாவதியான இயற்கை குருதியின் மறுசுழற்சி என்பதால், மனிதக் குருதி வீணாவதையே இது தடுக்கும், உயிரிழப்புகளைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குருதி என்பது அறுவைச் சிகிச்சைகள், விபத்து, பிரசவம், புற்றுநோய் உள்ளிட்ட சில சிகிச்சைகளின்போது மருத்துவப் பயனாளியின் உயிரைக் காப்பாற்ற மிகவும் அத்தியாவசியமானதாக மாறிவிடுகிறது.

உலகம் முழுவதும் குருதி(ரத்த) வங்கிகளில் எப்போதும் குருதி இருப்பு குறைவாகவே இருக்கும். வேறு குருதி வகையைப் பெற்றுக்கொண்டு, கேட்கும் குருதி வகையைக் கொடுக்கும் நிலைதான் இப்போதுவரை இருக்கிறது.

அதிலும் குறிப்பாக, தேவைப்படுகிற குருதி வகையானது அரிய வகையாக இருந்துவிட்டால் உடனே கிடைக்காது. கொடையளிப்பவர்கள் கிடைப்பதும் அரிதாக இருக்கும். ரத்தம் கிடைக்க தாமதமாவது பல நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகும் நிலையும் ஏற்பட்டிருக்கும். இதனை குருதி பெற அலைந்து திரிந்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பர்.

இந்த நிலையில்தான், ஜப்பானின் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில், பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு செயற்கை குருதியை உருவாக்கிப் பரிசோதித்து வருகிறது. இது நீல நிறத்தில் இருக்கும் என்றும், இது தயாரிக்கப்பட்டுவிட்டால் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வரைகூட பாதுகாத்து வைக்க முடியும் என்பதே இதன் சிறப்பாக உள்ளது.

உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் இதனைக் கொண்டு செல்லலாம். இது அனைத்து குருதி வகைகளுக்கும் பொருந்தும். கொடையாகப் பெறப்படும் குருதியின் ஆயுள்காலம் என்பது 42 நாள்கள்தான். ஆனால் செயற்கைக் குருதியின் ஆயுள் 2 ஆண்டுகள். அதுவும் அறை வெப்பநிலையிலேயே இதனை 2 ஆண்டுகள் பாதுகாக்கலாம் என்றும், குளிர்சாதனப் பெட்டியில் உரிய குளிர்நிலையில் வைத்து 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒருவகையில், இதுவும் ஒரு கொடையாகப் பெறப்பட்ட குருதிதான். அதாவது, காலாவதியான குருதியிலிருந்து ஹீமோகுளோபினை சேகரித்து அதன் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. ஹீமோகுளோபின் ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்த சிவப்பணுக்களின் ஒரு பகுதி. எனவே, இயற்கை குருதியின் மறுசுழற்சி செய்யப்பட்டதுதான் இந்த செயற்கைக் குருதி.

செயற்கைக் குருதி ஆராய்ச்சிக் குழு, நன்கு ஆரோக்கியமாக இருக்கும் 16 தன்னார்வலர்கள் உடலில் 100 மி.லி. முதல் 400 மி.லி. செயற்கைக் குருதி செலுத்தி அது எவ்வாறு செயல்படுகிறது, உள்ளுறுப்புகளை இயக்குகிறது என்று சோதனைகளை நடத்தி வருகிறது.

ஒருவேளை, இந்த சோதனை வெற்றியடைந்தால், வரும் 2030-ஆம் ஆண்டிலிருந்து ஜப்பான் மருத்துவமனைகளில் செயற்கைக் குருதியின் பயன்பாடு உறுதி செய்யப்படும். உலகளவில் செயற்கைக் குருதியை உருவாக்கிய நாடு என்ற பெருமையை ஜப்பான் அடையும். உலகம் முழுவதும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், மருந்துக் கடைகளில் கூட இது விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *