அகில இந்திய ‘A’ கிரேடு கபாடிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கழகத் தலைவர் உரை

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பன்னாட்டுத் தரத்தில் நடைபெறும் ”தந்தை பெரியார் இளைய திலகங்கள்” கபாடிக் கழகம் போட்டிகள்
அனைவரின் ஒத்துழைப்புடன் ஒரு நிரந்தர அமைப்பாக்கி இன்னமும் விரிவாக்கப்பட வேண்டும்!
ஒக்கநாடு மேலையூரில் (பிப்.8, 9, 10, 11) நடைபெற்ற அகில இந்திய கபாடிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்குத்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் கோப்பை, ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினர் (செய்தி 4 ஆம் பக்கம் காண்க)

ஒக்கநாடு மேலையூர். பிப். 12. ”இந்தத் தலைமுறை தொலை பேசியில் தங்களைத் தொலைந்து விட்டது. அதை மாற்ற ’கபாடி’ போன்ற விளையாட்டுகள் தேவை” என்றும், “விளையாட்டு என்றால் மனிதம் மட்டும் தான் இருக்க வேண்டும். ஜாதி, மத, பேதங்கள் எதுவும் குறுக்கே வரக்கூடாது” என்றும் ஒக்கநாடு மேலையூரில் நடைபெற்ற, அகில இந்திய கபாடிப் போட்டிகள் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

”கோவி.ரெங்கேஷ்குமார் – தங்க.நவநீதன்” நினைவாக, ’தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபாடிக் கழகம்’ சார்பில் நடத்தும் ஆண்கள் அணிகளும், பெண்கள் அணிகளும் தனித்தனியாகக் கலந்துகொள்ளும், “அகில இந்திய A கிரேடு கபாடிப் போட்டி – 2026” பிப்ரவரி 8,9,10 மற்றும் 11 (ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்) ஆகிய நான்கு நாட்கள், தஞ்சை மாவட்டம் – ஒரத்தநாடு ஒன்றியம் – ஒக்கநாடு மேலையூரில் உள்ள, அரசு மன்னை ப.நாராயணசாமி  உயர்நிலைப்பள்ளி அருகில், பன்னாட்டுத் தரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக ஆண்கள் அணிகளும், பெண்கள் அணிகளும் தனித்தனியே விளையாடுவதற்காக ஒருங்கிணைந்த உள்ளரங்கமும், ஒரு பக்கம் சிறப்பு அழைப்பாளர்களுக்கான மாபெரும் நீளமான மேடையும், மற்ற மூன்று பக்கமும் பார்வையாளர்களுக்கான அடுக்கு மாடமும், பன்னாட்டு தரத்துடன் ஆடுகளங்களும் அமைக்கப்பட்டிருந்தன. சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவில், நாதஸ்வர, வெடி முழக்கங்களுடன் நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் சார்பில் வரவேற்கப்பட்டனர்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

கடந்த 32 ஆண்டுகளாக மாநில அளவில் நடை பெற்ற இப்போட்டிகள், முதல் முறையாக இந்த ஆண்டு அகில இந்திய அளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முதல் நாள் நடைபெற்ற துவக்க விழாவில், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ,அன்புராஜ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கடந்த நான்கு நாட்களும் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், கபாடிப் போட்டி ஆர்வலர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச் சியை சிறப்பித்தனர். “தந்தை பெரியார் இளைய திலகங்கள் கபாடிக் கழகம்” ஆண்கள், பெண்கள் இருவருக்கும் சமமான பரிசுத்தொகையை அறிவித்து, நடைமுறைப்படுத்திய பிறகு தான் மற்ற அணிகள் இதை பின்பற்றின என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பெரியார் வீர விளையாட்டு கழக மாநிலச் செயலாளர் ராமகிருட்டிணன் தனது உரையில் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

இறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தலா 3 லட்சம், இரண்டாம் பரிசு தலா 2 லட்சம், மூன்றாம் பரிசு 1 லட்சம், நான்கு சிறப்புப் பரிசுகள் தலா 1 லட்சம் மற்றும் ஏராளமான ஊக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்திய அளவில் தகுதி வாய்ந்த அணிகள் இரு பிரிவிலும் பங்கேற்று விளையாடினர். நான்காம் நாளில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, காபடிப் போட்டியின் சிறப்புகளைப் பற்றி உரையாற்றி, பெண்கள் அணிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், நடுவர் பெருமக்கள் அனைவருக்கும் கழகத் தலைவர் பரிசுகளை வழங்கியும், மரியாதை செய்தும் வாழ்த்தினார். அது சமயம், பாலா டிரேடர்ஸ் & கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் ப.பாலகிருட்டிணன் வருகை தந்திருந்த ஆளுமைகள் அனைவரையும் வரவேற்றும், மேடை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தும் சிறப்பித்தார். முன்னதாக, ஒக்கநாடு மேலையூர் நுழைவு வாயிலில் கழகத் தலைவரின் பவள விழா நிகழ்வை முன்னிட்டு அமைக்கப்பட்டு இருந்த வளைவில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் மற்றும் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட தோழர்கள் எழுச்சிகரமாக வரவேற்பு வழங்கி, அங்கிருந்து கபாடி நடைபெறும் ஆடுகளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தஞ்சை மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத் தலைவர் பூண்டி து.கிருஷ்ணசாமி (வாண்டையார்) தலைமை ஏற்று வாழ்த்தி உரையாற்றினார். மேனாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன், உரத்தநாடு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், ஒரத்தநாடு ஒன்றிய விவசாய அணிச் செயலாளர் க.அறிவரசு, சிங்கப்பூர் சக்திவேல், பேபி குழுமத்தினுடைய நிறுவனர் தொழிலதிபர் மா.சத்யன், புலவன்காடு தொழிலதிபர் உ.துரைமுருகன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஆர்.ஆர்.பாண்டியன், ஒக்கநாடு மேலையூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அ.சண்முகம், அரசு மருத்துவர் வெற்றிவேல், தொழிலதிபர் எஸ்.ராஜேந்திரன், திரைப்பட இயக்குநர் கிசோர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்து, இந்த மாபெரும் முயற்சியை வாழ்த்தி உரையாற்றினர். சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்திக் கொடுத்த, பெரியார் வீர விளையாட்டுக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ராமகிருட்டிணனுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மரியாதை செய்து, பாராட்டி சிறப்பித்தார்.

இறுதியாக, கழகத் தலைவர் உரையாற்றினார். அவர் தமது உரையில், “சடுகுடு என்பதுதான் கபாடி என்பதற்கான நமது சொல். இது தொடக்கத்தில் கிராமங்கள் அளவில் விளையாடப்பட்டு, தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்து, ஒலிம்பிக் போட்டி யிலும் சேர்க்கப்பட வேண்டிய விளையாட்டுதான்” என்று குறிப்பிட்டார். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகளின் சிறப்புகளைச் சொல்ல வந்தவர், “கபாடியில் உடல் நலனும், உள்ள நலனும் பேணப்படு கிறது. இதில் மூச்சுப் பயிற்சியும் சாத்தியமாகிறது” என்றார். தொடர்ந்து, “இதில் ஜாதி, மத, பேதம் எதுவும் கிடையாது. எல்லோரையும் ஒன்று சேர்க்கக் கூடியது. அதுமட்டுமல்ல, நாட்டுக்கு எல்லை உண்டு. இதற்கு எல்லைகள் கிடையாது. விளையாட்டு என்றால் மனிதம்தான் இருக்க வேண்டும். வேறு எதுவும் குறுக்கே வரக்கூடாது” என்ற இன்னொரு அதி முக்கியமான கருத்தை எடுத்து வைத்தார். மேலும் அவர், “இன்றைய தலைமுறை தொலைபேசியில் தொலைந்து விட்டது. அதை மாற்றுவதற்கு இது போன்ற விளையாட்டுகள் தேவை” என்றார். இறுதியாக, “வெற்றி என்பது ஊக்கப்படுத்துவதற்காகத்தான். தோல்வி அடைந்தவர்கள் மனம் தளராதீர்கள். தோல்வியின் அடுத்த படி வெற்றிதான்” என்றும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக உரையாற்றி நிறைவு செய்தார்.

கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த பொதுமக்கள் என மூன்று மாடங்களும் போட்டிகள் தொடங்கிய மாலை 4 மணியிலிருந்து இறுதி வரையிலும் கலையாமல் விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி, விளையாட்டு நடைபெறுவது ஒக்கநாடு மேலையூரா என்ற சிறு கிராமத்திலா? அல்லது தரம் மிகுந்த பன்னாட்டு அரங்கிலா? என்று வியக்கும் வண்ணம் கபாடிக்கு ஆதரவு இருந்தது. முக்கிய சாலையிலிருந்து கபாடிப் போட்டியின் ஆடுகளத்திற்கு சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் இருக்கும். அந்த சாலையின் இரண்டு பக்கமும் ஒளிர் குழல் விளக்குகள் மற்றும் வண்ண வண்ணக் கொடிகள் மற்றும் பதாகைகள் கட்டப்பட்டு,  விளையாட்டுப் போட்டி என்கிற அளவில் இல்லாமல், அனைவருக்குமான பெரும் திருவிழா போலவே ஏற்பாடுகள் இருந்தன. மக்களும் சாரை சாரையாக வந்துகொண்டிருந்தனர். மாடங்கள் இடம் போதாமல் தரையிலும் அமர்ந்து மக்கள் ஆவலுடன் கபாடிப் போட்டியைக் கண்டுகளித்தனர். பெண்கள் மற்றும் ஆண்கள் அரை இறுதிப் போட்டியை முழுமையாகப் பார்வையிட்ட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், முன்னதாக போட்டி நடைபெறும் ஆடுகளத்தில் வீரர், வீராங்கனைகளை நேரில் சந்தித்து அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அடுத்து, பெண்கள் அரை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும், நடுவர்களுக்கு மரியாதை செய்தும், சிறந்த தனித் திறன் வீரர்களுக்கு தங்க மோதிரம் அளித்தும் உற்சாகப்படுத்தி விட்டு, இரவு 11 மணிக்கு மேல் முகாம் அலுவலகம் திரும்பினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *