மதுரை, பிப். 10- 1.1.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் மதுரை சிந்தனைமேடை சார்பாக நூல் அறிமுக விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் பழக்கடை அ.முருகானந்தம் தலைமையேற்று உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் சீ.தேவராஜ பாண்டியன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பேராசிரியர் முனைவர் சி.மகேந்திரன், ப.க. மாவட்டத் தலைவர் பால்ராஜ், மாவட்டச் செயலாளர் வீரபழனி வேல் ராஜன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
நிகழ்வினை தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் மற்றும் மாவட்ட செயலாளர் இராலி சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தினர்.
மதுரை மாநகர் மாவட்ட ப.க அமைப்பாளர் பா. சடகோபன் நிகழ்வில் இணைப்புரை வழங்கினார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, நூல் மதிப்புரை செய்ய வந்துள்ள அழகு பாண்டி, உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா ஆகியோரையும் அறிமுகப்படுத்தி யும், நூல் ஆய்வுரை ஏன் தேவை, திராவிட இயக்கம் எப்படி படிப்பகங்களை அமைத்தன, எப்படி வாசிப்பினால் வளர்ந்தது என்பதைப் பற்றி சுருக்கமாக எடுத்துரைத்து,அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இரண்டு நாளில் வருகிறது. அவரின் வாசிப்பை நேசிக்கும் பழக்கம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
தொடர்ந்து எழுத்தாளர் நக்கீரன் எழுதிய “சூழலும் சாதியும்” என்கிற நூலின் ஆய்வு உரையை இரா.அழகுபாண்டி வழங்கினார். இந்தியாவில் இருக்கும் ஜாதியக் கட்டமைப்பு அதை இன்றைக்கும் பாதுகாக்க நினைக்கும் பி.ஜே.பி.ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றை பற்றிக் குறிப்பிட்டு, சூழல் ஜாதி அமைப்பினால் எப்படி எல்லாம் கெடுக்கப்படுகிறது என்பதை,நூல் ஆசிரியர் எப்படிச் சுட்டிக்காட்டுகிறார் என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். பல்வேறு எடுத்துக்காட்டுகளை நூலில் இருந்து வாசித்துக் காட்டினார் .
தொடர்ந்து ‘டாக்டர் கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்’ என்ற புத்தகம் பற்றிய நூல் ஆய்வுரையை உளவியல் வல்லுநர் ஜெ.வெண்ணிலா நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் டாக்டர் கோவூர் அவர்களின் பிறப்பு, அவர் இலங்கைக்குச் சென்று அங்கு வாழ்ந்தது, எல்லா மதங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து, தான் பிறந்த மதமான கிறிஸ்தவ மதத்தை பல வகையிலும் ஆய்வுக்கு உட்படுத்தியது, அதன் மீது கேள்விகளை எழுப்பியது, உண்மையை உலகத்துக்கு உணர்த்துவதற்காக அவர் கொண்ட முயற்சிகள்,அவர் அறிவித்த பரிசுத்தொகை, இன்றைய மேலாண்மை உலகில் அவரின் இந்த நூல் எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பற்றி விளக்கி ஒரு மணி நேரம் உரையாற்றினார். உரையின் சிறப்பினைப் பற்றி அ.வேல்முருகன் சுருக்கமாக எடுத்துரைத்தார். நிறைவாக கழகப் பொறுப்பாளர் பாண்டி நன்றி கூறினார்.
முன்னதாக கழக வழக்குரை ஞரணி மாநில செயலாளர் மறைந்த மு.சித்தார்த்தன் மறைவுக்காக ஒரு நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
