சென்னை, பிப். 10- சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (9.2.2026) வழங்கினார்.
வருவாய்த்துறை சார்பில் கிண்டி வட்டம், கோட்டூர்புரம் ஜிப்ஸ் காலனி, அரசுப் பண்ணை மற்றும் மடுவன்கரை சமுதாய கூடம் ஆகிய இடங்களில் இந்த பட்டா வழங்கும் விழாக்கள் நடைபெற்றன.
பயனாளிகள்: 158 நரிக்குறவர் இனப் பயனாளிகள் உட்பட மொத்தம் 299 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகள் வழங்கப்பட்டன.
பட்டாக்களை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்தத் திட்டத்தின் பின்னணி குறித்துப் பகிர்ந்துகொண்டார்: “பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியின மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
அதன் ஒரு பகுதியாகவே, 18 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் தடையின்மைச் சான்று பெறப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது 1980ஆம் ஆண்டிலேயே இந்தப் பகுதி மக்களுக்கு வாக்குரிமை பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
முன்பு குடிசை வீடுகளாக இருந்தபோது அடிக்கடி ஏற்பட்ட தீ விபத்துகளைத் தடுக்க, அவர்களுக்கு ஓடு வேய்ந்த வீடுகள் கட்டித் தரப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது நிரந்தர இருப்பிடத்திற்கான பட்டா வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
