திருவனந்தபுரம், நவ.6 கேரள குண்டு வெடிப்பு விவகாரத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக வகுப்பு வாதத்தை தூண்டியதாக அந்த மாநிலத்தில், 54 பேர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கடந்த வாரம் நடந்த கிறித்துவ வழிபாட்டுக் கூட்டத்தில் குண்டு வெடித்ததில், மூவர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக வகுப்புவாத கருத்துக் களை, சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பியதாக, 54 வழக்குகள் கேரளா வில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் மேலும் கூறியதாவது: வகுப்பு வாதத்தை தூண்டி சமூக ஊடகங் களில் கருத்து பதிவிட்டவர்களின் போலிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுஉள்ளன. இதுபோன்ற போலி சுயவிபரங்கள் கொண்ட முகவரிகளை அடையாளம் காண ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்ஸாப்’ மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. இதற்காக ‘சைபர்’ காவல்துறையினரும், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.