165 ஆண்டுகளுக்கு முன் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முதல் பெண் எழுத்தாளர் முக்தா சால்வே எழுதிய கட்டுரை ‘மகர்’ மற்றும் ‘மாங்’ மக்களின் பெருந்துயரம்!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தமிழாக்கம்: சங்கமி

கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்து அவர் எழுதியுள்ள கட்டுரை எனினும், அன்றைய கொடுமைகளை – குமுறல்களை அறிந்துகொள்ள ஒரு பெண் எழுதியுள்ள இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.

இந்தியாவின் பெரும்பான்மை உழைக்கும் மக்களான சூத்திரர்களும் தீண்டத்தகாதவர்களும் – பார்ப்பனியத்தால் எப்படி விலங்கினும் கீழாக – கொடுமையாக நடத்தப்பட்டார்கள் என்பதை மகாத்மா ஜோதிராவ் புலே, பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் பலர் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இந்த ஒடுக்குமுறை, முதன் முதலாக 14 வயதுடைய தலித் சிறுமியின் (முக்தா சால்வே) பார்வையில் விளக்கப்பட்டுள்ளது. முக்தா சால்வே, புலே – சாவித்திரி பாய் புலே நடத்திய பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘முதல் தலித் பெண் எழுத்தாளர்’ என்று அறியப்படுகிற முக்தா சால்வே, பார்ப்பனிய சமூக அமைப்பின் மீது கொண்ட பெருங்கோபத்தை – 165 ஆண்டுகளுக்கு முன்பு மராத்தியில் இரு வாரங்களுக்கு ஒருமுறை வெளிவந்த ‘ஞானோதயா’ இதழில் – கட்டுரைகளாக வெளிப்படுத்தியுள்ளார். அக்கட்டுரைகள், ‘மகர்’ மற்றும் ‘மாங்’ மக்கள் சந்திக்கும் துயரங்கள்’ “Mang Maharachya Dukhvisayi” என்ற தலைப்பில் இரண்டு பகுதிகளாக வெளிவந்தன.

முதல் மற்றும் இரண்டாம் பகுதி முறையே 15, பிப்ரவரி 1855 மற்றும் 1, மார்ச் 1855 ஆகிய தேதிகளில் வெளிவந்துள்ளன. பிரஜ் ரஞ்சன் மணி அவர்களின் ஆங்கில மொழியாக்கத்தில் இக்கட்டுரைகள் forwardpress.in என்ற இணையதளத்தில் 15 பிப்ரவரி 2020 அன்று வெளிவந்தன. அதன் தமிழ் மொழிபெயர்ப்பை ‘தலித் முரசு’ வெளியிட்டுள்ளது.

விலங்கினும் கீழாகக் கருதப்படுகிற ஒரு தீண்டத்தகாத பெண்ணாகிய என் இதயத்தின் அறைகள், என் மக்கள் (‘மகர்’களும் ‘மாங்’குகளும்) படும் பெருந்துயரத்தால் நிறைந்துள்ளது. (இறைவன் இதைச் செய்ததாக உணர்கையில் நான் உறுதிமிக்கப் பணிவு கொள்கிறேன். உயிரினங்களைப் படைத்திட்ட இறைவனை உருகித் தொழும்‌ வேளையில் இக்கட்டுரையை எழுதும் துணிச்சலை நான் பெறுகிறேன்.)

மகளிர் அரங்கம்

‘மகர்’களையும், ‘மாங்’குகளையும் மட்டுமல்ல; பார்ப்பனர் களையும் படைத்திட்ட கடவுள் எனக்களித்த அறிவாற்றலைக் கொண்டு இதை எழுதுகிறேன். என் உழைப்பின் நற்பயனுக்கு அவர் அருள்புரிவாராக! தங்களை ‘உயர்ந்த’ வகுப்பினராகக் கருதிக் கொள்ளும் பார்ப்பனர்கள், எங்கள் மீது வெறுப்பு கொள்கின்றனர். வேதங்களைக் கொண்டு அவர்களுக்கு மறுப்புரைக்க முயன்றால் வேதங்கள் தங்களுக்கே உரிய தனிச் சொத்து என்கின்றனர். பார்ப்பனர்களுக்குரிய ஒன்று நமக்கானதாக இருக்க முடியாது என்பது தெளிவு. ‘அறிவின்’ மூலாதாரமாகக் கருதப்பட்ட வேதங்களை பார்ப்பனர்களே கைப்பற்றி இருந்தனர்; நாம் கல்வி மறுக்கப்பட்டவர்கள் ஆனோம். கல்வி மட்டுமல்ல நாம் மதமற்றவர்கள் ஆனோம்.

வேதங்கள் நமக்கானவை அல்ல என்றானபோது அதைப் பணிந்து நடக்கும் தேவையும் நமக்கில்லை என்றாகிறது. வேதங்களைக் காண்பது கூட நமக்கு கடும் பாவங்களை கொண்டு சேர்க்கும் என்கின்றனர் பார்ப்பனர்கள். எனில் அதைப் பின்பற்றுவது, நமது முட்டாள்தனத்தின் உச்சம் என்றாகாதா? முஸ்லிம்,‌ ஆங்கிலேயர் மற்றும் பார்ப்பனர்களின் வாழ்க்கை நெறி முறை குர்ஆன், பைபிள் மற்றும் வேதங்கள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது. நன்மையோ தீமையோ அவரவர் மதங்களைக் கொண்டிருப்போர், மதமற்ற நம்மைக் காட்டிலும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

ஓ! இறைவா! எங்களுடைய மதம் தான் என்ன? உம்முடைய மதத்தை எமக்கு கற்றுக் கொடு. நாங்கள் அதன்படி எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்கிறோம். பிறப்பின் வழி பாகுபாடு கற்பிக்கும் மதம், உலகில் இருந்தும்; எங்கள் மனங்களில் இருந்தும் துடைத்தெறியப்படட்டும்!

நாங்கள் (‘மகர்’ மற்றும் ‘மாங்க்’) எங்கள் நிலங்களில் இருந்து அவர்களால் தூக்கி வீசப்பட்டோம். அவர்கள் அங்கே உயர்ந்த கட்டடங்களை எழுப்பிக் கொண்டனர். அதுமட்டுமல்ல, ஈயச்செந்தூரத்தை எண்ணெயில் கலந்துக் கொடுத்து நாங்கள் கொல்லப்பட்டோம். நாங்கள் பலியிடப்பட்டு புதைக்கப்பட்ட நிலங்களின் மீது அவர்கள் கட்டடங்களை எழுப்பி கொண்டனர். பார்ப்பனர்களால் நாங்கள் மனித மாண்பில் இருந்து கீழிறக்கப்பட்டோம்; பசுக்கள், எருமைகளைக் காட்டிலும் கீழானவர்களானோம். அவ்வளவு ஏன்? பாஜிராவ் பேஷ்வாக்களின் ஆட்சியில் நாங்கள் கழுதைகளை விடவும் மோசமாக நடத்தப்பட்டோமே. நீங்கள் ஒரு கழுதையைத் தாக்கினால் அதன் உரிமையாளர் உங்களைத் திருப்பித் தாக்க முனைவார். ஆனால், நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகும் எங்களுக்காக யார் இருக்கிறார்கள்? பேஷ் வாக்களின் ஆட்சியில் ‘மகர்’களோ ‘மாங்’குகளோ ஆதிக்க ஜாதிப் பிரிவினர் பயிற்சி மேற்கொள்ளும் திடலைக் கடக்க நேர்ந்தால் அவர்களின் தலை துண்டிக்கப்பட்டு, அதைக் கொண்டு அதே திடலில் மட்டைப் பந்து விளையாடப்படும்.

அவர்களின் வாசல்களைக் கடக்க நேர்ந்தாலே தண்டிக்கப்படும் நாங்கள், எப்படி கல்வி மற்றும் சுதந்திரத்தைப் பற்றி சிந்திக்க முடியும்? அப்படியே நாங்கள் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டதை ஒரு பாஜிராவ் அறிய நேர்ந்தால், அது அவர்களின் பிழைப்புக்கே உலை வைக்கும் முயற்சியாகக் கருதப்படும். “நீங்கள் கல்வி பெறும் துணிச்சல் எப்படி வந்தது? பார்ப்பனர்களாகிய நாங்கள் தீண்டத்தகாதவர்களாகிய உங்களிடம் எங்களின் வர்ணக் கடமைகளை கையளித்து விட்டு, உங்களின் சவரக் கத்தியை ஏந்திக் கொண்டு கைம்பெண்களுக்கு மொட்டை அடிக்கச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?” என்ற கொந்தளிப்புடன் எங்களைத் தாக்கவும் முற்படுவர்‌.

அடுத்து, எங்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதால் மட்டுமே பார்ப்பனர்கள் மன நிறைவு கொள்வார்களா? இல்லவே இல்லை! பார்ப்பனிய சேவகரான பாஜிராவ் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் காசிக்கு சென்று அங்கே இழிவுக்குள்ளாகி இறந்தார். இங்கே ‘மகர்’கள் பார்ப்பனிய பண்புக்கூறுகளை உள்வாங்கியவர்களாக ‘மாங்’குகளை தங்களிலும் தாழ்ந்தவர்களாகக் கருதி ஒதுக்குவதுடன் அவர்களுடைய நிழலைத் தொடுவதையும் தீட்டுக்குரியதாகக் கருதுகின்றனர். பூணூல்களையும் ‘புனிதமான’ ஆடைகளையும் அணிவதன் மூலம் தங்களின் உயர்வுத்தன்மையை பொதுவில் அறிவிக்கும் பார்ப்பனர்கள், தீண்டாமைக் கொடுமையால் பாதிப்புக்குள்ளாகும் எங்கள் மீது என்றாவது இரக்கம் கொண்டதுண்டா? தீண்டாமை எங்களது வேலைவாய்ப்புகளைத் தடுத்தது. அதனால் பொருளீட்ட முடியாமல் முடங்கிப் போய் வறுமையில் உழல்கிறோம். ஓ படித்த பண்டிதர்களே! உங்கள் புரோகிதப் புரட்டுகளை நிறுத்திவிட்டு நாங்கள் சொல்வதை சற்று கவனியுங்கள்.

தலைக்கு மேல் கூரை கூட இல்லாத நிலையில் தான் எங்கள் பெண்கள் தங்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள். பனியிலும் மழையிலும் அவர்கள் எப்படி அல்லலுறுகின்றனர் என்பதை உங்களால் உணர முடிகிறதா? பிள்ளை பெறும் வேளையில் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் மருத்துவம் பார்த்துக் கொள்ளக் கூட அவர்களிடம் பணம் இல்லை என்பதை அறிவீர்களா? கட்டணமின்றி அவர்களுக்கு மருத்துவம் பார்க்கும் மனிதமிக்க ஒரு மருத்துவராவது உங்களிடம் உண்டா?

பார்ப்பனக் குழந்தைகளால் எங்கள் (‘மகர்’ மற்றும் ‘மாங்க்’) குழந்தைகள் கல்லடி பட்டு படுகாயமுற்றாலும் அவர்களுக்கு எதிராக புகார் செய்யும் துணிச்சலை நாங்கள் பெற்றிருக்கவில்லை. மிஞ்சிய உணவுக்காக பார்ப்பனர் வீடுகளில் தான் தஞ்சம் அடைய வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்களாக, அவர்கள் வலிகளை மறைத்து வாழப் பழகிவிட்டனர். ஓ இறைவா! எத்தனை கொடுமையான வேதனை இது! இப்பெருந்துயரத்தை விளக்கும் தருணத்தில் என் இதயம் கனத்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. இதை மேலும் தொடர்கையில் நான் உடைந்து அழக்கூடும். இக்கொடுமைகளைக் கண்ணுற்ற இறைவனின் கருணையால் வரவழைக்கப்பட்ட ஆங்கிலேயர், எங்கள் மீது அன்பு பாராட்டினர்; நாங்கள் மனிதர்களாக மதிக்கப்பட்டோம். எங்களுடைய வலிகள் – மனித மாண்பை மதிக்கும் ஆங்கிலேயர் ஆட்சியில் – எவ்வாறு கணிசமாகக் குறைந்துள்ளன என்பதைக் காண முடியும். முன்னர், கேட்பாரற்ற‌‌ நாங்கள் காரணங்களின்றி பார்ப்பனர்களால் (கோகலே, அபாத்தே,  த்ரிம்காஜி, அந்தாலா, பன்சாரா, காலே, பெஹ்ரே ‌இன்னும் பல…) கொடூரமாக நடத்தப்பட்டோம்; கர்ப்பிணிகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. இது இப்போது தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. புனேயில் பேஷ்வாக்களின் ஆட்சியில் ‘மகர்’களும் ‘மாங்’குகளும் அனுபவித்து வந்த வன்கொடுமைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கோட்டைகளும் மாளிகைகளும் எழுப்பும் முன் அதன் ஆதாரத்தில் நாங்கள் நரபலி இடப்படும் வழக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது. முன்னர், நாங்கள் (‘மகர்’ மற்றும் ‘மாங்க்’) நல்ல ஆடைகள் அணிவது கூட பார்ப்பனர்களின் கண்களை உறுத்தும். அவ்வாடைகளை நாங்கள் திருடி அணிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினர். எங்களுடைய மானத்தைக் காக்க நாங்கள் அணியும் ஆடைகள் கூட பார்ப்பன மதத்தின் புனிதத்தை கெடுத்து விடும் என்று அவர்கள் அஞ்சினர்.

அதற்காக நாங்கள் மரங்களில் கட்டப்பட்டு தண்டிக்கப் பட்டோம். ஆனால் ஆங்கிலேய ஆட்சியில் நாங்கள் விரும்பிய ஆடையை அணியும் உரிமையைப் பெற்றோம். முன்னதாக, தீண்டத்தகாதவர் இழைக்கும் குற்றம் எத்தகையதானாலும் அதனால் பாதிக்கப்படுவது, பார்ப்பன  ஜாதிக்காரர்களாக இருந்து விட்டால் போதும் எந்தக் கேள்வியும் இன்றி எங்களது தலைகள் துண்டிக்கப்படும். இன்று ஆங்கிலேயர் ஆட்சியில் ‘ஜாதிக்கொரு நீதி’ என்றிருந்த நிலை மாறியுள்ளது. அதிகப்படியான சுரண்டல் வரி விதிப்பு குறைந்துள்ளது. தீண்டாமை வழக்கம் சில இடங்களில் கைவிடப்பட்டுள்ளது. இன்று எங்களால் பொது இடங்களில் சுதந்திரமாக நடமாட முடிகிறது. பக்கச்சார்பற்ற ஆங்கிலேய ஆட்சியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பார்ப்பனர்களால் எங்கள் மீது ஏவப்பட்ட வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைத்துப் பார்ப்பனர்களும் அடங்கிவிட்டனர் என்று சொல்ல முடியாது என்றாலும் முன்போல் எங்களை அவர்கள் நடத்த முடிவதில்லை. ஆங்கில கல்வியின் வழி ஜனநாயகத்தை உள்வாங்கிய சில பார்ப்பனர்கள், எங்கள் விடுதலைக்கு துணை நின்றதால் ஜாதி நீக்கம் செய்யப்பட்டனர்.

எங்கள் மீது பரிவு கொண்ட உன்னத மனிதர்கள் சிலர் எங்களுக்காகப் பள்ளிகளைத் திறந்தனர். அத்தகைய பள்ளிகளுக்கு மனமுவந்து உதவ முன்வருகிறது ஆங்கிலேய அரசு. ஓ மகர்களே! மாங்குகளே! நீங்கள் ஏழ்மையால் நலிவடைந்துள்ளீர்கள். அறிவெனும் மருந்தைக் கொண்டே நீங்கள் உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்ள முடியும். அது உங்களை மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்கும். அறிவுடைமை உங்களை நெறி பிறழச் செய்யாது; சுரண்டலில் இருந்து உங்களை காக்கும். மனித மாண்பில் இருந்து உங்களை கீழிறக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும். அந்த துணிச்சல் எவருக்கும் இனி வராது. எனவே கல்வியறிவைப் பெற, கடுமையாக உழையுங்கள். அது உங்களை மதிப்பு மிக்கவர்களாக மாற்றும். சமூகத்திற்குப் பயன்தராத கல்வி அறிவை பெற்றிருப்பவர்களும் இங்குண்டு என்பதால், எழுத்தறிவு மட்டுமே உங்களை அறிவாளிகள் ஆக்கிவிடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *