பிரதமரின் ஜூம்லா பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைத்த கழகத் தலைவர்!

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘டபுள் என்ஜின்’ என்றாலே ஒரு என்ஜின் பழுதாகி விட்டது,
இழுக்க இன்னொன்று தேவை என்பதுதானே பொருள்?
தமிழ்நாட்டில் ‘சிங்கிள் என்ஜினே’ சிறப்பாக இருக்கிறது;
நம்முடைய முதலமைச்சரும் சுயமரியாதையுடன் இழுக்கிறார்!

சேலம், பிப்.10 ‘‘‘டபுள் என்ஜின்’ என்றாலே ஒரு என்ஜின் பழுதாகி விட்டது, இழுக்க இன்னொன்று தேவை என்பதுதானே பொருள்? தமிழ்நாட்டில் ‘சிங்கிள் என்ஜினே’ சிறப்பாக இருக்கிறது; நம்முடைய முதலமைச்சரும் சுயமரியாதையுடன் இழுக்கிறார்’’ என்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஒப்பிட்டுக் காட்டி உரையாற்றினார்.

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் பரப்புரைக் கூட்டம், சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கிச்சிபாளையம், 3 ஆம் குறுக்குத் தெரு, நாராயண நகர், எம்.ஜி.ஆர்.மருத்துவமனை அருகில், 6.02.2026  அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்காக கழகக் கொடிகள், வரவேற்பு பதாகைகள் மூலம் சிறப்பாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு, மாவட்ட கழகத் தலைவர் வீரமணி ராஜூ தலைமையேற்க, மாவட்டச் செயலாளர் மூணாங்கரடு பெ.சரவணன் வரவேற்புரையாற்றிச் சிறப்பித்தார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், சேலம் மாவட்டக் காப்பாளர் கி.ஜவகர், மேட்டூர் கழக மாவட்டக் காப்பாளர் பழனி புள்ளையண்ணன், மாநில மகளிரணி துணைச் செயலாளர் ப.காயத்ரி, மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் கா.நா.பாலு, ஆத்தூர் கழக மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், மாவட்டச் செயலாளர் நீ.சேகர் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிகளான, தி.மு.க. பகுதிக் கழகச் செயலாளர் ஜெய், தி.மு.க. 41 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் பூங்கொடி சேகர், தி.மு.க. 41 ஆவது கோட்டக் கழக செயலாளர் அசோக்குமார், தி.மு.க. 42 ஆவது கோட்டக் கழக  செயலாளர் சத்யன், தி.மு.க. இலக்கிய அணி மாவட்டத் தலைவர் வீர.பழனியப்பன், நாமக்கல் மாவட்டக் கழகத் துணைத் தலைவர் வீர.முருகன், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.கே. சதாம் உசேன், நாமக்கல் மாவட்ட கழகத் துணைத் தலைவர் வீர.முருகன், தி.மு.க. மாவட்ட மகளிர் தொண்டரணி துணைத் தலைவர் புவனேஸ்வரி, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் டாக்டர் சங்கேஷ்வரன், ம.தி.மு.க. மாநகரச் செயலாளர் அருள் மாது, ஆத்தூர் மாவட்டத் தலைவர் அ.சுரேஷ், ஆத்தூர் மாவட்டக் காப்பாளர் த.வானவில், சி.பி.அய்.மாவட்டச் செயலாளர் ஏ.மோகன், இ.யூ.மு.லீக். மாவட்டச் செயலாளர் ஏ.அலாவுதீன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

பெரியார் உலகம் நிதியளிப்பு!

கழகச் சொற்பொழிவாளர் முனைவர் க.அன்பழகன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, பெரியார் உலகம் நிதியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அடுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் பெயர்களை வாசிக்க வாசிக்க, உரியவர்கள் காசோலைகளுடன் மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் தங்களின் பங்களிப்பை வழங்கி மகிழ்ந்தனர். அதன் தொடர்ச்சியாக, மாவட்ட இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை ஆகிய அமைப்புகளின் பொறுப்பாளர்களான மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.கார்த்திக், செயலாளர் துரை.சக்திவேல், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், செயலாளர் ச.கார்த்திக் ராஜா, மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் ப.கஸ்தூரி, செயலாளர் ச.கனிமொழி ஆகியோர் இணைந்து, பலத்த கைதட்டல்களுக்கிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது எடைக்கு எடை என 53 கிலோ எடையுள்ள நாணயங்களை வழங்கி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து மாவட்டக் கழகத்தின் சார்பில் கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது. அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் என வரிசையாக வந்து கழகத் தலை வருக்குப் பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். புன்முறுவலுடன் அனைத்தையும் ஏற்றார். மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு கழகத் தலைவரும் மரியாதை செய்து சிறப்பித்தார். நிறைவாக, கழகத் தலைவர் நிறைவுரை, சிறப்புரை ஆற்றுவார் என்று அழைப்பு விடுக்கப்பட்டு பேசத் தொடங்கினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

ஆசிரியர் தமது உரையை, எடுத்த எடுப்பிலேயே, ‘‘பெரியார் சேலத்தை தன் தாய் வீடு என்று சொல்வார்” என்றார். அடுத்து, “தாய் வீடு மட்டுமல்ல, மாமியார் வீடும் கூட” என்று அன்னை நாகம்மையாரைக் குறிப்பிட்டுச் சொன்னதும் கைதட்டலும், சிரிப்பும் சேர்ந்து எழுந்தது. தொடர்ந்து, தன்னை பாராட்டக் கருதி, 93 வயதிலும் இப்படி உழைக்கிறாரே என்று பேசுபவர்கள் எல்லாம் குறிப்பிடுவதைச் சுட்டிக்காட்டி, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் வயது 103 என்றும், தன்னுடைய வயது 93 தான். ஆகவே இது ஒன்றும் பெரிதல்ல. இது சின்னக்கோடு – அது பெரிய கோடு. அவ்வளவுதான் என்று கூறி, கூட்டத்தை கலகலப்பாக்கினார்.

திராவிடர் இயக்கத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த, 1944 இல் நடைபெற்ற திராவிடர் கழகம் பெயர் மாற்றத் தீர்மானத்தை நினைவுபடுத்தி, ‘‘இதே சேலத்தில்… அன்றைக்கு மேசை மீது ஏறி நிற்க வைக்கப்பட்டு பேசியவன் நான்” என்பதை நினைவுபடுத்தினார்.

மேலும், ‘‘எதிர்பார்த்ததை விட பெரியார் உலகத்திற்கு நிதி கொடுத்துள்ளீர்கள். அனைவருக்கும் எனது தலை தாழ்ந்த நன்றிகள்” என்றார். தொடர்ந்து தலைப்பைச் சுட்டிக்காட்டி, “மனிதர்களுக்கிடையே பேதங்களை உருவாக்கும் ஆர்.எஸ்.எஸ். சின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி, ஜாதி பேதங்கள் இல்லை என்று சுட்டிக்காட்ட வந்த பெரியார், “பார்ப்பார நாயின்னு ஒன்னு உண்டா? பற நாயின்னு ஒன்னு உண்டா?” என்று, சுயமரி யாதை இழந்து எருமையை விட மனிதத் தோல் தடித்துப் போயிருந்த அந்தக் காலத்தில், மக்களுக்கு ‘சுருக்’கென்று தைக்கும்படி கேட்டார்” என்றார்.

இந்த பேதங்களுக்குக் காரணம் மனுதர்மம் என்பதை அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகம் மூலம், ஆதி மூலத்திற்கே சென்று தரவுகளை மக்கள் முன் எடுத்து வைத்தார். அந்த மனு தர்மம் தான், நம்மை எல்லா தளங்களிலும் தாழ்த்தியது என்பதைக் குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாக, ‘‘200 ஆண்டுகளுக்கு மேல் நம்மை ஆண்ட பிரிட்டீசார் ஆங்கில மொழி நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அது கால்டுவெல் போன்றவர்களால் தமிழை உயர்த்தியிருக்கிறது. ஆனால், சமஸ்கிருதம் தமிழை தாழ்த்தி இருக்கிறது. தமிழ் நீஷப் பாஷை? சமஸ்கிருதம் தேவ பாஷை! என்று பிரித்து வைத்ததன் அடிப்படையில் தான், சங்கராச்சாரியார் தமிழில் பேசினால் தீட்டு என்று சொன்னார்” என்பதை அம்பலப்படுத்தினார்.

‘‘அதற்குப் பின்னும் தமிழன் வீட்டுத் திரு மணங்களில் தமிழ் இல்லை எனும் அவலம் நிலவியது. நம் வீட்டுத் திருமணங்களில் இருந்த ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை போக்கத்தான் பெரியார், சுயமரியாதைத் திருமண முறையை ஏற்படுத்தினார். எல்லாவற்றையும் தாண்டி, ‘திராவிட மாடல்’ ஆட்சி உருவாகாமல் போயிருந்தால் இன்று நமக்கு 69% இட ஒதுக்கீடு இருந்திருக்காது; கல்வி கிடைத்திருக்காது; வேலை வாய்ப்புக்கு நாம் சென்றிருக்க முடியாது; இந்த சுயமரியாதை வாழ்வு கிடையாது” என்று அடுக்கிக் கொண்டே சென்று, திராவிடர் இயக்கத்தின் அவசி யத்தை ஆழமாகப் புரியவைத்தார்.

அண்ணா வழியையும் விட்டுவிட்டார்கள்;
அம்மா வழியையும் விட்டுவிட்டார்கள்!

இப்படி கல்வி, சுகாதாரத்தில் இந்தியாவிலேயே முதன்மை பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கையில், திராவிடர் இயக்கத்தின் ஓர் அரசியல் பிரிவாக கருதப்படுகிற, அ.இ.அ.தி.மு.க. திராவிட  இயக்கத்தின் கொள்கை எதிரியான பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளதை கண்டிக்கும் வகையில், ‘‘அ.இ.அ.தி.மு.க.வினர் அண்ணா வழியை விட்டுவிட்டீர்கள்; அம்மா வழியையும் விட்டுவிட்டீர்கள்; இப்போது அமித்ஷா வழியில் செல்கிறீர்களே… இது நியாயம்தானா?’’ என்று கேட்டதும் மக்கள் தன்னிச்சையாகச் சிரித்துவிட்டனர். உடனடியாக கழகத் தலைவர், “நீங்கள் சிரிக்கிறீர்கள். எங்களுக்கு வேதனையாக இருக்கிறது” என்றார்.

‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்க ளின் சிறப்புகளையும் பட்டியலிட்டு, “வருகின்ற சட்டப்பேர வைத் தேர்தலில் மறுபடியும் தி.மு.க.கூட்டணி தான் ஆட்சிக்கு வரும். அதற்கு உங்கள் ஒத்துழைப்பும் தேவை” என்று கூறி தமது உரையை நிறைவு செய்து கொண்டார்.

நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் சு.இமய வரம்பன் நன்றியுரை ஆற்றி நிகழ்வு சிறக்கச் செய்தார்.

பங்கேற்றோர்

நிகழ்வில் மேனாள் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்டத் துணைச் செயலாளர் அ.இ.தமிழர் தலைவர், பகுத்தறிவாளர் கழக மேட்டூர் மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி, பொதுக்குழு உறுப்பினர் க.கமலம், வீரபாண்டி ஒன்றியத் தலைவர் ஜெ.காளியப்பன், சேலம் மாவட்ட மகளிரணித் தலைவர் த.சுஜாதா உள்ளிட்டோர் மற்றும் இந்தியா கூட்டணிக் கட்சிப் பொறுப்பாளர்கள், தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் திரண்டு வந்திருந்து கருத்துரைகளைக் கேட்டு பயன் பெற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *