சென்னை,ஏப்.18- தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (17.4.2023) மாற்றுத் திறனாளிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத் தப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு மட்டும் 2,816 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து அந்தக் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
குழந்தைத் திருமண தடைச் சட்டமானது இந்திய அரசால் 2006ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. தமிழ்நாடு குழந்தைத் திருமண தடுப்பு விதிகள் 2009, மாநில அரசால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இச் சட்டம் ஆண்களுக்கு 21 வயது மற்றும் பெண்களுக்கு 18 வயது என்பதை திருமண வயதாக குறிப்பிடுகிறது.
குழந்தைத் திருமணம் என்பது தானாக நடவடிக்கை எடுக்கத்தக்க மற்றும் பிணையில் விடுவிக்க இயலாத குற்றமாகும். குழந்தைத் திருமணம் என்பது செல்லத்தக் கதல்ல மற்றும் ரத்து செய்யப்படக்கூடியது.18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், குழந்தைத் திருமணத்தில் ஈடுபட் டால் அவருக்கு 2 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2022ஆம் ஆண்டில் மாநிலத்தில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன” என்று அதில் கூறப் பட்டுள்ளது.