ஆண் – பெண் இடையேகூட பேதத்தை உருவாக்கக் கூடியது சமஸ்கிருத மொழி – பேதத்தை உருவாக்குகிற காரணத்தால், ஒரு போதும் அது சமத்துவத்தை விரும்பக்கூடிய என் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது!
இது வெறும் மொழிக்கான உரிமை அல்ல; சமத்துவத்திற்கான குரல்!
சென்னை, பிப்.9 ஆண் – பெண் இடையே பேதத்தை உருவாக்கக் கூடியது சமஸ்கிருத மொழி – பேதத்தை உருவாக்குகிற காரணத்தால், ஒரு போதும் அது சமத்துவத்தை விரும்பக்கூடிய என் மொழியின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இது வெறும் மொழிக்கான உரிமை அல்ல; சமத்துவத்திற்கான குரல் என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா!
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் கடந்த 29.1.2026 அன்று மாலை 6 மணி யளவில், கலைமாமணி முனைவர் மருத்துவர் தஞ்சை சு.நரேந்திரன் எழுதிய, ‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்பு ரையாற்றினார். அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
மொழிக்காக நாம் போராடுகிறோம் என்றால், பண்பாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடுகிறோம் என்று அர்த்தம்!
எனவே, மொழிக்காக நாம் போராடுகிறோம் என்று சொன்னால், பண்பாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடுகிறோம் என்று அதற்குப் பொருள். பேதம் இருக்கக்கூடாது அந்த மொழியில்! அதுதான் பெரியா ருடைய கொள்கை. எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்ன வென்றால், நம்முடைய டாக்டர் ஆய்வு செய்யும்போது, ஆழமாக எதையுமே அதன்படிச் சொல்லக்கூடியவர்.
‘‘நம் புத்தித் தெளிந்ததா?
இருந்த புத்தியும் போனதா?’’
அதில், அய்யா அவர்கள் எழுதிய கட்டுரையில் இருந்து ஒரு பகுதியை எடுத்துச் சிறப்பாக அதிலிருக்கக் கூடிய சொல்லைப் பயன்படுத்துகிறார். கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், அதன் முன் பகுதியை மட்டும் அவர் படித்தார். நான் படிக்கும்போது அதற்கு அடுத்தையும் சேர்த்து அடிக்கோடிட்டு இருக்கிறேன். அதில், ‘‘திவசம், திதி, கல்யாணம், வைகுந்தம், சொர்க்கம், மோட்சம், நரகம், சாலோக சாரூபம், சாமீப சாரு’’ பாட்டு பாடும்போது அந்தப் பாட்டில் உள்ள சாலோக சாமீப சாரு என்று உள்ளதை அய்யா எடுத்துச் சொல்வார்; தொடர்பால் நம் புத்தி தெளிந்ததா? என்ற வார்த்தை களைக் குறிப்பிட்டு, பெரியார் கேட்கிறார், ‘‘நம் புத்தித் தெளிந்ததா? இருந்த புத்தியும் போனதா?’’ என்று.
வெறுப்பு வேறு; மறுப்பு வேறு!
அடுத்து, பேதம் என்று சொன்னேன் பாருங்கள்; நாம் வலிந்து சொல்லவில்லை. ஏதோ சமஸ்கிருதம் பேசுகின்றவர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்பதற்காகவோ அல்லது அவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ அல்ல; நமக்கு வெறுப்பும் இல்லை; ஆனால், மறுப்பு சொல்லுகிறோம்; வெறுப்பு வேறு; மறுப்பு வேறு; அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருப்பு இருக்கிறது, அதைச் சொல்வதற்கு.
ஆகவே, அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு சொல்கிறபோது, பேதத்தை எப்படி அந்தச் சொற்க ளிலேயே உண்டாக்குகிறான் என்பதைக் கவனிக்க வேண்டும். தமிழ் மொழியைப் பொருத்து சமத்துவம் வருகிறது. வள்ளுவர் குறளை எடுத்துக்கொண்டால், பெருமையாக நாம் என்ன சொல்கிறோம்? ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஒக்கும், உவமை – சமம் – வாங்க உட்காருங்கள்; சமத்துவம். ஆனால், எட்டி நில், தள்ளி நில் என்றால், மனிதர்களிடையே பேதம் உண்டாவது எப்படியோ, அதே மாதிரி திருமணம் பற்றியும் அய்யா குறிப்பிடுகிறார்.
‘விவாகம்’ என்றால், பிரித்து வைப்பது; இரண்டாக உடைப்பது; பிளவுபடுவது!
இன்றைக்கும் ‘‘விவாக சுப முகூர்த்த பத்திரிகை’’ என்று சமஸ்கிருதத்தில்தான் குறிப்பிடுகிறார்கள். விவாகம் என்றால், என்ன அர்த்தம்? ஆட்சி மொழிக்காவ லர் கீ.இராமலிங்கனார் சொல்வார்; விவாகம் என்றால், பிரித்து வைப்பது; இரண்டாக உடைப்பது; பிளவுபடுவது என்று சொல்லுவார். இது ஒரு பக்கத்தில் இருக்கட்டும்.
அய்யாவின் அந்தக் கட்டுரையில் இருந்து எடுத்து டாக்டர் அவர்கள் இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டுகிறார்.
சுயமரியாதைத்
திருமணத்தினுடைய சிறப்பு!
‘தாரா முகூர்த்தம்’, ‘கன்னிகாதானம்’ என்ற பெயர்கள் வந்த பிறகு, பெரியாருக்குத் தமிழ் தெரியாது; பெரியார் இலக்கியவாதி இல்லை; பெரியார் தமிழுக்கு என்ன செய்துவிட்டார்? என்று கேட்கிற, சில ‘‘மகா மகா மகா மகா அறிவாளிகள்’’ இருக்கிறார்கள் நம்முடைய நாட்டில். அந்த அறிவாளிகள் இருக்கிறார்களே, எந்த வாளியாக இருந்தாலும், அந்த வாளிகள் ‘மொண்டு’ கொள்ள வேண்டிய விஷயம், இந்தத் தடாக நீரைத்தான்; அந்த அறிவாளிகள் கற்றுக்கொள்வதில்லை; மொண்டு கொள்ளவேண்டும்; வாளியில் மொண்டு கொள்வது என்று சொல்வார்கள் அல்லவா, அதுமாதிரி வரக்கூடிய வகையில், ‘‘கன்னிகாதானம்’’ இந்தச் சொல்லை எடுத்துக்கொள்ளுங்கள். கன்னி என்றால் என்ன? பெண்; ‘தானம்’ என்றால் என்ன? தர்மம். ஆணுக்கு அப்படி கிடையாது. பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போது, சமமாகக் கிடையாது. சுயமரியாதைத் திருமணத்தினுடைய சிறப்பே அதுதான். நண்பர்களாகிய நாம், இரண்டு பேருக்கும் சமத்துவம் உண்டு. ஒருவர் எஜமானன் அல்ல; இன்னொருவர் அடிமை அல்ல. ‘‘கன்னிகாதானம்’’, ‘‘தாரா முகூர்த்தம்’’ பெண்ணை தாரை வார்த்து விடுதல்.

தண்ணீரை விட்டு, கன்னிகாதானம் கொடுத்து விடுவது. ஆனால், சடங்கு செய்யும்போது என்ன செய்வார்கள், தண்ணீரை ஊற்றி, சுற்றி அதைக் கையில் விடுவான். சாதாரணமாக கிராமங்களில் பிள்ளைகளிடம் பேசும்போது ஒரு சொல்லைச் சொல்லுவோம். ‘‘காசு கொடுத்தேனே, என்னப்பா பண்ணீங்க?’’ என்று சின்னப் பிள்ளையிடம் கேட்டால், ‘‘அய்யா, வாங்கிட்டுப் போனேன். வழியில் அது கீழே விழுந்தது அய்யா; அதைத் தேடித் தேடிப் பார்த்தேன், தாராவித்துட்டேன்யா’’ என்று சொல்வார். இந்த சொல்லாட்சியில், சொற்கள் பயன்படுத்தியதில், தாராந்து போச்சு; ‘‘தாரை வார்த்து விட்டேடேன்’’ என்று சுருக்கி விட்டான்.
வெறும் மொழிக்கான உரிமை அல்ல; சமத்துவத்திற்கான குரல்!
‘‘தாரை வார்த்து விட்டேன் என்றால், கை நழுவிப் போய்விட்டது; இனிமே அது கிடைக்காது.’’ பெண்ணை வளர்த்து, அவர்கள் வாழ்க்கை துணை நலத்தை ஏற்கும் போது, பேதத்தை நிலைநாட்டி, ஆணி அடித்தது போன்ற நிலையில், இனி ஒன்றும் திரும்பக் கிடைக்காது, அதி லேயே இன்னொன்று விற்கப்பட்ட பொருள் என்றும் சொல்லி, ஆண் – பெண் இடையே ஒரு பெரிய பேதத்தை உருவாக்கக் கூடியது ஒரு மொழி – அந்த மொழி, பேதத்தை உருவாக்குகிற காரணத்தால், ஒரு போதும் அது சமத்துவத்தை விரும்பக்கூடிய என் மொழி யின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது. இது வெறும் மொழிக்கான உரிமை அல்ல; சமத்துவத்திற்கான குரல்!
எல்லோரும் ஒன்று என்று சொல்லக்கூடிய அள விற்கு, சொல்லக்கூடிய எழுச்சி. அதுதான் இந்தப் போராட்டம். இது மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்கொண்டு அவர்கள் ஆய்ந்து சொல்கிறபோது, மிகச் சிறப்பாக எடுத்து சொல்லியிருக்கிறார்.
தமிழ் வார்த்தையில்
‘கன்னிகாதானம்’ உண்டா?
அதோடு இன்னொன்றையும் அய்யா விளக்கிச் சொல்கிறார். ‘தாரா முகூர்த்தம்’, ‘கன்னிகா தானம்’ என்ற பெயர்கள் வந்த பிறகுதானே, நம் பெண்கள் கணவனின் கை பொம்மைகள் ஆனார்கள். ‘கன்னி காதானம்’ என்பதற்குத் தமிழ் வார்த்தை ஒன்றைக் கண்டுபிடியுங்களேன். திருவள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை’ என்றுதானே கூறுகிறார்.
தமிழ் வார்த்தையில் ‘கன்னிகாதானம்’ உண்டா? அதற்கு என்ன விளக்கம் சொல்லுங்களேன் என்று கேட்கிறார். திருவள்ளுவர் அடுத்து, பெரியாருடைய ஆழமான சிந்தனை என்பது, இப்படி எல்லாத் துறை களிலும் அய்யா போயிருக்காரு. மற்றவர்கள் நினைக்கிற மாதிரி அல்ல. அதை அழகாக இந்தப் புத்தகத்தில் எடுத்து காட்டுகிறார். இதை நாங்கள் எழுதுவதை விட, டாக்டர் போன்றவர்கள் எழுதும்போது, அதற்குப் பல மடங்கு நல்ல விளைவு உண்டு. அதிகமான வாய்ப்பு. ஏனென்றால், எங்களைப் பார்க்கும்போதே, ஒரு கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கிறான். அவர் கண்ணாடி இல்லாதவர், கண்ணாடி இல்லாமலேயே பார்ப்பார்கள். நுண்ணாடி பார்ப்பது போன்று.
அய்யா கேட்கிறார், ‘‘திருவள்ளுவர், வாழ்க்கை துணை என்றுதானே கூறுகிறார்; அதற்கு அடுத்தது பதிவிரதைத் தன்மை என்பதற்காவது தமிழில் வார்த்தை உண்டா? பதிவிரதன் என்று உண்டா?’’ என்று கேட்டார். எவனும் இல்லை. ஒரு குலத்துக்கு ஒரு நீதி; அந்த ஒரு குலம், ஆண் குலம்; இன்னொன்று பெண் குலம். ஆகவே, பேதம்; வேதம், பேதம். அந்தப் பேதத்தை இதில் முழுக்க முழுக்கக் கொண்டு வந்து, உள்ள போடும்போது, ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு வருகிறது.
திட்டமிட்டுப் பரப்பினார்கள்!
பதிவிரதம் என்ற வார்த்தை இருந்தால், சதிவிரதம் அல்லது மனைவி விரதம் என்ற வார்த்தையும் இருக்க வேண்டுமே? அய்யா கேட்கிறார். அதுமாதிரி உண்டா, கிடையாது? ‘சதிபதி’, அவர்கள் இரண்டு பேரும் ‘சதிபதியா’ இருந்தார்கள் என்ற சொல் இருக்கிறது. இதுவும், வடமொழி தொடர்பால் ஏற்ற வினைதான். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு; இந்தப் பண்பாட்டு படையெடுப்பு எதேச்சையாக தெரியாமல் ஏதோ நடந்துவிடவில்லை; திட்டமிட்டுப் பரப்பினார்கள்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’
அக்னிகோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதிய ‘‘இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற புத்தகத்தில் சொல்கிறார், ‘‘ஆரியர்கள் வரும்போது பெண்களை விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால் பெண்களை விட்டுவிட்டு வந்தார்களே தவிர, கையோடு மனுஸ்மிருதியைக் கொண்டு வந்தார்கள்.’’ அந்த மனுஸ்மிருதியில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது? பெண்கள் என்றால், அடிமைகள். அவர்கள் பிறந்ததிலிருந்து இறக்கின்ற வரையில், ஒவ்வொரு கட்டத்திலேயும் – பிறந்ததும் தந்தைக்கு அடிமை; அதற்கடுத்தது, கணவனுக்கு அடிமை; அதற்கடுத்தது ஆண் பிள்ளைக்கு அடிமை.
இப்படியெல்லாம் சொல்லக்கூடிய அளவிற்கு பேதத்தை நிலைநிறுத்தித்தான் வந்தார்கள். எனவே, அந்த பண்பாட்டுப் படையெடுப்புதான், இன்றைக்கு நம்முடைய மொழியை பின்னால் தள்ளியது. நம்மு டைய மொழி ஆதிக்கத்திற்கு ஆட்பட்டுக் கொண்டி ருந்த மொழியாக இல்லாமல் இருந்தி ருந்தால், இந்த பண்பாட்டுப் படையெடுப்பு இல்லை என்றால், எல்லா வகையிலும் இதைவிடப் பல மடங்கு அது உயர்ந்திருக்கும். இன்றைக்கு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அறிவுப்பூர்வமாக பயன்படுத்து வதற்குரிய மொழியை, எந்த வழியால், எந்தப் பார்வை விழியால் அவர்கள் சிதைக்கிறார்களோ, அதற்கு எதிரான ஒரு போராட்டத்தை இலக்கியத்திலே, மற்றவற்றில் நாம் நடத்தியாக வேண்டும்.
புரட்சி கவிஞர் ‘குயில்’ இதழில் தொடர்ந்து எழுதினார். அதை இந்த அவையினர் அறிவார்கள்.
வெறும் காகிதமாகப் பார்க்கவில்லை; ஆயுதமாகப் பார்க்கிறோம்,
அறிவு ஆயுதமாக பார்க்கிறோம்!
‘‘வந்தவர் மொழியா? செந்தமிழ் செல்வமா?’’ நம்முடைய சொற்களையே என்ன செய்கிறார்கள் என்றால், ‘வேஷ்டி’ என்று சொல்கிறார்கள். மேலும் இப்பொழுது ‘ஷ்’க்குப் பதில் ‘ஸ்’ பலவற்றில் வந்துவிட்டது. முதலில் விசுவநாதன் என்று எழுதினார்கள். இப்பொழுது ‘விஸ்வநாதன்’ என்று எழுதுகிறார்கள். இந்தப் பண்பாட்டு படையெடுப்பு என்பது வெறும் உச்சரிப்பில் மட்டும் என்று நினைக்காதீர்கள். அங்கேதான் விஷயமே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக விஷத்துளியை தூவுவதுபோல, அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதனால்தான், நமக்கு ஆயுதங்களைக் கொடுப்பதை போல, ‘‘அறியப்படாத மொழி இயக்கங்கள், மொழி போராட்டங்கள்’’பற்றிய வரலாற்றைச் சொல்கிறார். இவர்கள் எல்லாம் கல்வி அறிஞர்கள்; இப்படிப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும். நானும், சுப.வீ. போன்றவர்களும் களத்தில் நிற்கிறவர்கள். களத்தில் நிற்கின்ற எங்களுக்குப் புதுப் புது ஆயுதங்களை நீங்கள் தேடித் தேடிக் கொடுக்கக்கூடிய ஓர் அற்புதமான ஆயுத சாலையாகதான் இதைப் பார்க்கிறோம்; இதை வெறும் காகிதமாகப் பார்க்கவில்லை; ஆயுதமாகப் பார்க்கிறோம், அறிவு ஆயுதமாக பார்க்கிறோம். அவ்வளவு பெரிய வாய்ப்பை இதில் உருவாக்கி இருக்கிறீர்கள்.
மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள், அவர் கண்ணுக்குப் புலப்படும்!
ஒரு சிறிய உதாரணத்தைச் சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன். இதுபோன்ற பண்பாட்டுப் படையெடுப்பை எவ்வளவு திட்டமிட்டுச் செய்கிறார்கள் என்றால், ‘‘சிந்துவெளி நாகரிகமாக இருந்தாலும், வேதகால நாகரிகத்துக்குப் பின்னால்தான். அதாவது முதலில் வேதகால நாகரிகம்தான். அது எப்பொழுது என்றும் தெரியாது. கீழடியா? கீழடி அறிக்கை கொடுக்காதே, அதற்குப் பதிலாக என்ன செய்யவேண்டும்; நாங்கள் உள்ளடி செஞ்சுட்டு இருக்கோம்; கீழடியை நீங்கள் கண்டுபிடிக்கலாம்; நாங்கள் உள்ளடியைக் கண்டுபிடித்திருகிறோம். அறிக்கை கொடுக்காதே, இந்த அதிகாரியை வேறிடத்திற்கு மாற்று’’ என்றெல்லாம் சொல்லி, மொகஞ்சதரோ அரப்பாவுக்கு முன் வந்தது கீழடி என்ற பெருமை தமிழ்நாட்டுக்குத் தமிழுக்குக் கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகதான் அந்த அறிக்கை கொடுப்பதைத் தடுக்கிறார்கள். அதற்காகப் போர்க் களங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மருத்துவர் அய்யா நரேந்திரன் போன்றவர்கள் அந்த மாதிரியான செய்திகளையும் வெளியே கொண்டுவர வேண்டும்; கொண்டு வருவார். எதையும் அவர் ஆழமாகப் படிக்கின்றவர். மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள், அவர் கண்ணுக்குப் புலப்படும்; அவர் அறிவுக்குத் தென்படும். வசப்படும். அப்படிப்பட்ட அளவிற்கு அந்த வாய்ப்புகளைப் பார்க்கும்போது, நினைத்துப் பாருங்கள், தஞ்சையில் இருந்து நீண்ட நாள்களுக்கு முன்பு, கருநாடக இசைவாணர்கள் வந்தார்கள். கருநாடக சங்கீதம் என்றால், மூத்த மூவர் என்று சொல்கிறார்கள். யாருய்யா மூவர் என்று கேட்டால், அதற்குப் பார்ப்பனர்கள் தருகின்ற பதிலுக்கு, நம் ஆட்கள் எல்லோரும் தலையாட்டி அமர்ந்திருக்கிறார்கள். புரியுதோ, புரியலையோ தலையை ஆட்டினால்தான், அவாளோடு சேர்த்து உட்கார முடியும்.
சாதாரணமாகப் பார்த்தீர்கள் என்றால், கூட்டங்களில் கூட நான் பார்த்திருக்கிறேன், உரையாற்றிக் கொண்டி ருக்கும்போது, சிலர் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். டப்பென்று கைதட்டல் சத்தம் கேட்டவுடன், தூங்கிக் கொண்டிருந்தவரும் கைகளைத் தட்டுவார். கை தட்டினால், அந்தப் பேச்சை அவரும் புரிந்துதான் கைதட்டுகிறார் என்று நினைப்பார்கள் என்பதற்காக.
முத்துதாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை!
கருநாடக இசைக்கு மூத்தவர்கள், முன்னோடி மூவர் யார்? தியாகய்யர், சியாமா சாஸ்திரி, முத்துசாமி தீட்சதர். இந்த மூவர்தான். ஆனால், இவர்களுக்கு முன், பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், பல ஆண்டுகளுக்கு முன்னால் மூத்த மூவர் யார்? கருநாடக இசைக்கு என்று சொன்னால், அந்த மூத்த மூவர் சாதாரணமானவர்கள் அல்ல. முத்துதாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை. இதைப் பற்றி பற்றி நாம் அத்தனை பேரும் பேசியிருக்கோம். ஆண்டுதோறும் இசைவிழா டிசம்பர் மாதம் நடைபெறும்.
வெள்ளைக்காரன் நமக்கு ஏன் இந்த வம்பு என்று போய்விட்டான்!
அவங்களாக இருந்தால் கூட, ஒரு டி.எம்.கிருஷ்ணா பெரியார் பற்றிப் பாட்டு பாடிவிட்டார். சாதாரண மக்களுடைய பிரச்சினையைப் பேசிவிட்டார் என்பதற்காக, அவருக்கு இடம் கொடுக்கக் கூடாது. எங்கே? மியூசிக் அகாடமியில். மியூசிக் அகாடமி ஆகலாம். ஆனால், தமிழாக மட்டும் ஆகக்கூடாது. அதுலேயும் கூட பாருங்கள், ‘‘வெள்ளைக்காரன் எனக்கு வேண்டியவன்தான்; ஆனால், நீ மட்டும் அங்கே வராதே. ஏனென்றால், வெள்ளைக்காரனைப் பயன்படுத்தி நான் எதுவும் பல வேலைகளைச் செய்யலாம். உன்னைப் பயன்படுத்தி நான் செய்ய முடியாது. உனக்கு உன் சொந்த அறிவு வந்து விடும்’’ என்றுதான் பார்ப்பனர்கள் நடந்து கொண்டார்கள். இதனால்தான், வெள்ளைக்காரன் நமக்கு ஏன் இந்த வம்பு என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
விக்டோரியா மகாராணி காலத்திலேயே ‘‘தலையிடா கொள்கை’’ என்று சொன்னார்கள். அது என்ன தலையிடா கொள்கை? ‘‘கணவன் இறந்தவுடன் பெண்களை நெருப்பில் தூக்கிப் போடுவார்கள். ‘‘வேண்டாம் விடுங்கள்’’, என்று சொன்னாலும், ஓடிப் போய் பிடித்துக் கொண்டுவந்து நெருப்பில் போடுவார்கள். அது தவறு’’ என்று வெள்ளைக்காரன் சொன்னான் பாருங்கள், ‘‘மதச் சுதந்திரத்தில் கை வைத்துவிட்டாய், எங்கள் ஸநாதனத்தையே நீ மாற்ற வேண்டும் என்று வந்துவிட்டாய். அது ஆபத்து’’ என்று பார்ப்பனர்கள் சொன்னார்கள். உடனே வெள்ளைக்காரன் பார்த்தான், ‘‘நாம் தூக்கிக்கொண்டு, சுருட்டிக்கொண்டு போவதைத் தூக்கிக் கொண்டு போவோம். இவர்களோடு ஏன் சண்டை போட்டுக்கொண்டிருக்க வேண்டும். இவர்கள் திருந்தினால் என்ன? திருந்தாவிட்டால் என்ன? இந்தப் பையலை காட்டுமிராண்டியாக வைத்துக் கொண்டிருப்பதால், எனக்கு என்ன கவலை? நீங்கள் சண்டை போட்டுக் கொண்டு இருங்கள் ; அதுவரையில், நாங்கள் இங்கிருந்து கிளம்பும் வரையில், பார்ப்பான்தான் எனக்குக் கையாள். ஏனென்றால், இவன்தான் ஆங்கிலத்தை முதலில் படித்தவன்’’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்தார்கள்.
பண்டைய தமிழ் நூல்களைத்
திரட்டினது யார்?
அழகாகச் சொன்னாரே உ.வே.சாமிநாதர் அய்யரைப்பற்றி; சிலரைப் பாராட்டி எழுத வேண்டிய நேரத்தில் வித்தியாசமாக எழுதி இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எதையும் அவர் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், உ.வே. சாமிநாத அய்யரை விட, மிகப்பெரிய அளவிற்கு முதலில் பண்டைய தமிழ் நூல்களைத் திரட்டினது யார்? ஈழத் தமிழராக இருந்த ஒருவர். சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். சி.வை.தாமோதரம் பிள்ளை முன்னோடியாக இருந்தார். மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவர் அந்த வரிசை இருக்கு இசையுள் உள்ளது போன்று பாருங்கள், ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொண்டு நீங்கள் ஆய்வு செய்தீர்கள் என்றால், முன்னோடி வேறு; உ.வே.சாமிநாத அய்யருடைய ஆசிரியர் யார்? மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. ஆனால், மீனாட்சி சுந்தரம் பிள்ளையாயிற்றே; இவர் உ.வே.சாமிநாத அய்யராயிற்றே! அதுதான் மிக முக்கியம். அவர் ‘சோறு’ என்று சொல்லக்கூடியவர்; இவர் ‘போஜனம்’ என்று சொல்லக்கூடியவர்.
இதைச் சொல்லிவிட்டு, என்ன சொல்கிறான், ‘‘இவாள் பேதப்படுத்துகிறாங்க’’ என்று. நம்மைப் பார்த்துச் சொல்கிறான். பேதப்படுத்தியது முழுவதும் அவர்கள்; அவர்களுடைய சாமர்த்தியம் எப்படி என்று பாருங்கள். நாம் சமத்துவம் என்று சொல்கிறோம். நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். அவன் பிளவுபடுத்தி இருக்கிறான்; பிளவு படுத்தினவன் சொல்கிறான், ‘‘இவர்கள்தான் பிளவுபடுத்துகிறார்கள்’’ என்று சொல்கிறான். பிரித்துக் காட்டுவதற்கு என்ன அர்த்தம்?
ஆகவேதான் நண்பர்களே, இந்தப் புத்தகம் என்பது நம்முடைய அறிவை, தெளிவை விரிவாக்குவது.
‘‘அறிவை விரிவு செய்; அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு உலகத்தை!’’ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
எனவே, இந்த நூல் தமிழுக்கும், மொழிப் போராட்டத்துக்கும் வரலாற்று நூல் மட்டுமல்ல, நம்முடைய ஆயுதமாக, அறிவாயுதமாகத் திகழ்வது. இனிமேல் போக வேண்டிய தூரம், காண வேண்டிய களங்கள், கருத்துப் போர், உரிமைப் போர், வெற்றி பெற வேண்டிய போர் எவை என்பதற்கு இது ஒரு நல்ல சான்றாவணம். நல்ல அருமையான ஒரு வாய்ப்பு.
ஆயிரம் பாராட்டுகள்!
சிறப்பான பாராட்டுகள்!!
இந்தப் புத்தகத்தை யாத்துக் கொடுத்திருக்கக்கூடிய நம்முடைய டாக்டர் நரேந்திரன் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! சிறப்பான பாராட்டுகள்!! இதை வெளியிட்ட தோழர்களுக்கு நன்றி!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
