தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்! இராமநாதபுரத்தில் நான் பங்கேற்கிறேன்! 

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒரே என்ஜினாக இருந்தும், பல என்ஜின்களை இழுக்கும் திறன் கொண்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி!
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைத்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து
பிப்.12 இல் தி.மு.க. நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் –

ஒரே என்ஜினாக இருந்தும், பல என்ஜின்களை இழுக்கும் திறன் கொண்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி! தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் இழைத்த ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து பிப்.12 இல் தி.மு.க. நடத்தும் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் – தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் வெற்றி பெறட்டும்! இராமநாதபுரத்தில் நான் பங்கேற்கிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 1.2.2026 அன்று காலை, நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியாவிற்கான பட்ஜெட் ஆக இல்லை என்பதோடு, மற்ற பல ஏடுகளே சுட்டிக்காட்டியுள்ளதுபோல், ஒரு மந்தமான வரவு – செலவுத் திட்டம் (A  Lackluster Budget) ஆகும்.

ஒரே என்ஜினாக இருந்தும், பல என்ஜின்களை இழுக்கும் திறன் கொண்ட ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி!

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில்  நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சிறப்பான சாதனைகளைக் கண்டு, வெளிமாநிலங்களும், வெளிநாடுகளிலும் தங்கள் பகுதியிலும் அதனைச் செயல்படுத்த கற்றுத் தரும் ஆட்சி – ஒரே என்ஜினாக இருந்தும், பல என்ஜின்களை இழுக்கும் திறன் கொண்ட ஆட்சியாக நடத்தப்பட்டு, வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. போன்ற வரி வசூல்களி லும் பல கோடிகளைப் பெற்றுத் தருவதி்ல முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது.

இப்படி ஒரு மாநிலத்தில் தங்களின் எதிர்க்கட்சியான தி.மு.க.வின் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதைப் பாராட்ட மனமில்லாவிட்டாலும், ஒன்றிய அரசு வஞ்சகம் செய்து, ‘‘செயற்கையான’’ நிதி நெருக்கடியை ஏற்படுத்தி, அதன் சாதனைச் சரித்திரத்தை முடக்க நாளும் முயலுகிறது!

ஒன்றிய பா.ஜ.க. அரசின்
உச்சக்கட்ட அரசியல் வன்மம்!

அரசியல் அடாவடி ஆளுநர் ஆர்.என்.ரவிமூலம் அன்றாட அவலம்,  பேரிடர், புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களுக்குரிய நிவாரண நிதியைக் கிள்ளிக்கூட தராத பாரபட்சம், மெட்ரோ போன்ற திட்டங்களுக்கும் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திட்டங்களுக்கும்கூட நிதி மானியமோ, நிதி ஒதுக்கீடோ தர மறுத்தல் போன்றவற்றின்மூலமும், தி.மு.க. சாதனைகளைச் சகிக்காமல் தடுக்கும் வகையில் – ஒன்றிய அரசின் அரசியல் உச்சக்கட்ட வன்மமாக இருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டிற்குரிய பங்கை ஒன்றிய பா.ஜ.க. அரசு மறுப்பது அரசியலமைப்புச் சட்ட நெறிப்படி, நியாயமா? ஏற்கத்தக்கதா?

முன்பு பல ஆண்டுகளாக இருந்துவந்த நடை முறையான, தனி ரயில்வே பட்ஜெட்மூலம் மாநிலங்க ளுக்குரிய பங்கு, வளர்ச்சிக்கு வழிகோலும் புதிய திட்டங்க ளைத் தனியே தராமல், அதனையே காணாமற்போகும் அளவிற்கு மறக்கடிக்க வைத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுத் திட்டங்களைக் கிடப்பில் போட்டு, வஞ்சக பதில்களை பொருந்தாச் சமாதானங்கள்மூலம் சொல்லி, தங்களது சூழ்ச்சியை, நெருப்புக் கோழிபோல் மறைத்துக் கொள்ள முயலும் ஒன்றிய அரசு, உடனடியாக அம்பலப்படுகின்ற அவலம் தொடர் கதையாகி வருகிறது.

பா.ஜ.க. ஆளாத மாநிலங்களுக்கு – மூன்று மடங்கு குறைவாக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு தருவது என்ற வஞ்சனை!

கல்விக்கான நிதியை திட்டமிட்டே தொடர்ந்து மறுத்துவரும் கொடுமை!

தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தங்கள் கட்சிகளோடு சேர்த்து அடகு வைத்துவிட்டனர்!

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வுடன் தங்கள் கட்சிகளைச் சரணடையச் செய்து – தூண்டிலில் சிக்கிய மீன்களாகியுள்ள சில கட்சியினர், தமிழ்நாட்டு உரிமைகளுக்காகக் கூட குரல் கொடுக்காமல் – இதுபற்றி உரிமைக் குரல் எழுப்பாது, மவுனமாக இருந்து, தமிழ் மக்களின் – தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தங்கள் கட்சிகளோடு சேர்த்து அடகு வைத்து, ஆர்ப்பரிப்புப் பேச்சுகள் பேசலாம்.

ஆனால், இவர்களுக்குத் தமிழ்நாட்டு வாக்காளர்க ளிடம் வந்து ஓட்டுக் கேட்க, என்ன அறவழிப்பட்ட உரிமை உள்ளது?

இந்த நிலையில், ஒன்றிய அரசு அமைச்சர்கள் இங்கே வந்து, ‘தமிழ்’ முகமூடி மூலம் தமிழ்நாட்டை ஆள ஆசைப்படுகிறார்களே, அதை அனுமதிக்கலாமா?

தெம்போடும், திராணியோடும் எதிர்க்கும் கொள்கைக் கூட்டணி

அவமானத்தையே வெகுமானமாகக் கருதி, பா.ஜ.க.வுடன் சேர்ந்து தமிழ்நாட்டு நலனைப் பலியிடும் கட்சித் தலைவர்களே, அத்தகைய பி.ஜே.பி.யை, தெம்போடும், திராணியோடும் எதிர்க்கும் கொள்கைக் கூட்டணி மீது வீண் விஷமப் பிரச்சாரம் செய்யும் ஒரு சில உதிரிப் புண்ணாக்குக் கட்சிகளே உங்கள் நிலைப்பாடு நியாயந்தானா?

12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய
கண்டன ஆர்ப்பாட்டம்!

இதை விளக்கி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் பட்ஜெட் என்ற வஞ்சகத்தின் தோலை உரித்துக் காட்ட, வரும் 12 ஆம் தேதி தமிழ்நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கூட்டணி நடத்திட முடிவு செய்துள்ளது – காலத்தாற் மேற்கொள்ளப்பட்ட பாராட்டிற்குரிய  முடிவு.

திராவிடர் கழகத்தின் சார்பில், இராமநாதபுரத்தில் 12.2.2026 அன்று காலை 11 மணியளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் (கி.வீரமணி) கலந்துகொள்கிறேன்.

அதுபோலவே, கழகப் பொறுப்பாளர்களும், தோழர்க ளும், மற்ற மற்ற மாவட்டங்களிலும் நடைபெறும் அந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில் தவறாது கலந்து கொள்வார்கள். ஒன்றுபட்டு உரிமைக் குரல் எழுப்புவர்.

இதில் மவுனம் காட்டுபவர்கள், தமிழ்நாட்டிற்குத் துரோகம் இழைப்பவர்களே ஆவர்!

நாடு தழுவிய அளவில்
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்!

அதே பிப்ரவரி 12 அன்று, மனுதர்மத்தையும், அர்த்தசாஸ்திரத்தையும் அடிப்படையாகக் கொண்ட  ஒன்றிய பா.ஜ.க. அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. தமிழ்நாட்டிலும் அந்த வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற, தொழிற்சங்கங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. திராவிடர் கழகத் தொழிலாளரணியும், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவையும் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளித்துப் பங்கேற்பார்கள். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை முறியடிப்போம்!

பிப்ரவரி 12 – போராட்டக் களங்கள் இரண்டு!

போராடுவோம், வெற்றி பெறுவோம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

 

சென்னை   

9.2.2026    

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *