வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
சென்னை, ஏப்.18 வைக்கம் போராட்டத்தின் தாக்கம் தான் அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்குக் காரணம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
ஏன்? எதற்காக?
கடந்த 10.4.2023 அன்று ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?’’ என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள்
எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடைபெற்ற தொடர் சொற்பொழி வில் முதல் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
‘‘தாணுமாலயன்’’
அய்யா நினைத்தபடி, அடுத்த விஷயம் என்னவென் றால், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குப் போகின்ற வழியில், சுசீந்திரம் என்ற ஓர் ஊர் இருக்கிறது. அங்கே இருக்கின்ற கோவிலுக்குப் பெயர் என்ன வென்றால், ‘‘தாணுமாலயன்” – அது ஒரு கூட்டணி.
தாண் + மால் + அயன் = தாணுமாலயன்
தாண் என்றால், பிரம்மா.
நாகர்கோவில் பக்கமெல்லாம், தாணுப்பிள்ளை, தாணு, தாணு என்று பெயர் வைத்திருப்பார்கள்.
மால் என்றால், விஷ்ணு.
அயன் என்றால், சிவன்.
பிரம்மா – விஷ்ணு – சிவன் மூன்று பேருக்கும் கோவில்.
அங்கே எப்படிப்பட்ட சூழல் இருந்தது என்று சொன்னால், கீழ்ஜாதிக்காரர்கள் உள்ளே போக முடியாது.
வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரோடு கலந்துகொண்டவர், கோவை சி. அய்யாமுத்து அவர்கள்.
அவர் ஒரு செய்தியை சொல்லுகிறார், 1924 இல் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில், பெரியார் போகவில்லை, பெரியாரின் பங்களிப்பு இல்லை என்று சொல்வதை மறுப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. சி.அய்யாமுத்துவே நிறைய ஆதாரங் களைக் கொடுத்திருக்கிறார்.
இருந்தாலும், பார்ப்பன விஷமம் செய்பவர்கள், பெரியாருடைய பெருமையை குலைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்; என்னதான் முட்டிப் பார்த் தாலும், பெரியார் அவர்கள் இன்றைக்கும் சிலையாக இருந்தே உங்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார். தத்துவமாக இருந்து உங்களுடைய ஆதிக்கத்தைக் கருவறுத்துக் கொண்டிருக்கிறார்.
கோவை அய்யாமுத்துவின் சுயசரிதை!
கோவை அய்யாமுத்து அவர்கள் எழுதிய ‘‘சுய சரிதை” புத்தகத்தில்,
‘‘1924 திருவாங்கூர் ராஜ்ஜியத்தைச் சேர்ந்த வைக்கம் எனும் வைதீகக் கோட்டை.
தெருப்பிரவேசப் போராட்ட முகாம்.
அதிகாலை.
ஆண்களும், பெண்களும் நிறைந்த தொண்டர்படை ஊர்வலம் புறப்படுகிறது.
ஈ.வெ.ரா.பெரியார், அன்றவர்க்குத் தாடியில்லை, மீசையிருந்தது. அவரது உத்ம பத்தினி இலக்குமியொத்த நாகம்மையுடன் செல்கிறார்.
விடுதலை – விடுதலை – விடுதலை!
விண்ணதிர விடுதலை முழங்குகிறது!
முழக்கியவன் வேறு யாரும் அல்ல. நான்தான், ஆம் நானேதான்.
பறையருக்கு மிங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை!
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதல!
தருணத்திற்கேற்ற எத்தகைய பாடல்!
இப்பாடலிலே இங்கு என்ற பதத்தை நான் அழுத்தம் திருத்தமாக உச்சரித்து நிறுத்தினேன். அதைக் கவனித்த மக்கள் பரவசமுற்றதை நானும் கவனித்துக் களி கூர்ந்தேன்.
அங்குதானே, அந்த வைக்கத்தில்தானே, அன்று பறையருக்கும், தீயருக்கும் தெருப்பிரவேசம் மறுக்கப் பட்டிருந்தது.
அந்த வைக்கத்து மண்மீது நான் நின்றுகொண்டு ‘‘இங்கு” என்று பாடியது எவ்வளவு அர்த்தபுஷ்டியுடன் ஒலித்தது.
அன்றுதான், அன்று அதிகாலையில்தான் கவிச்சக்ர வர்த்தி சுப்ரமணிய பாரதியார், அங்கு நடைபெற்ற சமரினில் பாடுவதற்கென்றே அந்தப் பாட்டை எழுதியது போன்றிருந்தது.
தீயர் என்ற சொல்லைத் தீயோர் என்று எண்ணிவிடாதீர்கள். திருனவந்தபுரத்தில் தீயர் எனப் படுபவர் மக்கட் பண்பில் உயர்ந்தவர்கள். உடலழகும் உள்ளத் தூய்மையும் உடையவர்கள். உடல்வலிவும், மனோவலிவும் படைத்தவர்கள். கல்வி கேள்விகளிலும், தொழில் நுணுக்கத்திலும் மிக்கவர்கள். ஜாதியில் அவர்கள் தீயர் என்று சாற்றப்பட்டாலும் அவர்கள் வாழ்வில் தூயவர்கள்” என்று அவர்தம் சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.
இவர்களை ஒன்றாக அமர்ந்து சாப்பிடக்கூடாது என்று சொன்னார்கள்.
வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருந்தபொழுது, வடக்கே அம்பேத்கர் அவர்கள் அமைப்பைத் தொடங்கி, பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தபொழுது, வைக் கத்தைப்பற்றி தலையங்கம் எழுதினார்.
மனித உரிமைப் போராட்டத்தை நன்கு உணர்ந்தவர்; ஜாதி ஒழிப்புப் போராட்டம், தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை உணர்ந்துகொண்டவர் என்ற முறையில், அதைப்பற்றி தலையங்கம் எழுதுகிறார்.
பேராசிரியர் தனஞ்செய்கீர்
அம்பேத்கர் அவர்களுடைய வரலாற்று ஆய்வாள ராக இருக்கக்கூடிய பேராசிரியர் தனஞ்செய்கீர் அவர் கள். அம்பேத்கர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியிருக்கிறார். இவர் ஜோதிபாபூலேபற்றியும் நூல்கள் எழுதியிருக்கிறார்.
வைக்கம் போராட்டத்தின் தாக்கம்தான் அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்குக் காரணம்!
அவர் சொல்கிறார், வைக்கம் போராட்டத்தைப் பற்றி அம்பேத்கர் எழுதியது மட்டுமல்ல, தான் பின்னாளில் எப்படி ஒரு மக்கள் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்வதற்கு, ‘மகத்’ குளத்தில் இறங்கிப் போராட்டம் நடத்தவேண்டும் என்று அம்பேத்கர் அவர்கள் யோசித்து, அந்த முடிவிற்குப் போராட்ட வடிவம் கொடுக்கவேண்டும் என்று அவர் வந்ததற்கு அடித்தளம் – காரணம் என்னவென்று சொன்னால், வைக்கம் போராட்டம் தான்.
வைக்கம் போராட்டத்தின் தாக்கம்தான் அம்பேத்கர் அவர்களின் மகத் குளப் போராட்டத்திற்குக் காரணம் என்று அதை அந்த ஆய்வாளர் சுட்டிக்காட்டுகிறார்.
ஆகவே, வைக்கம் போராட்டம், அங்குள்ள மக்களுக்கு மட்டும் பயன்படவில்லை. அதற்கு அடுத்த கட்டம் சுசீந்திரம் போராட்டத்தைப்பற்றியும் சுருக்கமாக இங்கு சொல்லவேண்டும்.
சுசீந்திரம் கோவில் தல புராண வரலாற்றில் உள்ளவற்றை உங்களுக்குக் கூறுகிறேன்.
சுசீந்திரம் என்ற ஊரின் நடுவிலே தாணுமாலயன் கோவில் இருக்கிறது.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக அமர்ந்திருக்கும் அரும்புகழ்பெற்ற ஆலயமெனச் சொல்லப்படுகிறது.
சுசீந்திரம் கோவிலின்
‘தலபுராணம்‘ புத்தகம்
தந்தை பெரியார் அவர்கள் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபொழுது, எனக்குத் திருமணமாகி நானும், எனது துணைவியாரும் அந்தப் பயணத்தில் பங்கேற்றோம். அப்பொழுது அய்யா அவர்கள் சுசீந்திரத்திற்குச் சென்றபொழுது, புலவர் இமயவரம் பனிடம், ‘தலபுராணம்’ புத்தகத்தை வாங்கி வரச் சொன்னார். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசினார்.
அந்தப் புராணக் கதையின் வரலாற்றை சுருக்கமாகச் சொல்கிறேன், அனுசுயா என்பவர் ஒரு ரிஷியினுடைய மனைவி. அவர் ஒரு பெரிய கற்புக்கரசியாம். கடவுள்களின் மனைவிமார்கள், ‘‘நமக்கெல்லாம் இல்லாத பெருமை அந்த அனுசுயாவிற்கு இருக்கிறது? அவரை சோதிக்கவேண்டும்” என்று நினைத்தனர்.
அனுசுயாவின் பெருமையைக் கெடுக்கவேண்டும் என்பதற்காக…
அனுசுயாவின் பெருமையைக் கெடுக்கவேண்டும் என்று தேவர்களிடம் உத்தரவிட்டனராம். மேலிடத்தின் உத்தரவு என்பதால், ரிஷி வடிவம் கொண்டு சென்ற னராம் மூன்று கடவுள்களும்.
அனுசுயாவும், மூன்று ரிஷிகளையும் வரவேற்றாராம். அப்பொழுது அந்த மூன்று ரிஷிகளும், ‘‘எங்களுக்கு நீ சமைத்துப் பரிமாறவேண்டும்” என்று கேட்டார்களாம்.
‘‘ஓ, தாராளமாக, நான் சமைத்துப் பரிமாறுகிறேன்” என்று அனுசுயா சொன்னாராம்.
உடையோடு பரிமாறக்கூடாது;
உடையில்லாமல் பரிமாறவேண்டுமாம்!
‘‘ஆனால், ஒரு நிபந்தனை, நீங்கள் உடையோடு பரிமாறக்கூடாது; உடையில்லாமல் பரிமாறவேண்டும்” என்று மூன்று ரிஷிகளும் சொன்னார்களாம்.
அனுசுயாவின் கற்பை சோதிக்கவேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு கேட்டார்களாம்.
உடனே அந்த நிபந்தனைக்கு அனுசுயாவும் ஒப்புக் கொண்டாராம்.
அனுசுயாவின் கற்பிற்கு என்ன சக்தி இருக்கிறது என்பதை அந்தப் புராணக் கதையில் எழுதியிருக்கிறார் கள். அனுசுயா, அந்த மூன்று ரிஷிகளும் குழந்தைகளாக வேண்டும் என்று சொல்லி, அதேபோன்று அவர்கள் குழந்தைகளாக மாறிய பிறகு, மூன்று குழந்தைகளுக்கும், அனுசுயா உடையின்றி உணவு பரிமாறினாராம்.
அப்பொழுதுதான் அனுசுயாவின் கற்புப்பற்றி தெரிந்து, அந்தக் குழந்தையாக இருந்த கடவுள்கள், தங்களுடைய வருத்தத்தைத் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டுச் சென்றனராம்.
இதுதான் தாணுமாலயன் கோவிலின் சிறப்பு – வரலாறு என்று தலபுராணம் எழுதியிருக்கிறார்கள்.
சுசீந்திரம் போராட்டம்!
இந்த தாணுமாலயன் கோவில் சம்பந்தமுடைய ‘‘சுசீந்திரத்துப் போர்”பற்றி கோவை அய்யா முத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளது என்ன?
‘‘1926 ஆம் ஆண்டு தென் திருவிதாங்கூர் ராஜ்யம் நாகர்கோவிலை அடுத்த கோட்டாறிலிருந்து சுசீந்திரம் செல்லும் பாதையில் ஒரு காந்தியத் தொண்டர் படை செல்லுகிறது.
சுசீந்திரம் என்ற ஊரின் நடுவிலே தாணுமாலயன் கோவில் இருக்கிறது.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரும் ஒரே மூர்த்தியாக அமர்ந்திருக்கும் அரும்புகழ் பெற்ற ஆலயமெனச் சொல்லப்படுகிறது.
ஆனால், அந்தோ இந்த மும்மூர்த்திகளின் சிருஷ்டி களான மக்களில் சிலர், பறையர், புலையர், தீயர் எனப்படும் ஜாதியினரை சுசீந்திரத்துப் பாதைகளிலே நடமாடக் கூடாதெனத் தடை செய்துவிட்டிருந்தனர்.
அம்மக்கள், காளை மாட்டு வண்டிகளில் பாரம் ஏற்றிச் சென்றால், ஊரின் வெளிப்புறத்திலே வண்டியை நிறுத்திவிடவேண்டும். உயர்ந்த ஜாதிக்காரனைத் தேடிப் பிடித்து அவனுக்குக் கூலி கொடுத்து வண்டியை ஊருக்குள் ஓட்டச் சொல்வதும், ஓட்டிச் செல்வதும் வழக்கமாக இருந்தது.
தாணுமாலயன் சந்நிதிக்கு எதிர்ப்புறமுள்ள தெருக் களில் பன்றிகள், நாய்கள், கழுதைகள் போன்ற மிருகங் கள் நடமாடலாம், மல, ஜலம் கழிக்கலாம். ஆனால், மனித குலத்தவரில் சிலர் அங்கு போகவோ, தாணுமால யனைத் தரிசிக்கவோ கூடாதென்று ஒரு சட்டம்! இந்து மதத்தை அப்படியொரு சாபத்தீடு பற்றியிருந்தது.
வைக்கத்துப்போர் வெற்றிகரமாக முடிந்த பின், சுசீந்திரத்துப் போர் துவக்கப்பட்டது.
கோட்டாறு டாக்டர் எம்பெருமாள் நாயுடு அவர் களும், அவரது சகாக்கள் பலரும் கூடி யோசித்து சுசீந்திரத்துப் போரை ஆரம்பித்திருந்தனர்.
தொண்டர்கள் முகாமைத் தலைமை வகித்து நடத்தும் படியாக என்னைக் கேட்டிருந்தார்கள்.
அனுதினமும் காலையில் கோட்டாற்றிலிருந்து சுசீந் திரத்துக்குத் தொண்டர்கள் கால்நடையாகவே செல் வார்கள்.
அன்றொரு நாள் சத்தியாகிரகியின் கண்களிலே ஒரு துராக்கிரகி சுண்ணாம்பைப் பூசிவிட்டான்.
அதற்கடுத்த நாள் காலை தொண்டர்களை ஊர்வலமாக நானே முன்னின்று அழைத்துச் செல்வதாக முடிவு செய்தேன்.
அம்முடிவின்படியே தொண்டர்கள் அணிவகுத்துப் புறப்பட்டனர். டாக்டர் எம்பெருமாள் நாயுடுவும் மற்றும் பல பிரமுகர்களும், பொதுமக்களும் இவ்வணியில் சேர்ந்துகொண்டனர்.
ஊர்வலம் புறப்பட்டது.
‘அச்சமில்லை, அச்சமில்லை
அச்சமென்பதில்லையே!’
என்று நான் ஆகாயம் அதிரும்வண்ணம் பாடினேன். ஆகாயம் அதிர்ந்து எங்கள் தலைமீது விழுந்தாலும் அக்கறையில்லை.
‘‘உச்சிமீது வானிடிந்து
வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை யச்சமில்லை
அச்சமென்பதில்லையே!”
என்று பாடி முடித்தேன்.
சுசீந்திரம் எல்லையை அடைந்தபோது, அங்கு யாதும் விபரீதம் விளையாவண்ணம் பார்த்துக் கொள் ளும் பொருட்டுப் போலீஸ் படையொன்று நின்றிருப் பதைக் கண்டவுடன்,
‘நச்சை வாயி லேகொணர்ந்து
நண்ப ரூட்டு போழ்தினும்…”
என்று பாடிவிட்டு, உடனே நானே எதிர்பாராவண்ணம் பாரதியின் அருளால், என் வாயில் திடீரெனத் தோன்றிய
‘‘வெண்ணை போன்ற சுண்ணத்தாலே
கண்ணிழந்த போழ்தினும்…”
என்ற அடிகளையும் பாடப் பாட எனக்கு நிலைகொள்ளவில்லை.
அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமில்லை
யென்று கூவினேன்” என்று அப்போராட்டம் குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்.
மனித உரிமைப் போராட்டங்கள்!
ஆகவே, நண்பர்களே! முன்னும், பின்னும் எப்படிப் பட்ட மனித உரிமைப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.
இந்த மனித உரிமைப் போராட்டத்தில், வைக்கம் போராட்டம் நீண்ட நாள்களாக நடைபெறவேண்டிய அளவிற்கு இருந்தது.
ஏனென்றால், சட்டமன்றத்தில் முதலில் முயற்சி செய்து பார்த்தார்கள்; ஒரு வாக்கு வித்தியாசத்தில் அது வெற்றி பெறவில்லை.
பிறகுதான் முடிவுக்கு வந்தார்கள். பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘‘வைக்கம் போராட்ட வரலாற்றில்” இதனை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
இன்னுங்கேட்டால், நம்முடைய சகோதரர் அய்யப் பன் அவர்கள், அதே சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக் கப்பட்டு இருக்கிறார். நாகர்கோவில் வழக்குரைஞர் சிதம்பரம் (பிள்ளை) அவர்களும் அதே சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
‘‘கோவில் நுழைவுகள் ஏன்?’’,
‘‘ஆரியரும் – திராவிடரும்‘’
சுயமரியாதை இயக்கத்தில் இருந்தவர் சிதம்பரம்; பெயருக்குப் பின் பிள்ளை என்று போடமாட்டார். அவர்தான், ‘‘கோவில் நுழைவுகள் ஏன்?”, ‘‘ஆரியரும் – திராவிடரும்” புத்தகங்களை தமிழில் எழுதினார். அன்றைக்கு ‘‘ரிவோல்ட்” ஆங்கிலப் பத்திரிகையில் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்.
ஆகவே, அவர்கள் கொடுத்திருக்கின்ற அந்த வரலாற்று நிகழ்ச்சிகளையெல்லாம் பார்க்கின்றபொழுது எப்படியெல்லாம் போராட்டம் நடந்தது என்று எண்ணிப் பார்க்கவேண்டும்.
வைக்கத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கவேண்டும் என்று எழுதிக் கொடுத்தோம்
இவ்வளவையும் தாண்டி வைக்கம் போராட் டத்தின் வெற்றிக்காக நினைவுச் சின்னம் வைத்தா யிற்று. எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, வைக்கத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கவேண்டும் என்று எழுதிக் கொடுத் தோம். அதனுடைய தொடர்ச்சியாக ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபொழுது, வைக்கத்தில் தந்தை பெரியார் சிலை வைக்கப்பட்டது.
அந்த இடம் கேரள அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உரியதாக இருந்தாலும், இன்னொரு இடமும் தேவைப்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்களின் துணைவியார் வி.என்.ஜானகி அவர்களுடைய இடத்தைக் கொடுத்தார்கள். ஆங்கிலத்தில் வி என்றால், வைக்கம் என்பதுதான்.
1985 இல் தந்தை பெரியார் சிலையை, முதலமைச்சர் கருணாகர மேனன் திறந்து வைப்பதாகத்தான் இருந்தது. பிறகு என்ன காரணத்தினாலோ, அவர் திறந்து வைக்க வரவில்லை.
இன்றைக்குப் பினராயி விஜயன் அவர்கள் வைக்கம் நூற்றாண்டு விழாவினை முன்னெடுத்துச் செய்வது என்பது மிகச் சிறப்பானதாகும். அவரைப் பாராட்ட வேண்டும்.
(தொடரும்)