வேலூர், பிப். 8- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 5.2.2026 அன்று குடியேற்றம் அரசு நகராட்சி பள்ளியில் ‘‘போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம், வேலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கத்திற்கு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பி.தனபால் தலைமையேற்றார். பள்ளியின் தலைமையாசிரியர் அ.தீபா அனைவரையும் வரவேற்றார். நகர கழகத் தோழர் சி.சாந்தகுமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
வேலூர் மாவட்ட கழக தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இர.அன்பரசன் ஆற்றிய நோக்க உரையில், போதையில்லாத சமுதாயத்தை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது. குறிப்பாக சாதி,மதம், பெண் அடிமை போன்ற போதைகளையும் ஒழித்தால்தான் இந்த சமுதாயம் உயர்ந்த நிலைக்கு செல்ல முடியும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தி னராக கலந்துகொண்ட வேலூர் மாவட்ட மனநல மருத்துவர், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை மருத்துவர் ப.சிவாஜி ராவ் ஆற்றிய சிறப்புரையில்,
“இன்று இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உபயோகப்படுத்துகின்ற கூல் லிப்ஸ், கஞ்சா, மது, புகையிலை,போதை மாத்திரைகள் போன்ற போதைப் பொருட்கள் உடல் மற்றும் சமூக நலனுக்கு பெரும் கேடு விளைவிக்கும். இது தனிமனித ஆரோக்கியத்தை (கல்லீரல், மூளை பாதிப்பு), மன நலனை (பதட்டம், மன அழுத்தம்) மற்றும் குடும்பச் சூழலை சீரழித்து, சமூகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிக்க வழிவகுக்கிறது. ஆகவே இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபடாமல், மேல் குறிப்பிட்ட பழக்கத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்தி போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
வேலூர் மாவட்ட ப.க. செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் க.பரமசிவம், குடியேற்றம் நகர ப.க.தலைவர் ப.ஜீவானந்தம் ஆகியோர் ஏற்பாடு களைச் செய்திருந்தனர். கருத்தரங்கில் இரு பால் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
முடிவில் பள்ளியின் முதுகலை ஆசிரியர் த.சங்கர் நன்றி உரை யாற்றினார்.
