விருதுநகர் இளைஞர் அணி சந்திப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிமைக் குரல்
விருதுநகர், பிப்.8 “தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.க.விற்கு புதிது இல்லை. ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.க.வும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று டில்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அ.தி.மு.க.வும் அடையப் போகிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
- விருதுநகர் இளைஞர் அணி சந்திப்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரிமைக் குரல்
- தி.மு.க. என்றால் பிரமாண்டம்
- 2026இலும் புதிய சாதனை
- அடிப்படை கொள்கைகள்
- முறியடிக்க வேண்டும்
- நீங்கள் தேவை
- கடைசி நிமிடம் வரை பரப்புரை செய்யுங்கள்
- ‘எலக்ஷன் ஸ்டண்ட்’ கூட இல்லையே!
- நாம் கேட்டு வருவது எவை?
- எடப்பாடி பழனிசாமியின் புலம்பல்
- சட்டத்தின் பெயரையாவது எடப்பாடியால் சொல்ல முடியுமா?
- ‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டு
- தமிழ்நாட்டில் தோல்வி பா.ஜ.க.விற்குப் புதிதா?
- தமிழ் நாடா – என்.டி.ஏ.வா? ஒரு ஜனநாயகப் போர்!
தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (7.2.2026) விருதுநகரில் தி.மு.கழக இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் முதன்மைச் செயலாளர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் அமைச்சர் அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, மாவட்ட தி.மு.கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஜோயல், ரகு, இளையராஜா, அப்துல் மாலிக், பிரகாஷ், பிரபு கஜேந்திரன், சீனிவாசன், ஆனந்தகுமார், ராஜா, தி.மு.க, தலைமைக் கழகத்தின் நிர்வாகிகள், இளைஞர் அணியின் நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. என்றால் பிரமாண்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (07-02-2026) விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. இளைஞரணியின் தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் விவரம்:
இங்கே கூடியிருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும்போது, மற்றவர்களுக்கு என்ன தோன்றும் என்றால், “தி.மு.க. என்றால் பிரமாண்டம்! அதிலும், இளைஞரணி என்றால் பிரமாண்டம்! இன்னும் சொன்னால், உதயநிதி என்றால் பிரமாண்டம்!” ஏனென்றால், பலருக்கும் பொதுக்கூட்டங்களை நடத்துவதே பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், நமக்கு, மாநாடுகள் என்பது வாரா வாரம் நடக்கக் கூடியதாக இப்போது ஆகிவிட்டது. இந்த மாநாடு மட்டுமல்ல; ஏற்ெகனவே நடத்தியிருக்கும் மாநாடுகள் மட்டுமல்ல; இந்த மாதம் மட்டும் 5 மாநாடுகள் நடைபெற இருக்கின்றன. அதற்குத் தொடக்கமாக, இந்த விருதுநகர் மாவட்டத்தில், இந்தச் சந்திப்பைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் உதயநிதியை பாராட்டுகிறேன்
விருதுநகர் என்று சொன்னாலே, நமக்கு நினைவிற்கு வருவது, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராசர். பெருந்தலைவர் காமராசர் என்று சொன்னாலே, அனைவருக்கும் நினைவிற்கு வருவது, மதிய உணவுத் திட்டம். அதுபோன்று, இன்றைக்கு நம்முடைய ‘திராவிட மாடல்’ என்று சொன்னால், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, காலை உணவுத் திட்டம்.
2026இலும் புதிய சாதனை
விருதுநகரில் மாநாடு நடந்தது என்றால், அடுத்து வருகின்ற தேர்தலில், நம்முடைய வெற்றி உறுதி. 2004-இல் ‘தென்மண்டல மாநாடு’ நடத்தி 40-க்கு 40 வெற்றி பெற்றோம். 2019-இல் தேர்தல் பரப்புரையை இங்கே இருந்து தொடங்கி, 39 இடங்களைக் கைப்பற்றினோம். 2023-இல் “நாற்பதும் நமதே” என்று இங்கே சொல்லித் தொடங்கிதான், 2024-இல் நாற்பதுக்கு நாற்பது வெற்றி பெற்றோம். இப்போது, 2026. புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா?.
அடிப்படை கொள்கைகள்
உங்களுக்கெல்லாம், இந்த மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நான் வெளியிட்ட காட்சிப் பதிவில் மூன்று விஷயங்களை குறிப்பிட்டிருந்தேன். அதில் முதலாவது, எதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதுதான். நம்முடைய அடிப்படைக் கொள்கைகள் என்ன? சமூகநீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி, மொழியுணர்வு, இன உணர்வு!
முறியடிக்க வேண்டும்
மொழியுணர்வையும், இனவுணர்வையும் எடுத்துக் கொண்டால், நம்முடைய தாய்மொழியான தமிழுக்குப் பல்வேறு கால கட்டங்களில், ஆபத்து வந்தபோது, கடுமையாகப் போராடி தடுத்திருக்கிறோம்! ஆனாலும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், ஹிந்தி மொழியைத் திணிக்கும் ஆபத்து இன்றைக்கும் நம்முடைய தலைக்கு மேல் தொங்கும் கத்தி போன்று தொங்கிக் கொண்டு இருக்கிறது! மொழியை அழித்தால், நம்முடைய அடையாளத்தை அழித்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். அதை முறியடிக்க நீங்கள் வேண்டும்
நீங்கள் தேவை
இப்போது மீண்டும் மாநிலங்களின் அதிகாரங்களை ஒன்றியத்தில் கொண்டு சென்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மாநிலங்களை முனிசிபாலிட்டிகள் போன்று மாற்ற வேண்டும் என்று துடியாகத் துடிக்கிறார்கள். மாநிலக் கட்சிகளே இருக்கக் கூடாது என்று பா.ஜ.க. செயல்படுகிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். இதைப் பாதுகாப்பதற்கு நீங்கள் தேவை.
கடைசி நிமிடம் வரை பரப்புரை செய்யுங்கள்
இளைஞர்களான நீங்கள் எவ்வாறு கொள்கையுடன் செயல்பட வேண்டும்? மொழிப்பற்றுடன் மொழி ஆற்றலும் கொண்டவர்களாக நீங்கள் இருக்க வேண்டும். நாம்தான் ஏழாவது முறையும் ஆட்சி அமைக்கப் போகிறோம். நம்முடைய எதிரிகள் உட்பட யாருக்கும் இதில் சந்தேகம் கிடையாது. ஆனால், நாம்தான் எப்படியும் வெற்றி பெறப் போகிறோமே என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. பரம்பரை பரம்பரையாகத் தி.மு.க.விற்கு வாக்களிக்கும் குடும்பமாக இருந்தாலும் சரி, இதுவரை நமக்கு வாக்களிக்காத குடும்பமாக இருந்தாலும் சரி, பரப்புரையின் கடைசி நிமிடம் வரை மக்களைச் சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
‘எலக்ஷன் ஸ்டண்ட்’ கூட இல்லையே!
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் நிச்சயமாக ஏதோ ஒரு திட்டத்தில் பயனடையும் வகையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்களும் இருக்காது; இத்தனை பயனாளிகளும் இருக்க மாட்டார்கள்! தமிழ்நாட்டிற்கு நிகர் தமிழ்நாடு மட்டும்தான். ஒன்றிய அரசு மாநிலங்களை ஒப்பிட்டு எந்தத் துறையில் விருதுகள் கொடுத்தாலும், அதைத் தமிழ்நாடுதான் வாங்குகிறது. இவ்வாறு, அனைத்திலும் நாம் ‘நம்பர் ஒன்’-ஆக இருந்தாலும், பட்ஜெட் என்று வந்துவிட்டால் நமக்கு ஒன்றும் கிடையாது! இந்த ஆண்டு தேர்தலை மனதில் வைத்தாவது, ஏதாவது ‘எலக்ஷன் ஸ்டண்ட்’ செய்வார்கள் என்று நாம் எதிர்பார்த்தோம்! கடைசியில் அதுவும் இல்லை. வழக்கம்போல ஈரத்துண்டுதான்.
நாம் கேட்டு வருவது எவை?
தமிழ்நாட்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து என்ன கேட்கிறோம்? எங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய கல்வி நிதியைக் கொடுங்கள், மெட்ரோ நிதியைக் கொடுங்கள், பேரிடர் நிவாரண நிதியைக் கொடுங்கள், ஜல் ஜீவன் திட்டத்துக்கான நிதியைக் கொடுங்கள், புதிய ரயில் திட்டங்களைக் கொடுங்கள், ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதியைக் கொடுங்கள், வரி வருவாயில் 50 சதவிகிதமாகக் கொடுங்கள், “நீட்”டில் இருந்து விலக்கு கொடுங்கள், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுங்கள், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறைக்கப்படாது என்று நாடாளுமன்றத்தில் வாக்கு கொடுங்கள், கீழடி அறிக்கையைக் கொடுங்கள், இதையெல்லாம்தான் நாங்கள் கொடுங்கள், கொடுங்கள் என்று கேட்கிறோம்! ஆனால், அவர்கள் நமக்குக் கொடுத்தது வெறும் ஜீரோ! அப்போது நாமும் அவர்களுக்கு எலக்ஷனில் அதையேதான் திருப்பித் தர வேண்டும். பா.ஜ.க. மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக என்டிஏ கூட்டணியும், 2024 நாடாளுமன்றத் தேர்தல் போன்றே, சட்டமன்றத் தேர்தலிலும் ஜீரோ ஆக வேண்டும்.
எடப்பாடி பழனிசாமியின் புலம்பல்
தமிழ்நாட்டிற்கு ஜீரோ என்று சொன்ன ஒன்றிய அரசை எதிர்த்து குரல் கொடுக்காமல், பா.ஜ.க.வின் கிளைச் செயலாளராக மாறியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. எடப்பாடி பழனிசாமி இப்போது முழுவதுமாக என்டிஏ பழனிசாமியாக மாறி நிற்கிறார். “நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்” என்று சொல்வது போன்று, மைக் முன்னால் நின்று கொண்டு, “நான்தான் கூட்டணிக்குத் தலைமை, நான்தான் கூட்டணிக்குத் தலைமை” என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். சொல்லவில்லை… புலம்பிக் கொண்டிருக்கிறார்.
சட்டத்தின் பெயரையாவது
எடப்பாடியால் சொல்ல முடியுமா?
எடப்பாடியால் சொல்ல முடியுமா?
இந்த நிலையில், ஒரு வித்தியாசமான போராட்டத்தை இப்போது அவர் அறிவித்திருக்கிறார். பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருக்கும் 125 நாள் வேலைத் திட்டத்தை நாம் தடுக்கிறோமாம். அதற்காகப் போராட்டமாம். அவர் முதலில் அந்தச் சட்டத்தைப் பற்றி எதையாவது படித்தாரா? அந்தச் சட்டத்தின் பெயரை அவரால் சொல்ல முடியுமா? அப்படி இருந்தால், அவருடைய அறிக்கையில் அதை ஏன் குறிப்பிடவில்லை? 100 நாள் வேலை என்பது, உரிமையாக இருந்தபோதே 50 நாள்கூட பா.ஜ.க. அரசு வேலை தரவில்லை! இப்போது எவ்வாறு 125 நாள் கொடுப்பார்கள்? இதில் என்ன என்றால், இனி மாநில அரசுதான் 40 விழுக்காடு நிதியைத் தர வேண்டும் என்று வேறு மாற்றியிருக்கிறார்கள். இதெல்லாம் பழனிசாமி அவர்களுக்குத் தெரியுமா, தெரியாதா? என்ன சட்டம், என்ன திருத்தம் செய்திருக்கிறார்கள் என்று ஒன்றும் தெரியாமல், இவர் வந்தால் 150 நாட்களுக்கு உயர்த்துவோம் என்று வேறு அறிவித்திருக்கிறார். ஓனரை மிஞ்சிய லேபராக இப்போது இருக்கிறார் பழனிசாமி அவர்கள்.
‘மியூசிக்கல் சேர்’ விளையாட்டு
அவர்கள் கூட்டணியில் இருக்கும் டிசைனைப் பாருங்கள். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, முதலில் சசிகலாவை முதலமைச்சராக்க நினைத்தார்கள். அது முடியாமல் போன காரணத்தினால்தால், கூவத்தூரில் வைத்துப் பழனிசாமியைக் கொண்டு வந்தார்கள். தனக்குப் பதவி கொடுத்தவர்களையே கட்சியில் இருந்து நீக்கினார் பழனிசாமி. கடந்த தேர்தலில் அனைவரும் பிரிந்து பிரிந்து நின்றார்கள். இப்போது, அதில் பாதி பேர் பா.ஜ.க.வுடனே திரும்ப வந்து சேர்ந்து கொண்டு இணைந்துவிட்டார்கள். இவர்கள் மொத்தத்தில் மக்கள் நலனுக்காக கூட்டணி நடத்தவில்லை. இவர்களுக்குள்ளே ‘மியூசிக்கல் சேர்’-தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தோல்வி பா.ஜ.க.விற்குப் புதிதா?
நடக்க இருக்கும் தேர்தல், ஒட்டுமொத்த தமிழ்நாடு வெர்சஸ் என்.டி.ஏ. இதில் நாம் தமிழ்நாட்டை வெற்றி பெற வைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் தோல்வி என்பது பா.ஜ.க.விற்கு புதிது இல்லை. தினமும் காலையில் சூரியன் உதிப்பதைப் போன்று அவர்களுக்கு அது ஒரு ரொட்டீன். ஆனால், இதுவரை அடைந்த தோல்வியைவிட மிகப்பெரிய தோல்வியை பா.ஜ.க.வும், சுயநலத்துக்காகச் சுயமரியாதையை விற்று டில்லிக்கு சேவகம் செய்யும் அடிமை அ.தி.மு.க.வும் அடையப் போகிறது. இதுவரை அடைந்த வெற்றிகளைவிட மிகப்பெரிய வெற்றியைத் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அடையப் போகிறது.
தமிழ் நாடா – என்.டி.ஏ.வா?
ஒரு ஜனநாயகப் போர்!
ஒரு ஜனநாயகப் போர்!
வளர்ந்த தமிழ்நாட்டை, மேலும் சிறந்த தமிழ்நாடாக உயர்த்துவோம். முன்னேறிய தமிழ்நாட்டை இன்னும் முற்போக்கான தமிழ்நாடாக உயர்த்துவோம். அதற்கு இளைஞரணியினர் உங்களுடைய முழு உழைப்பைக் கொடுக்க வேண்டும். உங்கள் உழைப்பிற்கான உயர்வு நிச்சயம் உங்களைத் தேடி வரும். தமிழ்நாடா – என்.டி.ஏ.வா என்ற ஜனநாயகப் போரில் நாம் வெல்வோம். என்று அவர் தெரிவித்தார்.
