ஷொங்காங், பிப். 8- மியான்மர் எல்லைப்பகுதியில் பல ஆண்டுகளாக இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்த ‘நான்கு பெரும் குடும்பங்களை’ சேர்ந்த 11 உறுப்பினர்களுக்குச் சீனா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
மியான்மரின் லௌக்கைங் என்ற மாவட்டத்தில் செயல்பட்ட மிங், பௌ, வெய் மற்றும் லியு ஆகிய நான்கு குடும்பங்கள், மியான்மர் ராணுவத்தின் ஆதரவுடன் ஒரு பிரம்மாண்டமான மோசடி மாவட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தன.
பல்லாயிரக்கணக்கான சீன இளைஞர்களை அதிக ஊதியம் தருவதாகக் கூறி கடத்தி வந்து, அவர்களைக் கொண்டு இணையவழி பணமோசடியில் ஈடுபடக் கட்டாயப் படுத்தினர்.
சீனத் தொழிலாளர்கள் படுகொலை
‘க்ரௌசிங் டைகர் வில்லா’ போன்ற மய்யங்களில் சீனத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சீனா கடும் நடவடிக்கை எடுத்தது. மியான்மர் இனக்குழுக்களின் உதவியுடன் இந்தக் கும்பலின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் செய்த கொடூரமான சித்திரவதைகள் மற்றும் கொலைகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 பேருக்கு உடனடியாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் மியான்மர் எல்லையோர மோசடி மய்யங்கள் முடக்கப்பட்டாலும், இக்கும்பல்கள் தற்போது கம்போடியா மற்றும் தாய்லாந்து எல்லைகளுக்குத் தங்களது இருப்பிடத்தை மாற்றி வருவதாக மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கின்றன.
