நாள்தோறும் காலையில் வெளிவருகின்ற நாளேடுகளில் ஒன்றிரண்டு நாளிதழ்களைப் படிப்பது வழக்கம். ஆனால், அண்மையில் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு தோழரிடம் இருந்த மாலை நாளேடான விடுதலை நாளேட்டை வாங்கிப் படிக்க ஆவலுடன் முற்பட்டேன். அந்நாளிதழை வாசிக்கத் தொடங்கிய வுடன் எனக்குள் புதிய ரத்தம் பாய்ச்சியது போன்ற ஓர் புத்துணர்வைப் பெற்றேன். அதன்மூலம் தன்னம் பிக்கையும், தளராத மனஉறுதியும் எனக்குள் ஏற் பட்டது. மேலும், அந்நாளேட்டில் ஒவ்வொரு பக்கமும் வைர வரிகளாக ஜொலித்தன. எடுத்துக்காட்டாக;
1. ஓடப்பராக இருக்கும்
ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை!
ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும் என்று சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆற்றிய எழுச்சி உரை வாலிபர்களை உத்வேகம் அடையச் செய்துள்ளது.
2. தலையில் தேங்காய் உடைக்கும் காட்டு விலாங் காண்டித்தனம், அலகு குத்துதல், எச்சில் இலையில் உருளுதல் என்பதெல்லாம் பக்தி என்ற பெயரால் அனுமதிக்கப்படுவது நியாயமா? என்று தலையங்கத் தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள அறிவார்ந்த கேள்விக் கணைகள் பக்தர்களை சிந்திக்கத் தூண்டியது.
3. போதிய தூக்கம் நமக்கு ஒருவகை நோய்த் தடுப்பாக உள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் உடல்நலம் நமக்கு மிக வும் சிறப்பாக அமையக்கூடும் என்பதை ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வாழ்வியல் சிந்தனைகள்
வாயிலாக எடுத்து இயம்பி இருப்பதை மருத்துவக் குறிப்பேடாகக் கருதி அதனை அனைவரும் பின்பற்ற முனைப்பு காட்டி வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தியாகும்.
4. 13.12.1947 ஆம் நாள் திருவண்ணாமலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தளபதி கே.வி. அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைத்து ஆற்றிய உரையினை, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுதலை நாளேட்டில் வெளிவந்த முழு பக்க அளவி லான கட்டுரையை வாலிபர்களும் – மாணவர்களும் ஊன்றிப் படித்து உண்மையை உணர்ந்து கொண்ட தின் பயனாய், தந்தை பெரியாரின் தன்னலமற்ற தொண்டை, உழைப்பை, அவர் ஆற்றிய செயற்கரிய செயல்களை நன்கு புரிந்துகொண்டு எதையும் பகுத் தறிவுடன் சிந்திக்கவும் செயல்படவும் தொடங்கியுள் ளனர். மேலும் அக்கட்டுரைகளை கருத்துக் கருவூல மாகக் கருதி போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.
5. மறைந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்கள் நினைவு நாளில் (மார்ச்-28) தலைமைக்கும், கொள்கைக்கும், இயக்கத்திற்கும் அவர் விசுவாசமாக, கட்டுப்பாடாக நடந்துகாட்டிய முறையை, வாலிபர்கள் பின்பற்ற வேண்டும் என்ற சூளுரையை மேற்கொள்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வாலிபர்களை பகுத்தறிவுப் பாதையில் பீடுநடை போட வைத்துள்ளது.
6. ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை! என்று பெண்ணாடம் மற்றும் ஆண்டிமடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய எழுச்சியுரை சங்கிகளுக்கு சாட்டையடியாக அமைந்தது.
7. வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா ஓராண்டு முழுவதும் ‘ வைக்கம் வீரர் ‘ பெரியாருக்கு விழா எடுக்கப்படும் என்பதையும், அதற்கான திட்டங்களையும் சட்டப்பேரவையில் (30.03.2023) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்த இனிய செய்தியை தொலைக்காட்சி மற்றும் நாளேட்டின் வாயிலாக அறிந்து தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவரும் இன்பத்தில் திளைக்கின்றனர்.
8. தீண்டாமை ஒழிப்புக்காக கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் தலைமையில் போராட் டம் நடத்தி வெற்றி காணப்பட்டது. மனித உரிமைப் போரில் ‘தாய்ப் போராட்டம்’ வைக்கம் போராட்ட மாகும். நூற்றாண்டு விழாவில் வைக்கம் வீரர் தந்தை பெரியாருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அலை அலையான திட்டங்கள்! மேலும் புதியதோர் உலகு படைக்க முனைந்திடும் தமிழ்நாடு முதலமைச் சரையும், நூற்றாண்டு தொடக்க விழாவை சிறப்புறக் கொண்டாடும் கேரள முதலமைச்சரையும் உச்சி மோந்து பாராட்டுகிறோம். மற்றும் ஜாதி -தீண்டாமை ஒழிப்புக்கு சட்டங்களும் – திட்டங்களும் தேவை! என தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வாலிபர்களிடையே வரலாற்று ஆவண மாக ஒளிர்ந்து மிளிர்கிறது!
9. அறிவுக்கும், துணிவுக்கும் முன்னால் சனாதனம் சரிந்தது (30.03.2023) எனும் தலையங்கம் சாஸ்திரம், சடங்கு, சனாதனம், நம்பிக்கை, அபசகுனம் என்று தேவையற்ற மூட நம்பிக்கைகள் மனித மூளையில் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்டு அதனை கெட்டி யான பூட்டால் விலங்கிடப்பட்டுள்ளது என்பது வேதனை. விலங்கிடப்பட்ட அப்பூட்டை ஈரோடு என்னும் சம்மட்டியால் ஓங்கி அடித்து சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது என்பதை தலையங்கம் நயம்பட எடுத்துரைத்தது.
10. ‘ திராவிட மாடல்’ ஆட்சியில் ஜாதியை ஒழிக்கா விட்டால், வேறு யார் ஆட்சியில் ஒழிப்பது? எனும் உரிமைக்குரலை திருமருகல், காரைக்கால் பரப் புரையில் தமிழர் தலைவர் ஓங்கி ஒலித்திருப்பது ஜாதி ஒழிப்பு வீரர்கள், இன உணர்வாளர்கள், சமூகநீதிச் சிந்தனையாளர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளது.
11. சனாதானமே சட்டமாக்கிக் கொண்டிருந்த திருவிதாங்கூர் ஜாதிக் கொடுமை! தந்தை பெரியா ரோடு அவரது குடும்பப் பெண்களும் கலந்துகொண்ட முதல் மனித உரிமைப்போர் வைக்கம் சத்தியாக்கிரகம்! மயிலாடுதுறை, சிதம்பரம், கூட்டங்களில் தமிழர் தலைவரின் உரைவீச்சில் முத்தாய்ப்பாக ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்ததை மக்கள் கையொலி எழுப்பி வரவேற்கின்றனர்.
12. பெரியாரைப் பின்பற்ற பொருத்தமான தருணம்! தலையங்கம் திருவாங்கூர் மன்னராட்சியில் நிலவிய தீண்டாமை, பாராமை, நெருங்காமை என்னும் நோய்த்தொற்று படர்ந்த பூமியில் வைக்கம் வீரர் தந்தை பெரியாரால் போராடிப் பெற்ற உரிமையை, வரலாற்று ரீதியான தகவல்களை புள்ளி விவரங் களுடன் எடுத்துக்காட்டியிருப்பது வாலிபர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
13. பெண் விடுதலையை நேர்மையாகப் பேசிய ஆண் – பெரியார்! ‘ஊடகத் துறையில் பெண்கள்’ கருத்தரங்கில் மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் எளிய நடையில் அழகு தமிழில் எடுத்து இயம்பிய பாங்கு தந்தை பெரியாரின் பெண்ணுரிமைப் பேரிகையை உலகுக்கு ஓங்கி உரைத்தது.
14. வைக்கம் போராட்டம் என்பது என்ன? மற்றும் ஏப்ரல் 1- அன்று கேரளாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்கும் நூற்றாண்டு விழா எனும் தலைப்பில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்களின் கட்டுரை காலத்தின் அருமை கருதி சரியான நேரத்தில் செறிவான – நிறைவான கருத்துக்களை சான்றுகளுடன் வாரி வழங்கி இருப்பது வாலிபர்கள் மற்றும் மாணவர்களின் அறிவுக்கு விருந்து படைப்பதாக அமைந்தது.
இவ்வாறு திராவிட இனத்தைப் பாதுகாக்கும் கேடயமாகவும், இன எதிரிகளை வீழ்த்தும் வாளாக வும் விளங்குகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேடு பக்கத்திற்கு பக்கம் வரிக்கு வரி மின்னும் வைரமாய் ஜொலிக்கின்ற கார ணத்தால் வாலிபர்களும் மாணவர்களும் நாள்தோறும் விடுதலை நாளிதழை விரும்பி வாசித்து வருகின்றனர் என்பது பகுத்தறிவாளர்களை பெரு மிதம் அடையச் செய்துள்ளது.
மேலும், வாலிபர்களும் – மாணவர்களும் ஒன்றி ணைந்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகள், கவியரங்கம், கருத்தரங்கம், பாட்டரங்கம், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி உள்ளிட்டவற்றில் நடைபெறுகின்ற பரிசளிப்பு விழாக்கள் மற்றும் ஆண்டு விழாக்கள், நண்பர்களின் பிறந்தநாள், உறவினர்களின் திருமண நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்துகொண்டு விடுதலை நாளிதழை அன்பளிப்பாக அளித்து அகமகிழ்கின்றனர்.
தொடர்ந்து விடுதலையில் வெளிவருகின்ற சமூக நீதி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயம் உள்ளிட்டவற்றை மக்களிடையே எடுத்துக்கூறி, இம்மானுட சமூகம் பகுத்தறிவுள்ள சமூகமாக, மனிதநேயமிக்க சமூகமாக, ஜாதி – மத பேதமற்ற, ஆண் – பெண் பாகுபாடற்ற சமத்துவச் சமுதாயமாக உருப்பெற்று எழ, சமத்துவ நாளாகக் கொண்டாடி மகிழ்கின்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளில் (ஏப்ரல் -14) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் வாலிபர்களும் மாணவர்களும் சமத்துவ நாள் உறுதிமொழி மேற் கொண்டனர் எனும் இனிய செய்தி தெவிட்டாத தேனாய் தேன் கரும்பாய் இனிக்கிறது.
வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!
வெல்க விடுதலை!
– எஸ். பூபாலன்,
திண்டிவனம்.