சென்னை, பிப்.7- “அன்று வாய் திறக்காத அதிமுக, டாஸ்மாக் பணியாளர்களுக்காக பேரணி நடத்தப்போவதாக அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் (5.2.2026) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் பணியாளர் போராட்டம்
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏஅய்டியுசி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் கடந்த 20 ஆண்டுகளாக போராடி வருகிறது. இதில் 15 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்த அதிமுக, டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து வாய்திறக்கவே இல்லை.
டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலிக்கவும் கூட முன்வராத மேனாள் முதலமைச்சர், இன்றைய ஆட்சி குறித்து பேசும் தார்மீகத்தை இழந்தவர். ஏற்கெனவே கடந்த சில நாட்களாக பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் பெரும் பகுதி தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்து, ஒன்றுபட்டு போராடி, டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதிமுக, டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கைகளுக்காக பேரணி நடத்துவதாக அறிவித்திருப்பது தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். இதை பணியாளர்களும், பொதுமக்களும் நன்கு அறிவார்கள் என்பதை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு தேர்தல் தீர்ப்பு உணர்த்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
