தருமபுரியில் தமிழ்நாடு முதலமைச்சரின் கொள்கை உறுதிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழாரம்!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கம்
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதுகெலும்பு உள்ள
முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!

தருமபுரி. பிப். 7, “கீழடி, பொருநை போன்ற நமது தொல் நாகரிகங்களைப் போன்ற வரலாற்றுப் பெருமை மிக்கதாக ‘பெரியார் உலகம்’ அமையவிருக்கிறது” என்று தமிழர் நாகரிகத்தின் பழைமையையும், இடையில் வந்த ஊடுருவலால் ஏற்பட்ட கீழ்மையையும், திராவிடர் இயக்கத்தால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பெருமையையும், இவை ஒருங்கே அமையப்பெறும் பெரியார் உலகத்தின் சிறப்பையும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தருமபுரியில் நடைபெற்ற, 2026 இல் நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் விவரித்து உரையாற்றினார்.

காந்தமென ஈர்த்த கழகக் கொடிகள்

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம்  – திராவிட மாடல் ஆட்சி’’ என்ற தலைப்பிலான தொடர் பயணக் கூட்டம் தருமபுரி மாவட்ட  திராவிடர் கழகத்தின் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் 5.2.2026 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விடத்திற்கு அருகிலுள்ள முக்கிய சாலைகளில் கழகக் கொடிகள் கண்களை காந்தமென ஈர்த்தன. பதாகைகளும் எழுச்சியுரை ஆற்ற வருகை தரும் கழகத் தலைவரை வரவேற்று நின்றன. நான்கு சாலை சந்திப்புகளில் நடுப்பகுதியில் இருக்கும் வட்டவடிவ (Roundana) பகுதியைச் சுற்றிலும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்து நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கும் வண்ணம் காற்றில் அப்படியும், இப்படியும் பறந்து அசைந்தன. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் காமலாபுரம் கு.சரவணன் தலைமையில், மாவட்டச் செயலாளர் பீம.தமிழ் பிரபாகரன் அனைவ ரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். பயண மற்றும் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான ஊ.ஜெயராமன் புத்தகங்களை அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில கலைத்துறைச் செயலாளர் மாரி கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கதிர், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லத்துரை, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கதிர் செந்தில்குமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழக  செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சங்கீதா, மேனாள் அமைச்சர் – தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளர் பி.பழனியப்பன், தி.மு.க. மாவட்டச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் ஆ.மணி, தி.மு.க.வர்த்தக அணிச் செயலாளர் தர்ம செல்வன், வி.சி.க.மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ராமதாஸ், நகர தி.மு.க. செயலாளர்கள் எம்.மாது, எம்.பி.கவுதம், தி.மு.க. மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் அரூர் ராசேந்திரன், த.ம.மு.க. மாவட்டத் தலைவர் சுபேதர் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். பகுத்தறிவாளர் கழக மாநில எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர் கவிதா இளங்கோ, தி.மு.க. ஒன்றியச் செயலாளர்கள் செங்கண்ணன், சந்தோஷ்குமார், சவுந்தரராஜன், சண் முகம், வி.சி.க.மாவட்டச் செயலாளர்கள் கருப்பண்ணன், சாக்கன் சர்மா, மா.ராஜ கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து சிறப்பித்தார்கள்.

தமிழர் தலைவரிடம்
‘பெரியார் உலகம்’ – சந்தா நன்கொடை

நிரலின் முக்கிய நிகழ்வாக பெரியார் உலகம் நிதியளிப்பு தொடங்கியது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நெறியாள்கை செய்து சிறப்பித்தார். நிதியளிப்போர் பட்டியலை வாசிக்க வாசிக்க உரியவர்கள் மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் காசோலைகளை வழங்கி மகிழ்ந்தனர். பொதுக்குழு உறுப்பினர் ஆ.சங்கீதா 10 பெரியார் பிஞ்சு மாத இதழுக்கான சந்தாக்களை வழங்கினார். நிதியளிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே கழகத் தலைவருக்கு சிறப்பு செய்வதும் சேர்ந்தே நடைபெற்றது. போட்டி போட்டுக்கொண்டு இந்தியா கூட்டணி யிலிருக்கும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆசிரியருக்கு பயனாடையணிவித்து மரியாதை செய்தனர். அடுத்து கழகத் தலைவர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த மாவட்டத் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, ஆசிரியர் சிறப்புரை ஆற்ற அழைப்பு விடுக்கப்பட்டது. நிறைவாக கழக தலைவர் ஆசிரியர் உரையாற்றினார்.

“எங்களுக்காக இல்லை! உங்களுக்காக!
உங்கள் சந்ததிகளுக்காக!”

அவர் தமது உரையை, நிகழ்ச்சியின் தலைப்பை நினைவூட்டி தொடங்கினார். அதன் பிறகு, “திமுக கூட்டணி ஏன் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கி றோம்?” என்று கேள்வி கேட்டு விட்டு, மக்களை நோக்கி வலது கையின் சுட்டு விரலை நீட்டி, “எங்களுக்காக இல்லை! உங்களுக்காக! உங்கள் சந்ததிகளுக்காக!” என்று எடுத்த எடுப்பிலேயே பதில் சொல்லிவிட்டு, “நானும் தலைகுனிய மாட்டேன். உங்களையும் தலை குனிய விடமாட்டேன் என்று கூறுகிறார் அல்லவா? அதற்காகத் தான் மறுபடியும் தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்” என்று தொடர்ந்து கூறியதும் பலத்த கரவொலிகள் அவரது உரையினூடேயே தொடர்ந்தது,  தொடர்ந்து, தருமபுரியின் அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் நடைபெற்ற மிக முக்கியமான கருத்து ஒன்றை வெளிப்படுத்தினார். அதாவது, “ராஜாஜி அன்றைக்கு குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்த போது தருமபுரி பகுதியில் 1,000 பள்ளிக்கூடங்களை மூடியதையும், ஏன் மூடினார்? என்பதையும், அவரை அப்படிச் செய்ய வைத்தது எது? என்பதையும் அதுதான் ஜாதி என்றும், அந்த ஜாதியால்தான் நாம் படிக்கவில்லை என்றும் விளக்கினார். தொடர்ந்து, ‘சரஸ்வதி’ என்ற பெயர் இருக்கும் பாட்டி அன்றைக்கு படிக்கவில்லை. அந்தப் பாட்டியின் பேத்தி, இன்றைக்கு உலகப் பல்லைக் கழகங்களில் படித்துக் கொண்டிருக்கிறார். இதை சாதித்த இயக்கம் தான் சுயமரியாதை இயக்கம்! திராவிடர் கழகம்! திராவிட முன்னேற்றக் கழகம்! திராவிட மாடல் அரசு!” என்று திராவிடர் இயக்கத்தின் பல்வேறு பரிணாமங்களையும் அடுத்தடுத்து சொல்லச் சொல்ல மக்கள் மயிர்கூச்செரிந்து கைகளைப் படபடவென்று தட்டினர்.

‘சீர்மரபினர்’ என்று மாற்றி
மாண்பைக் காத்த கலைஞர்

மேலும் அவர், “தி.க., தி.மு.க. இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்’’ என்றார் அறிஞர் அண்ணா! ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்! கருப்பு சிவப்போடு இன்று நீலமும் சேர்ந்து மூன்று குழல்கள் ஆகி விட்டதால் ஆரியம் அலறுகின்றது” என்று உரத்த குரலில் கூறியதும், கைதட்டல்கள் கடல் அலைகள் போல ஓயாமல் ஒலித்து பின்னர் அடங்கியது. தொடர்ந்து, திராவிட மாடல் அரசு சின்னச் சின்ன விசயங்களில் கூட, நுட்பமாக எப்படி செயலாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை விவரித்தார்.‌ அதாவது, “மருத்துவமனைக்கு செல்பவர்களை நோயாளிகள் என்று சொல்லாமல், ‘மருத்துவப் பயனாளிகள்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தான் கூறியதையும், திராவிட மாடல் நாயகன் அதை ஆணையாக அறிவித்ததையும், கலைஞர் முதலமைச்சராக இருந்த சமயத்தில், எஸ்.சி.,  எஸ்.டி., சி.டி., என்ற பிரிவுகள் இருந்தன. அதில் சி.டி. என்றால் தமிழில், ”குற்றப் பரம்பரை” (Criminal Tribes) என்று அரசு ஆவணங் களிலேயே பதிவு செய்யப்பட்டு இருந்ததையும், அதை ‘சீர் மரபினர்’ என்று மாற்றி மக்களின் மாண்பைக் காப்பாற்றியதையும் விவரித்தார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினம், பெண்களுக்கு கேட்காமலேயே சொத்துரிமை, உள் ளாட்சிகளில் 50 விழுக்காடு மகளிருக்கு இட ஒதுக்கீடு, மகளிர் உரிமைத் தொகை, சொத்து பத்திரங்களை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் 10% தள்ளுபடி என்றும், பட்டா மாறுதல் செய்யும்போது பெண்கள் பெயரில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையிட்டு இருப்பதையும் சுட்டிக்காட்டி, தொடர்ந்து மக்களின்; குறிப்பாக பெண்களின் சுயமரியாதையை மீட்பதில் திராவிட மாடல் அரசு எவ்வளவு முனைப்பாக இருக்கின்றது என்பதை, தத்துவ ரீதியிலான கோணத்தில் சுட்டிக்காட்டி மக்களை, ‘அடேடே…’ என்று வியப்பில் ஆழ்த்தினார்.

சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கம் எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மேலும் அவர், ‘திராவிட மாடல்’ என்பதற்கான கொள்கை என்ன என்பதை விளக்கிச் சொன்னார். அதாவது, “சமத்துவம்! சம வாய்ப்பு! சம ஈவு!” என்று குறிப்பிட்டார். மேலும் அவர், “இதைத்தான் தந்தை பெரியார் ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்றார். இதைத்தான் நாம் ‘சமூக நீதி’ என்கிறோம். இது சமூக நீதி என்றால், சமூக அநீதி எது?” என்று ஒரு கேள்வி கேட்டு, மனுதர்மம் புத்தகத்தை எடுத்துக் காட்டியபடி, “மனுதர்மம் தான் அந்த ‘சமூக அநீதி’ என்றார். அது என்ன சொல்கிறது? தலையில் பிறந்தவர்கள், ‘எல்லாம் எங்களுக்கே’ என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டார்கள்” என்பதைக் கூறி அந்த அநீதியை மக்கள் புத்தி யில் பதிய வைத்தார். இப்படி மனு தர்மத்தை பற்றி தத்துவ ரீதியாக விளக்கி விட்டு தொடர்ந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு அதில் அம்பேத்கர் வடித்துத் தந்துள்ள பீடிகையில் உள்ளவற்றை நினைவூட்டி, அதற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தையும் சுட்டிக்காட்டி அவற்றையெல்லாம் துணிச்சலுடன் சமாளித்து வருகின்ற, தமிழ்நாடு முதலமைச்சரை, “சுயமரியாதை இயக்கத்தின் சொக்கத் தங்கம் திராவிட மாடல் ஆட்சியின் முதுகெலும்பு உள்ள எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!” என்று புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து அவர், “இப்படி எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் சகோ தரர்கள்; அனைவருக்கும் அனைத்தும் என்று ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்ற திராவிட மாடல் அரசை, இதற்காகவே கொள்கை எதிரிகள் வீழ்த்த வேண்டும்’’ என்று நினைக்கிறார்கள் என்பதையும் விவரித்தார். அடுத்து, “பெண்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுத்ததும் திராவிடர் இயக்கம்தான்” என்ற விடுபட்டுப் போன முக்கியமான தகவலையும் சொல்லி, தொடக்கம் முதல் இறுதி வரை தத்துவ ரீதியாகவே பேசி, திராவிடர் இயக்கத்தின்; திராவிட மாடல் அரசின் பெருமையை; அது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டிய அவசியத்தை மக்களுக்கு ஆழமாகப் புரியவைத்து, இறுதியில் “மீண்டும் திராவிட மாடல் அரசுதான் 2026 இல் வரப்போகிறது” என்பதையும் சொல்லி, தமது உரையை பலத்த கைதட்டல்களுக்கு இடையே நிறைவு செய்து கொண்டார்.

இறுதியாக மாவட்ட துணைச் செயலாளர் சி.காமராசு நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் பங்கேற்று இறுதி வரையிலும் கொட்டும் பனியிலும் கலைந்து செல்லாமல் கருத்துரைகளை செவிமடுத்துச் சென்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *