நாடாளுமன்றத்தில் திராவிட சித்தாந்தம் ஒலிக்கப்படுவதன் அவசியம்!
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்கீடு மற்றும் வேளாண் கடன் சங்கங்களின் தணிக்கை நிலவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் சமக்ர சிக்ஷா (SSA) திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட நிதி குறித்த விவரங்களை பி. வில்சன் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் முன்வைத்த முக்கிய வாதங்கள்:
‘‘தேசிய கல்விக்கொள்கை (NEP 2020) அல்லது பிஎம் சிறீ (PM SHRI) பள்ளிகள் தொடர்பான கருத்து வேறுபாடுகளைக் காரணம் காட்டி நிதியை நிறுத்துவது முறையல்ல’’ என நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்ெகனவே சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க நிலைக்குழு வலியுறுத்தியும், ஒன்றிய அரசு அதைச் செய்யாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் வகையிலும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் இருப்பதாக பி. வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினராக இரண்டாவது முறையாக மூத்த வழக்குரைஞர் வில்சன் இருந்து வருகிறார்.
நீதிமன்றங்களிலும் சரி, நாடாளுமன்றத்திலும் சரி, அவரின் செயல்பாடுகள் சிறப்பானவை – நுட்பமானவையும்கூட! நீதித்துறையில் உயர் ஜாதியினரின் ஆதிக்கம் குறித்தும் சிறப்பான கேள்விகளை எழுப்பி வருகிறார்.
பொதுவாகச் சொல்லப் போனால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் இருக்கக் கூடிய தி.மு.க. உறுப்பினர்களின் செயல்பாடுகள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த, மற்ற கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் கவனத்தையும் பெரிதும் ஈர்த்து வருகின்றன.
மாநிலங்களவையில் திருச்சி சிவா மூத்த உறுப்பினராவார். அவர் தாக்கல் செய்த தனி நபர் மசோதா முக்கியமானது! திருநங்கைகள், திருநம்பிகள் சந்திக்கும் சமூக, பொருளாதார ரீதியான இடர்ப்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் அவசியமான சட்டம் – உரிமைபற்றியதாகும் (Rights of Transgender Persons Bill).
இதுபோன்ற சிந்தனைகள் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் மத்தியில்தான் எழ முடியும் – இன்னும் சொல்லப் போனால் ‘அரவாணி’ என்று இழிவுபடுத்தப்பட்டவர்களுக்கு ‘திருநங்கை’, ‘திருநம்பி’ என்றவாறு அழகிய பெயரை உருவாக்கிக் கொடுத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார். (மகாபாரதத்தோடு தொடர்புபடுத்திப் பேசப்படும் பெயராகும் அரவாணி என்பது).
தந்தை பெரியாரும், திராவிடஇயக்கமும் மூட்டிய சிந்தனையின் அடிப்படையில் எங்கெல்லாம் ஒடுக்கு முறை இருக்கிறதோ, அங்கெல்லாம் தன் கவனத்தையும், கருத்தையும் செலுத்திப் போர்க் குரல் எழுப்பும் தன்மை கொண்டதாகும்.
நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களை மற்றவர்கள் வித்தியாசமாகப் பார்ப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணமாகும்.
தி.மு.க. வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று தனியாக ஆட்சி அமைக்கப் போவதில்லை என்றாலும், புதிய சிந்தனைகளை, முற்போக்கு எண்ணங்களை உரத்த முறையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ‘கணீர், கணீர்’ என்று எழுப்பும் வாய்ப்பு என்பது சாதாரணமானதல்ல!
இந்தியா முழுமையும் திராவிட இயக்கச் சிந்தனைகள் பரவ வேண்டிய கால கட்டம் இது – அல்லவா!
ஆர்.எஸ்.எஸ். – பிஜேபியின் பார்ப்பனிய ஒடுக்குமுறை விஷத்தை முறிக்கும் மாமருந்தே – திராவிட சித்தாந்தமாகும்!
தி.மு.க. உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது தந்தை பெரியார் வாழ்க! என்று ஒலித்தார்களே – அதற்கான பொருள் இதுதான்!
