சின்னமனூர் மு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தமிழாசிரியராய், தலைமையாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 92 ஆண்டு அகவையார். பல்வேறு நூல்களை எழுதிய படைப்பாளி. அவரது பழுத்த அனுபவப் பூங்காவில் பூத்த பன்மலர்களின் நறுமணமாக இந்தக் “கதம்ப மணம்” என்ற நூலில் பல்வேறு கட்டுரைகளை வடித்துள்ளார். அதில், “மகாப் பெரியவாள் – ஈரோட்டுப் பெரியார்” என்ற கட்டுரையை யாத்துள்ளார். அது இதோ:

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி. குடகு மலையில் பிறந்து, கொங்குநாட்டில் தவழ்ந்து, சோழநாட்டில் நடைபயிலும் நங்கை நல்லாள் காவிரி என்னும் மங்கை நல்லாள், அவள் வளப்படுத்தும் பலநகரங்களுள் ஒன்று. ஒப்பற்றது குடமூக்கு என்னும் கும்பகோணம். அந்த ஊருக்கே ஒரு மணி மகுடமாய் விளங்குவது அங்குள்ள சங்கரர் மடம். அந்த மணிமகுடத்தின் ஒளிவீசும் இரத்தினக்கல்தான் மகாப்பெரியவர் சந்திர சேகரேந்திர சுவாமிகள்.
மூன்றுபேர் சுற்றிலும் அமர்ந்திருக்க, அவர்களுடன் கவலையோடு உரையாடிக் கொண்டிருக்கிறார் மகாப்பெரியவர். அவரது முகத்தில் பொலியும் நிலவொளி போன்ற தேஜஸில் ஒரு கரும்புள்ளி போல, ஒரு கவலை ரேகை. புதிய பொறுப்புமிக்க சிந்தனையொன்றைக் கருவிருந்து பிரசவிக்க முயலும் துயரரேகை.
“பிராமணோத்தமர்களே! காலம் ரொம்பக்கெட்டுப் போயிடுத்து. முத்திப்போன கலி உச்சஸ்தாயியில் இருக்கானோ என்னவோ. லோகத்துல நாத்திகவாதம் பெருத்துப் போயிடுத்து. நேத்து வர நம்மவாளப் பார்த்து. துண்டத்தூக்கி இடுப்புல கட்னவாளெல்லாம், இப்போ நிமிந்து பாக்குறா. அவாளவிடுங்கோ, நம்மவர், பிராமணா எப்படி இருக்கா? அக்கிரகாரங்கள்லேயே, இன்னிக்கி அக்கிரமம் தாங்க முடியவில்லை. பிராமணா வேதம் ஓதறத மறந்து ரொம்ப நாளாயிடுத்து. காயதிரி மந்திரமன்னா வீசை என்னவெலைங்குறா, அதுக்கான தர்மமெல்லாம் போயிடுத்து. அப்புறம் எப்படி சனாதனதர்மம் நிக்கும்?
என்ன வோய், தாத்தாத்சாரியாரே. உம்ம பிராமண சபையோட விஷேசம் என்ன? என்னென்ன காரியம்பண்றேள்? எப்படிப் போயிண்டுருக்கு? கொஞ்சம் சொல்லும், கேட்போம். என்ன ஓய், சொல்றீர்!”

”பேஷாச் சொல்றேன். வங்க தேஸத்துல தயானந்த சரஸ்வதி, ஆரியசமாஜத்த, இந்தியா முழுவதும் பரப்பிண்டிருக்கார். வேதத்தை பிராமணர்கள் பணம் தேடற கருவியாப் பயன்படுத்திண்டிருக்கா! – வேதங்களை அவாளும் கற்காம, மத்தவாளையும் கற்க விடாம் சிறைபிடிச்சு வச்சிண்டிருக்கா. ஆகையால, வேதத்தை… பிராமணரும், பிராமணர் அல்லாதவரும் படிக்கணும். இதான் ஆரிய சமாஜத் தோட கொள்கை. இந்தப் பிரச்சாரம் தமிழ்நாடு வரைக்கும் வந்தாச்சு. இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் ஈரோடு ராமசாமி நாயக்கர்வாள், அவா பிராமணியத்தக் கடுமையா விமர்சனம் பண்றா. அதனாலதான் நாங்க பிராமண சபைய ஆரம்பிச்சு நடத்திண்டு வரோம். சனாதன தர்மத்தைப் பாதுக்காக்க பிரச்சாரம் பண்றோம்.”
“ஊர்ஊரா, கிராமம் கிராமமா ஜில்லா முழுவதும் சுற்றி ராமசாமி நாயக்கருக்கு பதிலடி கொடுத்துவரோம்…”
“பேஷான ஏற்பாடு. இந்தக்காலத்துக்குத் தேவையான வேலை. மேலே சொல்லுங்கோ,”
“பாருங்கோ சுவாமிகள், பிராமணா எவ்வளவு தூரம் கெட்டுண்டுருக்கான்னு. ராமசாமி நாயக்கரும், அவரோடு இயக்கத்துப் பேச்சாளர்களும் சமஸ்கிருத ஸ்லோகங்களையெல்லாம் அள்ளி விடறா. சூத்திரர்களத் தாக்கி, அவமானப் படுத்தும் விதமா இருக்குற ஸ்லோகங்கள் எல்லாம் அவர்களுக்கு எப்படிக் கிடைக்கிறது? ஒரு பிராமணத் துரோகிதான் எழுதித்தரார்!”
“யார் அவர்?”
பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார்தான் அப்படி அவாளுக்கு எழுதித்தரார்.”
“அடப்பாவி! அக்கிரகாரத்துக்குள்ளயே கலி முத்திடுத்துன்னு நாஞ் சொன்னது சரியாப் போச்சோண்ணோ?”
“இன்னும் கேளுங்கோ, ஸ்வாமி! – பிராமண சபை நடத்திண்டு வந்ததோட நம்ம சங்கரமடத்து சார்பில் நடத்துன ‘ஆரிய தர்மம்’ பத்திரிக்கையில் கூட நான் அப்பப்போ எழுதிண்டிருக்கேன். எனது சித்தப்பா அக்னி ஹோத்ரம் கோபால தேசிகாச்சாரியார் அந்தப் பத்திரிகையோட எடிட்டரா இருந்தார். அப்போ, அவர். ‘ஜாதிதத்துவ நீரூபணமன்னு ஒரு புத்தகம் கூட எழுதியிருக்கார்.
ஆமாம். இதெல்லாம் எதுக்கு விசாரிச்சுண்டிருக்கேள்ன்னு. அடியேன் தெரிஞ்சுக்கலாமோ?”
“இன்னும் நிறையக் கேள்விப்பட்டேனே ! மேக்கொண்டும் சொல்லும் ஓய்!”
“ஸ்வாமி! சனாதன தர்ம சபைன்னும் ஒருசபை கூட ஆரம்பிச்சோம். காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி.வெங்கட்டராமய்யர், எம்.கே.வைத்தியநாத அய்யர் போலப் பெரியவாளெல்லாம் வந்து பேசுனா. இப்படி சபைகள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் கூடிய அளவுக்கு, பிரச்சாரங்கள் செஞ்சபடி இருக்கோம். டி.கே.ஜெகந்நாதச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட, ‘பிராமணன்’ ‘தார்மீக இந்து’ன்னு பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் நன்றாகப் பேசியும் வரோம். வேறென்ன?”
“போதாது ஓய் போதாது! இன்னும் பண்ணனும்! நிறையப் பண்ணனும். நாட்டுநெலமைய நெனச்சுஞ்டேன்னா நேக்கு, நித்திரை கூட வரமாட்டேங்கறது ஓய்! நா ஒரு யோசனை சொல்றேன், கேட்கிறீரா?”
“கட்டளை இடுங்கோன்னா! காத்திண்டிருக்கோம்!”
“பிராமணர் கடமையை மறந்துட்டா இல்லியா! அவாளத் திருத்தணும் முதல்ல. அவாளத் திருத்துறத முக்கிய நோக்கமா வச்சுண்டு புதுசா ஒரு சபை ஆரம்பிக்கலாம். அதுக்கு வேதகர்ம சாஸ்திர பரிபாலனசபைன்னு பேர் வைக்கலாம்.இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும், மொதல்ல பிராமணர்கள் வேதத்தப் படிச்சு, அதைத் தழைக்கச் செய்யணும். இந்த சபை நடத்தறதுக்கான பணத்தை பிராமணாள்ட்டமட்டும் வாங்கணும். அப்பதான். நாம் செஞ்ச பாவத்தை நாமே சுத்தப்படுத்த முடியும்,”
மகா பெரியவரின் விருப்பம் உடனே செயல் வடிவம் எடுத்தது. குளித்தலை அண்ணா அய்யங்காரும் ஜெயராமய்யரும் சபைச் செயலாளர்கள் ஆனார்கள். கூட்டங்கள் பல நடந்தன. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆவஹந்தி ஹோமம் பிரம்ம தேஜஸுக்காக (அதாவது பிராமணர் முன்னேற்றத்திற்காக) நடத்தப்பட்டது. தஞ்சாவூர் ஜில்லா முழுவதும், கிராமங்கள், பேரூர்கள் என எல்லா ஊர்களிலும் வேதப்பிரச்சாரம்முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலைப்பக்கம் திருப்பிவிட்டனர். ஒரு ஆன்மீக வேதப் புத்துணர்ச்சி எழும்பியது. பம்பாய், அகமதாபாத், டெல்லி, கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வட இந்தியப் பகுதிகளுக்கெல்லாம் சபையினர் சென்று, ஹோமமும் உபன்யாசமும் பண்ணி, வேதம் வளர்த்தனர். சபையின் தொண்டு தொடர்ந்தது. இந்நிலையில் ஒருநாள் மடத்தில் மகாப்பெரியவர் தாத்தாச்சாரியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.
“தாத்தாச்சாரி. நாம் ஒரு பக்கம் நமது பரிபாலன சபையை நடத்திண்டு வரோம். இந்த நாத்திகவாளும் அவா பக்கப் பிரச்சாரத்தை தீவிரமா நடத்திக் கொண்டு வரா. முந்தி பிராமணாளை மட்டும் கேலி, கிண்டல் பண்ணினவா இப்போதெல்லாம் நம்ம தெய்வங்களையும், தெய்வ உருவங்களையும் கூடக் கிண்டலடிக்க ஆரம்பிச்சுட்டதாக் கேள்விப்பட்டேன். எனக்கு ரொம்ப உறுத்தலாருக்கு தாத்தாச்சாரி!”
“என்ன செய்யலாம் சொல்லுங்கோஸ்வாமி”
“நாம பூஜா தத்துவத்தையும் சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லோருக்கும் புரிய வச்சாகணும். எனவே நாம் ஆகமசிற்ப சதஸ் என்னும் ஸ்தாபனத்தை உடனே ஆரம்பிக்கணும்.”
பெரியவர் விருப்பம் செயல்வடிவம் பெற்றது. தெய்வ சிற்பங்களை எப்படி வழிபடவேண்டும் என அது கற்பிக்க எழுந்தது.
தென்னிந்தியாவின் கோயில் கோபுர சிற்பங்களையும் அவற்றை வழிபட வகுக்கப்பட்ட ஆகமங்களைப்பற்றிய பெருமித உணர்வை எழுப்பிடவும் முனைந்தது சதஸ். காரைக்குடி கம்பன் விழாப் புகழ் சா.கணேசன் அவர்களிடம் சதஸ் நடத்தவேண்டிய பொறுப்பு பெரியவரால் ஒப்படைக்கப்பட்டது. இந்த இயக்கம் பதினைந்து ஆண்டுகள் வரை வெற்றிகரமாக நடந்தது. ஆனால் இதன் விளைவாக மாப்பெரியவர் என்ன எதிர்பார்த்தாரோ, அது விளைய வில்லை. பெரும் மனக்குறையுடனே இருந்தார் பெரியவர்.
தாத்தாச்சாரியாருடன் மீண்டும் ஒரு சந்திப்பு.
“ஓய், தாத்தாச்சாரி! நாம எவ்வளவோ சபை நடத்தறோம் – உபன்யாசம் பண்றோம். நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லையே ஓய்”
“என்ன ஸ்வாமி எதிர்பார்த்தேள்?”
“பிராமணாளுக்கும் மத்தவாளுக்கும் நெருக்கம் உண்டாகும் என எதிர்பார்த்தேன், கட்டாயம் அது உண்டாகணும். அப்படி உண்டானால்தான் சூனாமானா இயக்கத்தோட வேகத்தைக் கட்டுப்படுத்தமுடியும்.”
“ஸ்வாமிகளே! நாம் எவ்வளவோ பண்ணீட்டோம். நீங்க நெனக்கறது நடக்கலேன்னா நம்மவாள்ட்டத்தான் ஏதோ தப்பிருக்குன்னு நெனக்கிறேன். நீங்க சொல்றமாதிரி நம்மவாளையும் மத்தவாளையும் இணைச்சு வைக்கிற மாதிரி ஏதாவது பண்ணியாகணுமே.”
நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. பெரியவர் சொல்லுகிறார்.
“இவா ரெண்டு பேரையும் இணைக்க, கடவுள்தான் பாலம், கடவுளை மட்டும் வச்சுண்டு சேக்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம். தமிழ்தானே! ஆழ்வார்களோட பாசுரம் நாயன் மார்களோடு பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சேசேக்க முடியாதா?”
மகாப்பெரியவர் பூர்ண நம்பிக்கையோடு பேசுகிறார். கண்களில் ஞானமும் நம்பிக்கையும் மின்ன அவர் தொடர்கிறார்.
“இதப்பாரும் தாத்தாச்சாரி எல்லாக் கோவில்கள்லேயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதற்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாசங்களை விட இது இன்னும் நன்னாப் போய்ச் சேரும். ஏன்னா… நாம எடுத்துண்டதும் தமிழ் சொல்றதும் தமிழ் என்னோட அபிலாஷை, தாத்தாச்சாரி, சைவத்துக்கும் வைஷ்ணவத்துக்கும் சண்டை வராம இருக்க, ஒரு காமன் கடவுளை (Common God) கண்டு பிடிக்கணும். இதுக்கெல்லாம் பாவை மாநாடுகள் ரொம்ப உதவியா இருக்கும் இதனால் பிராமணர் பிராமணர் அல்லாதவர். சைவ – வைஷ்ணவ துவேஷங்களைத் தீர்த்து வைக்க முடியும்ன்னு நம்பறேன். என்ன சொல்றீர்?”
தன்னிகரில்லாத தமிழ்க்கலாச்சாரத்தில் பெண்களுக்கென்றே பெண்களாலேயே உருவாக்கப்பட்ட விரதவிழா பாவை நோன்பு. இத்தகைய தூய தமிழ்க் கலாச்சாரத்தைத்தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும் வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள். திருவெம்பாவை சைவம் (மாணிக்கவாசகர்); திருப்பாவை (வைணவம் -ஆண்டாள்) என தமிழ்ச்சுவை சொட்டச்சொய் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ்ப் பாக்களைத்தான் சைவ – வைணவ ஒற்றுமைக்குப் பயன்படுத்த நினைத்தார் மகாப்பெரியவர்.
வைணவ பாவை மாநாடுகள் சீரும் சிறப்புமாக நடைபெற்றன. மார்கழிமாதம் முழுவதும் தமிழ்நாடு பூராவும் மாநாடுகள் நடைபெற்றன. ஒவ்வொரு ஊரிலும் பொது இடத்தில் பந்தல் – அந்த ஊர்க்கோயிலில் ஆண்டாள், மாணிக்கவாசகர் விக்கிரகங்கள் எழுந்தருளியிருந்து அலங்கரிக்கும். சிறப்பான மேடை – விக்கிரகம் கிடைக்காத ஊரில் படங்கள் என வைக்கப்பட்டு, சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. ‘ மாநாடுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவது தமிழக அரசின் கவனத்தையும் கவர்ந்தது. அரசு அறநிலையத்துறைக் கமிஷனர் சாரங்கபாணி முதலியார் பாவை மாநாட்டை இனி அரசே நடத்தும் என அறிவித்தார். பிராமணர்களும் ஏனைய சத் சூத்திரர்களும் (சூத்திரர்களில் உயர் சூத்திரர்கள்) கூட்டம் கூட்டமாக வந்து தமிழ்விருந்து அருந்திச் சென்றனர். அவ்வாறு மாநாடு வெற்றி நடைபோட்டு வருகின்ற நேரத்தில் மன்னார்குடியில் ஒரு சம்பவம். சைவ – வைணவ துவேஷத்தால் விளைந்த சம்பவம். இதோ…
தாத்தாச்சாரியாரிடம் ஓடோடி வருகிறார் மன்னார்குடி ராஜகோபால தீட்சிதர்.
தீட்சிதர்: “ஸ்வாமி… என்ன இப்படி பண்ணிட்டேள்?”
“எதை எப்படிப் பண்ணீட்டேன் விபரமாச் சொல்லுங்கோ.”
“தெரிஞ்சுண்டே கேக்கறிளே!”
“தீட்சிதரே, என்ன சொல்கிறீர்? நீர் கேக்கறது எனக்கு முன் கூட்டியே தெரியறதுக்கு நான் என்ன பகவானா?” பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே… ஆண்டாள்யாரு? மாணிக்க வாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல ஆதி சைவர் மாணிக்க வாசகர் இருக்கலாமா? அந்த சங்கராச்சாரி சொன்னா நீர் சேக்கணுமா?”
சொற்களில் புகை பறக்க, கண்களில் கனல் வெடிக்க, கேட்கிறார் தீட்சிதர்.ஆனால் ஒரு வாளித் தண்ணீரை வாரிக் கொட்டி அடுப்புத் தீயை அணைத்தது போல, தீட்சிதரின் வாதத்தையும் வேகத்தையும் விரைந்தோடச் செய்யும் சரியான வாதத்தை, இதமாக எடுத்து வைக்கிறார் தாத்தாச்சாரி.
“இதுக்குத்தான் இவ்வளவு நேரம் இழுத்தேளா? இதோ பாரும் ஓய் இந்தப்பாவை மாநாடு நான் நடத்தறதோ, சங்கராச்சாரியார் நடத்தறதோ இல்ல. இப்ப இது அரசாங்கம் நடத்துறா, அவாள்ட்ட போயிக் கேளும்….”
அவ்வளவுதான் ! அரசாங்கம் என்றதும், ஆவேசம் பொங்க ஓடிவந்த தீட்சிதர் வந்த சுவடே தெரியாமல் மறைந்து போகிறார். இவ்வாறு உள்ளடி எதிர்ப்புகளையெல்லாம் மீறி மாநாடுகள் நடைபெற்று வந்தன. “வேததர்ம சாஸ்திர பரிபாலன சபை”
“ஆகம சிற்ப சதஸ்” “பாவை மாநாடுகள்!
காவிரிக்கரை நகரத்துச் சங்கரர் மடம் முனைந்து நடத்திய மூன்று அமைப்புக்கள் இவை, இந்த இயக்கங்கள் தவிர வேறு இரு செயல்களிலும் மடம் முழு முனைப்போடு இறங்கி வேலை செய்தது. அவற்றையும் இங்கே காண்போம்.
இயற்கைத்தாயின் முழு அருளும் பொங்கித்ததும்பும் கேரள மாநிலத்து காலடி என்னும் ஊரில் அவதரித்தார் ஆதி சங்கரர். வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்து சமஸ்கிருத மொழியைக் கரைத்துக் குடித்து, அவற்றிற்கு உரைகள் (பாஷ்யங்கள்) பல எழுதி, அத்துணை அறிவையும் கடைந்து அத்வைதம் என்னும் அரியதொரு புதிய கோட்பாட்டைத் திரட்டியெடுத்து, அதைப்பரப்ப நடையாய் நடந்து,பாரத நாடு முழுவதையும் அளந்துவிட்ட கர்மவீரர் அவர். அவர் மறைவிற்குப் பின் அவரது சீடர்கள், அவர்தம் மாயாவாதக் கோட்பாட்டை, நிலைத்து நின்று பரப்புவதற்காக, திசைக்கொன்றாக. பாரதநாட்டின் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை நிறுவினார்கள். தெற்கே கர்நாடகத்துக் சிருங்கேரியிலும் வடக்கே இமயத்துப் பத்ரிநாத்திலும் கிழக்கே ஒரிசாவின் பூரியிலும் மேற்கே குஜராத்தின் துவாரகா நகரிலும் அம்மடங்கள் நிறுவப்பட்டன.
கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையே உள்ள உறவு கீரி பாம்பு உறவுதானே! சிருங்கேரி மட எல்லைக்குட்பட்டது தமிழ்நாடு கர்நாடகத்துச் சிருங்கேரிமட பிராமணர்கள் முன் தமிழ்நாட்டு பிராமணர்கள் சுயமரியாதை இயக்கம் நடத்த வேண்டியதாயிற்று. தமிழ் தேசத்துப் பிராமணர்கள் தம் தன்மானம் காக்க கும்பகோணத்தில் ஒரு மடத்தை – ஐந்தாவது சங்கரர் மடம் -நிறுவியாக வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். மடம் உருவாகி பெரும் மரமாக வளர்ந்தும் விட்டது. ஜெகத்குருக்கள் வரிசையில் மகாப்பெரியவர் சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்வந்தார். காலத்தின் தேவைக்கேற்ப சிற்சில அமைப்புக்களையும் நிறுவி நடத்தினார்: பார்த்தோம்.
காவிரித் தண்ணீரில் செழித்த மடம் பாலாற்றுத் தண்ணீரை ருசிக்க விரும்பியதோ என்னவோ, கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது.
ஒரு நாள் காஞ்சி மடத்திலிருந்து, கும்பகோணத்திலிருந்த தாத்தாச்சாரியாருக்கு ஒரு தந்தி வந்தது.
“உடனே காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டு வரவும்” – சங்கராச்சாரியார்.
தாத்தாச்சாரியார், உடனே காஞ்சிபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்; பெரியவரைச் சந்தித்தார். பெரியவர் செய்தித்தாள் ஒன்றை நீட்டிக் கொண்டே சொன்னார்.
“லோகமே அழியப்போறது ஓய் அழியப்போறது. பேப்பரைப் பாரும்.”
அவரது பேச்சில் படபடப்பு தெரிந்தது. மேலும் அவர், “இதப் பாத்தீரா. ஸ்திரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுக்கப் போறாளாம். அவர்களுக்கு சொத்துல பங்கு கொடுத்தா என்ன ஆகும் தெரியுமா? இஷ்டப்பட்டவா கூட ஸ்திரிகள் ஓடிப் போயிடுவா.. அபாண்டமா. அபச்சாரமாப் போயிடும்” – என்று ஆதங்கத்தோடு பேசினார்.
“எனக்கு நல்லது தான் ஸ்வாமி – என் மாமனாருக்கு நிறையச் சொத்துக்கள் இருக்கு. என் ஆத்துக்காரிக்குப் பங்கு வந்தால் எனக்கும் நல்லது தானே”, சிரித்துக்கொண்டே பதிலளித்தார் தாத்தாச்சாரி.
“அசட்டுத்தனமாப் பேசாதீர். இந்தச் சட்டம் வந்தா ஸ்திரி தர்மமே பாழாயிடும். ஸ்திரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்தியமோ இருக்கக்கூடாதுன்னு மநுஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்திரிக்கு அழகு. இப்படிப்பட்ட ஸ்திரி தருமத்தை நேரு நொறுக்கிட்டார். நாம் இதை எதிர்த்து போராட்டம் நடத்தணும். ஸ்திரிதருமத்தைப் பாதுகாக்றதுக்காக அந்த பில்லை எதுத்து ஊரெல்லாம் கூட்டம் போடணும், ஸ்திரிகளை நிறையத் திரட்டணும்….” ஆத்திரமும் ஆவேசமும் திட்டங்களாக, ஆணைகளாக உருப்பெற்றன.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் மகளிர் கூட்டம் சங்கராச்சாரியாரின் உத்தரவுப்படி நடந்தது. என்ன ஏது என்று தெரியாமலேயே பலபெண்கள் இதில் கலந்து கொண்டு எங்களுக்குச் சொத்துப்பாத்யம் வேண்டாம் என்று சொன்னார்கள்.
கும்பகோணத்தில் நடத்த கூட்டத்துக்கு ஹைகோர்ட் ஜட்ஜ் திருவேங்கடாச்சாரியின் தங்கை செண்பகத்தம்மாள் வந்தார்கள். மேலும் பலபெண்கள் கூடி சொத்துப் பாத்யம் வேண்டாம் எனத் தீர்மானம் போட்டார்கள். கிட்டத்தட்ட ஒரு மாதம்- தமிழ்நாடு பூராவும் நூறு மகளிர் கூட்டங்கள் நடந்தன. தீர்மான நகல்களுடன் டெல்லிக்கு, பல எதிர்ப்புத் தந்திகளும் பறந்தன.
பெரியவருக்கு இவையெல்லாம் போதுமானவையாகத் தோன்றவில்லை; உச்சக்கட்ட அழுத்தத்தோடு ஒருகை பார்த்து விடத் தீர்மானித்தார்; தாத்தாச்சாரியாரை அழைத்தார்.
“தாத்தாச்சாரி, இங்கேயே கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது போலிருக்கிறது. டெல்லிக்கே போய் எதிர்ப்பைத் தெரிவிக்கணும், உடனே நீர் டெல்லி கிளம்பும்” என்று விரட்டினார்.
டெல்லி மாநகரம் (Constitution Clut) பெண்கள் சொத்துரிமை மசோதா பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.தாத்தாச்சாரி முடிந்த அளவு பெண்களைத் திரட்டிக்கொண்டு அங்கே போய்ச் சேருகிறார். அங்கே. சொத்துரிமை வேண்டும் என வலியுறுத்த கமலாதேவி சட்டோபாத்தியாயா தலைமையில் ஏராளமான பெண்கள் கூடியிருந்தனர். பண்டித நேருவின் வருகைக்காகக் கூட்டம் காத்திருக்கிறது.
தாத்தாச்சாரி கொண்டுசென்றிருந்த பெண்கள் கூட்டம் நேரு வருவதற்குள் கல்லெறிகண்ட காக்கைக்கூட்டம் போல, கரைந்து ஓடிப்போய்விட்டது. டெல்லிப் பயணம் வீணாகி விட்டது. கொஞ்சநாளில் மகளிர் சொத்துரிமை மசோதா சட்டமாகி விட்டது “டெல்லி வரை சென்று போராடியும் ஸ்திரிதர்மத்தைப் பாதுகாக்க முடியலையே” என்று வருத்திய பெரியவர் “அவாளுக்குத்தான் கல்யாணம் பண்ணும் போதும் சீதனம் கொடுக்கிறாளே, அப்புறம் எதுக்கு, சொத்து பாத்யம் ? இனிமே, பெண்கள் சொத்து இருக்கு என்னும் தைரியத்துல இஷ்டப்பட்டவர் கூட ஓடத்தான் போறா…” என்று அங்கலாய்த்தார்.
இந்த முயற்சி இவ்வாறு முனை மழுங்கிப் போக பெரியவர் அடுத்தும் ஒரு பெரு முயற்சியில் இறங்கினார்.
அது என்ன?
இந்து மதத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்க்கும் பணியை நோக்கமாகக் கொண்டு இயங்கும் மடங்கள் இந்தியாவில் ஏராளம் உள்ளன. சைவமடங்கள். வைணவ மடங்கள், பிராமண மடங்கள், பிராமணர் அல்லாத எனப்பல. ஆனால் மக்களை ஒற்றுமைப்படுத்த வேண்டிய இம்மடங்கள். ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு ஹோமம் வளர்ப்பது போல, துவேஷம் வளர்த்துக்கொண்டிருந்தன. உள்ளுக்குள்ளும் தேச அளவிலும் முஷ்டி உயர்த்திக் கொண்டு நின்ற சூழலில் எந்த மடாதிபதிக்கும் தோன்றாத ஒரு அருமையான யோசனை, மகாப்பெரியவருக்குத் தோன்றியது.
“மடங்கள் மடத்தனமா சண்டை போட்டுண்டிருக்கா. தேஸத்துல இருக்கிற எல்லா மடங்களும் ஒரே அமைப்பாவரணும். அது மூலமா மதவிஷயங்களை, மநுதர்மத்தை இன்னும் வேகமாகக் கொண்டு போகணும்” என்றார் தாத்தாச்சாரியாரை நோக்கிப் பெரியவர்.
அடிக்கடி வட இந்தியாவில் யாகங்கள், மதப்பிரச்சாரக் கூட்டங்கள் எனச்சென்று வந்து கொண்டிருந்ததால், வட இந்திய மக்களிடம் பேசி மடங்களுக்கான அமைப்பை உருவாக்க தாத்தாச்சாரியார் அனுப்பி வைக்கப்பட்டார்.
அயோத்தியில் எக்கச்சக்க மடங்கள் இருக்கின்றன. இது தவிர பூரி, துவாரகா. பத்ரி போன்ற சங்கரமடங்களுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. சின்னச் சின்ன மடங்கள் கூட விட்டுவைக்கப்படாமல் ஒன்றிணைக்க பற்பல முயற்சிகள் நடந்தன. (Association ofmutts) உருவாகும் சூழ்நிலை கனிந்தது.
கனியும் சூழ்நிலையைப் பாழ்படுத்த குறுக்கேவந்தார் ஒரு பெரிய மனிதர். பண்டித நேருவின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர்; நேரு, லால்பகதூர் சாஸ்திரி ஆகிய இருவரின் மறைவின் போதும் தற்காலிகப்பிரதமராகப் பணியாற்றியவர். அவர்தான் குல்ஜாரிலால் நந்தா, ஒரு தென்னிந்திய மடாதிபதி இந்திய அளவில் மடங்களை இணைக்க முயற்சிசெய்வதை அவர் விரும்பவில்லை. சகல அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள உயர்பீடத்து மனிதரவர். அந்த அதிகாரபீடம் எதிர்த்தால், அசோசியேஷன் என்னாவது? வடஇந்திய மடங்கள் மட்டும் இணைந்து சாது சம்மேளன் என்று ஓர் அமைப்பைத் தோற்றுவித்து, தாத்தாச்சாரியார் முயற்சியைத் தோல்வியடையச் செய்தன.
மனம் தளரவில்லை மகாப் பெரியவர்.
பாரதம் பூரா ஒண்ணு சேக்கலாம்ன்னு நெனச்சேன். அவாபேதம் பாக்குறாளா, சரி. தென்னாட்டு மடங்களைச் சேத்து ஒரு அசோசியேஷன் ஆரம்பிச்சுடலாம்” என்றார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மடங்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வரும் முயற்சி தொடங்கியது. அது பற்றி தாத்தாச்சாரியரே எழுதுகிறார்; பாருங்கள்.
“உடுப்பியில் எட்டுமடங்கள் இருந்தன. அவர்களிடம் பேசிப்பார்த்தோம், சங்கராச்சாரியார் எடுக்கும் எந்த முயற்சிக்கும். செய்யும் எந்தக்காரியத்துக்கும் சிருங்கேரி மடத்துக்காரர்கள் எதிராகத்தானே இருப்பார்கள். அவர்களைத் தவிர ஏனைய மடங்களைச் சேர்க்கும் முயற்சியில் இறங்கினோம்… ஆனால் வருகிறேன், வருகிறேன் என்று சொல்லி விட்டு அவர்களும் பின் வாங்கி விட்டார்கள்.
கடைசியில்.. தமிழ்நாட்டு அளவில் இருக்கிற அத்தனை மடங்களையும் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார் சங்கராச்சாரியார், மதுரை ஆதீனம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் என மற்ற மடத்தின் ஆதீனங்களோடு பேசி அனைவரையும் ஒன்று சேர்ந்தார். நான் செக்ரட்டரி ஆனேன், சங்கராச்சாரியார் மடங்களுக்கான அமைப்பின் தலைவரானார்…..
இந்த அமைப்பை ஆரம்பிப்பதிலிருந்து ஆதீனங்கள் ரொம்பு உதவிகள் செய்தார்கள். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு ஏகப்பட்ட சொத்துக்கள் உண்டு அதுபோல மற்ற ஆதீனங்களுக்கும் வருவாய் இனங்கள் உண்டு. இவற்றை முறைப்படுத்திப் பயன்படுத்திக் கொள்ள ஒரு திட்டம் தீட்டினோம். அதாவது… மடங்கள் தங்கள் வருவாயின் ஐந்து சதவீதத்தை வருஷத்துக்கொருதடவை. மடங்களுக்கான அமைப்புக்காக கொடுக்க வேண்டும். இந்த நிதியில்தான் அமைப்பு இயங்க வேண்டும். இந்தச் செல்வம் மூலம் நமது மதத்தில் நிலவும் பிரிவுகளைத் தாண்டி ஒரு பொதுவான ஆன்மீகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என நாங்கள் திட்டம் போட்டோம்.
இந்த விஷயங்கள் பற்றி விவாதிக்க, அமைப்பின் கூட்டத்தையும் கூட்டினோம். இதில் மகாப்பெரியவர் தலைமையேற்பார். மற்ற மடங்களின் மடாதிபதிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். வருஷாவருஷம் கூட்டம் நடந்தது. சொன்னபடி மடங்கள் தங்களது வருவாயில் 5 % பங்கைக் கொடுக்க முன்வரவில்லை.
கூட்டம் மட்டும் நடந்த படி இருந்தது.கூட்டம் ஐந்தாவதோ, ஆறாவதோ… மதுரை பெரிய ஆதீனம் ஒரு பிரச்சினையைக் கிளப்பினார். கோயில்களைக் கட்டியது மன்னர்கள். அதற்கு உதவிசெய்தது உழைப்புக் கொடுத்தது. வியர்வை கொடுத்தது, வீர்யம் கொடுத்தது. கல்சுமந்தது. மண் சுமந்தது எல்லாம் பிராமணர் அல்லாதார்.ஆனால் பூசை செய்வது மட்டும் பிராமணர்களா? கல் சுமந்து கோயில் கட்டியவனுக்கு, சாமியைச் சுமக்க, பூசை செய்யத் தடையா?
“வடநாட்டில் குறிப்பாகக் காசியில் கோயிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் அவரவர் பூசை செய்து போகிறார்கள். அதுபோல இங்கேயும் அனைவரும் பூசைசெய்ய வேண்டும். மடங்களுக்கான அமைப்பு அதற்கு முன் முயற்சி எடுக்கவேண்டும். தமிழில் அர்ச்சனைகள் நடைபெற வேண்டும் அதற்கு இந்த அமைப்பு உதவவேண்டும்.”
இவ்வாறெல்லாம் மதுரை ஆதீனம் புதிய கருத்துக்களை பேசினார். சொன்னதோடு இல்லை தஞ்சாவூர் ஜில்லாவில், கும்பகோணம் சுவாமிமலை இடையே இருக்கிற திருப்புறம்பியத்தில் கோயிலில் குடிகொண்டுள்ள சிவனைப்போலவே வேறொரு விக்ரகத்தை கோயிலுக்கு வெளியே வைத்து அனைவரும் பூசிக்க ஏற்பாடும் செய்தார். இது மடங்களுக்கான அமைப்பில் சலசலப்பை உண்டு பண்ணியது. ஏற்கெனவே நிதியாதாரம் இல்லாமல் நடைபோட்ட அமைப்பில் மதுரை ஆதீனத்தின் கருத்தை, மகாப்பெரியவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
சூத்ராள் பூஜை பண்றது. அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது.. என்றார் மகாப்பெரியவு (தாத்தாச் சாரியாரின் இந்தச் செயிதி அவர் எழுதிய “எங்கே போகிறது இந்து மதம்?” என்னும் நூலில் காணலாம்)
பிறகு ஏது பொது அமைப்பு? மடங்களுக்கான அமைப்பு மங்கி மறைந்து போயிற்று. அதுமட்டுமா? வேததர்ம பரிபாலன சபைக்கனவுகள் எல்லாமே நனவுலகில் நில்லாது நிழலாகிப் போயின. அவரும் மறைந்து போய் விட்டார். அந்த மகாப்பெரியவர், ஏற்படுத்திய ஸ்தாபனங்களும் அவருடனேயே போயே போய்விட்டன.
(நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட, ராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?” என்னும் நூலிலிருத்து எடுக்கப்பட்டது.)
