இந்தியாவின் கல்வி வரைபடத்தில் தமிழ்நாடு எப்போதும் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது. “கல்விக்கண் திறந்த காமராசர்” காலம் தொடங்கி இன்று வரை, ஏழை எளிய மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதில் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெளியாகியுள்ள புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை மீண்டும் ஒருமுறை உலகிற்குப் பறைசாற்றியுள்ளன.
கடந்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக சுமார் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், தமிழ்நாடு இதற்கு நேர்மாறான ஒரு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தரவுகளின்படி, தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது:
2021-2022 கல்வியாண்டு: 37,589 அரசுப் பள்ளிகள்.
2024-2025 கல்வியாண்டு: 37,626 அரசுப் பள்ளிகள்.
இந்தக் குறுகிய கால இடைவெளியில் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது, தமிழ்நாடு அரசு கல்வியின் மீது கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ‘நம் பள்ளி.. நம் பெருமை’ போன்ற திட்டங்கள், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே அரசுப் பள்ளிகள் குறித்த நன்மதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ‘காலை உணவுத் திட்டம்’, ‘புதுமைப் பெண் திட்டம்’ மற்றும் ‘தகைசால் பள்ளிகள்’ போன்ற முன்னெடுப்புகள் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதோடு, புதிய பள்ளிகளின் தேவையையும் உருவாக்கியுள்ளன.
உயர் கல்வியில் இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. பள்ளிக்கல்வியில் சேர்க்கை 100%.
‘நீதிக்கட்சி’ ஆட்சிக் காலம் முதல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
சர் பிட்டி தியாகராயர் சென்னை மாநகராட்சியின் தலைவராக (மேயர் பதவியின் அப்போதைய பெயர் – பிரெசிடென்ட்) இருந்தபோது, 1920-ஆம் ஆண்டு சென்னையில் ‘மதிய உணவுத் திட்டம்’ முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1920-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் மாதம் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது.
சென்னை ஆயிரம் விளக்கு (Thousand Lights) பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது.
அங்கு பயின்ற ஏழை மாணவர்கள் பசியுடன் இருப்பதைக் கண்டு, அவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கினால் கல்வித் தரம் உயரும் என்ற நோக்கத்தில் பிட்டி தியாகராயர் இத்திட்டத்தை முன்னெடுத்தார்.
அப்போது ஒரு மாணவருக்கு உணவளிக்க ஒரு நாளைக்கு ஒரு அணா மட்டுமே செலவிடப்பட்டது. நீதிக்கட்சியின் இந்த முன்னெடுப்புதான் பின்னாளில் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆர் காலத்தில் ‘சத்துணவுத் திட்ட’மாக மாறியது. பிறகு, கலைஞர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கினார்.
அவர் காலத்தில் இத்திட்டத்தில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்கள்
- ஊட்டச்சத்தை அதிகரித்தல்
கலைஞர் அவர்கள், வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து அவசியம் என்பதை உணர்ந்து, 1989-ஆம் ஆண்டு முதல் இத்திட்டத்தில் முட்டை வழங்கும் முறையை அறிமுகப்படுத்தினார்.
முதலில் மாதம் ஒரு முறை முட்டை வழங்கப்பட்டது. பின்னர் அது வாரத்திற்கு ஒரு முறை என மாற்றப்பட்டது. முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குப் பதிலாக வாழைப்பழம் வழங்கும் முறையையும் அவர் கொண்டு வந்தார்.
- ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டம்
குழந்தைகளின் ஆரம்பக்கால வளர்ச்சியில் அக்கறை காட்டிய கலைஞர், 1975-ஆம் ஆண்டு சத்துணவு மய்யங்கள் மற்றும் அங்கன்வாடிகளை வலுப்படுத்தினார். இதன் மூலம் பள்ளிக்குச் செல்லும் முன்பே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தார்.
- சத்துணவுத் திட்டத்தை விரிவுபடுத்தல்
எம்.ஜி.ஆர் அவர்கள் சத்துணவுத் திட்டத்தை (Noon Meal Scheme) விரிவுபடுத்திய பிறகு, 1990-களில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கலைஞர், அந்த உணவின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தினார்.
உணவில் கொண்டைக்கடலை, பயறு வகைகள் ஆகியவற்றைச் சேர்த்து குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தினார்.
பள்ளிகளில் சமையல் செய்பவர்களுக்கான பணிப் பாதுகாப்பு மற்றும் ஊதிய முறைகளிலும் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.
இப்போதைய திராவிட மாடல் ஆட்சியில், ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிகளில் ‘காலை உணவுத் திட்ட’மும் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக அளவில் இத்திட்டம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் விளைவாக இடை நிற்றல் என்பது முற்றிலும் அகன்றது.
திராவிட இயக்கம் என்ன சாதித்தது என்பவர்கள் கண்களில் உள்ள காழ்ப்பு கொண்ட அழுக்குத் திரையை அகற்றி விட்டு பார்வையைச் செலுத்துவார்களாக!
