ஜாதியைப் பாதுகாப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் சமூகக் கொள்கை – மாநிலங்களே இல்லாமல் செய்வது அதன் அரசியல் கொள்கை!
கூட்டாட்சி இருக்காது; அறிவிக்கப்படாத அதிபர் ஆட்சி, ஒற்றையாட்சி–
இதை வீழ்த்தும் வல்லமை ‘திராவிட மாடலு’க்கு மட்டும்தான் உண்டு!
கிருஷ்ணகிரி,பிப்.6, ‘‘‘‘அனைவருக்கும் அனைத்தும்’’, ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’, ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என்றிருந்த நம்மிடையே, மனுதர்மம் உள்ளே நுழைந்து அதைக் கெடுத்தது. அதை மறுபடியும் மீட்கத்தான் திராவிடம் பிறந்தது. திராவிட மாடலாகத் தொடர்கிறது’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி”
கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில், ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் பரப்புரை கூட்டம் மற்றும் “பெரியார் உலகம்” நிதி அளிப்பு விழா இரண்டையும் இணைத்து நேற்று (5.2.2026) காலை 11 மணியளவில், சிறீ வெங்கடேஸ்வரா சுபம் கட்டடத்தில், அரங்கக் கூட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வுக்கு மாவட்டக் கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்டச் செய லாளர் செ.பொன்முடி அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். மேனாள் சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர் டி.செங்குட்டுவன், மேற்கு நகர தி.மு.க. செயலாளர் அஸ்லாம் ரகுமான் செரீப், கிழக்கு நகர தி.மு.க. செய லாளர் எம்.வேலுமணி, திருப்பத்தூர் மாவட்டக் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன், ஓசூர் மாவட்டக் கழகத் தலைவர் வனவேந்தன், பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் புத்தகங்களையும் அறிமுகம் செய்தும் உரையாற்றினார். மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் தொடக்க உரையாற்றினர். திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் புஷ்பா கிருஷ்ணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி. நாகராசன், பெரியார் பெருந்தொண்டர் பையூர் மதிமணியன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுப்ரமணியம், மாநில மகளிர் அணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, தி.மு.க.ஒன்றியச் செயலாளர்கள் நாராயணன், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
அலையென வந்து அனைத்துக் கட்சியினர் தமிழர் தலைவருக்கு மரியாதை!
தொடர்ந்து பெரியார் உலகம் நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் ஊ.ஜெயராமன் ஒருங்கிணைத்தார். விடுதலை வாசகர் வட்டத் தலைவர் மேற்கு நகர தி.மு.க. செயலாளர் அஸ்லம் ரகுமான் ஷெரிஃப், வெ.நாராயண மூர்த்தி, மருத்துவர் தென்னரசு, மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைத் தலைவர் தணிகை ஜி.கருணாநிதி, தி.மு.க.கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ஆர்.எஸ்.கிரி உள்ளிட்டோர் கழகத் தலைவரிடம் பெரியார் உலகத்திற்கான நிதியை வழங்கி மகிழ்ந்தனர். தொடர்ந்து, 1,000 ரூபாய் 2,000 ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை அனைத்துக் கட்சி களையும் சார்ந்த தோழர்கள் வரிசையாக வந்து கழகத் தலைவரிடம் உரிய தொகை கொடுத்து பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து எஸ்.டி.பி.அய். தோழர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்கள் கழகத் தலைவருக்கு ஓயாமல் அலை அலையாக வந்து ஆடை அணிவித்து மரியாதை செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு, கழகத் தலைவர் ஆடை அணிவித்து மரியாதை செய்து மகிழ்வித்தார்.

ஆர்.எஸ்.எஸ். – அது ஒரு ரகசிய இயக்கம்!
நிறைவாக கழகத் தலைவர் ஆசிரியர் உரை யாற்றினார். முன்னதாக, பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன் – இந்திராகாந்தி இணையர்களின் 32 ஆம் மண நாள், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன் பிறந்த நாள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக அவர்களுக்கு மரியாதை செய்திருந்தார். அத்துடன் பெரியார் பெருந்தொண்டர் சுப்பிரமணியம் உள்ளிட்டோருக்கும் கழகத் தலைவர் மரியாதை செய்திருந்தார். விடுதலை சந்தாக்களும் அளிக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு, “நான் வந்தது 2 விழாக்களுக்கு; நடத்தியது 7 விழாக்கள்” என்று கலகலப்புடன் தொடங்கி னார். அடுத்து, “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் தலை தாழ்ந்த நன்றிகள்” என்றார். தொடர்ந்து, பெரியார் உலகத்தின் சிறப்புகள், “வரலாற்றைப் படைக்கும் என்பதைவிட, வரலாற்றின் பெருமையைப் பேசும் படியாக இருக்கும்” என்றார். தலைப்பை நினைவுபடுத்தி, “சுயமரியாதை இயக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். என்பது வெளிப்படையான இயக்கம் அல்ல. அது ரகசிய இயக்கம்” என்றார். அடுத்து, “சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகள் ஆகின்றன. சூத்திரன் ஒழிக்கப்பட்டானா? பறையன், பள்ளன் இழிவு நீங்கியதா? இல்லையே… தென்புலத்தில் மட்டும் தான் இதற்கு எதிர்ப்பு. குறிப்பாக தமிழ்நாட்டில். இதுதான் திராவிடம்” என்று அடுத்தடுத்து கேள்விகள் கேட்டு, அதற்கு தீர்வும் சொன்னார்.
ஒப்பனைகள் நிரந்தமாகுமா? விரைவில் கலையும்!
ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க. ஆகியவற்றோடு நாம் தத்துவரீதியாக போராடிக்கொண்டு இருக்கும் போது, இடையில் திரைப்படத்தில் இருந்து புதிதாக வந்திருப்பவர்களைக் குறிப்பிட, “ஒப்ப னைகள் நிரந்தரம் ஆகாது. போட்டவர்களே அதை விரைவில் கலைத்துவிடுவர். வானவில் சிறிது நேரம் இருக்கும்; மின்மினிகள் மின்சாரத்தோடு போட்டி போட முடியாது” என்று ரசிக்கும் படியாகச் சொல்லி, நாகரிகமாக விமர்சனம் செய்தார்.

இடையில் வந்த இழிவை அடியோடு துடைத்தெறியத்தான் திராவிடம் வந்தது!
தொடர்ந்து, “ஜாதி எப்படி வந்தது? பாதியில் வந்தது! அதற்கு முன்பு எப்படி இருந்தது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! யாதும் ஊரே; யாவரும் கேளிர்! என்று இருந்தோம். எப்படி இது மாறியது? ஆரியர்கள் கையோடு கொண்டு வந்த மனுதர்மத்தால் மாறியது! அந்த மனு தர்மம் என்ன செய்தது? மனிதர்களை பிளவாக்கியது! திராவிடர்களை சூத்திரனாக்கியது; பஞ்சமனாக்கியது; அடிமையாக்கியது” என்று அடுத்தடுத்து கேள்வி, பதில்களை சொல்லி வந்தவர், “அப்படி இடையில் வந்த இழிவை அடியோடு துடைத்தெறியத்தான் திராவிடம் வந்தது!” என்று 100 ஆண்டுகால ஆரிய, திராவிடப் போராட்ட வரலாற்றை ரத்தினச் சுருக்கமாக சொல்லி தெளிவு படுத்தினார்.
அதிபர் ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ‘திராவிட மாட’லுக்கே உள்ளது!
முத்தாய்ப்பாக, “ஜாதியைக் காப்பாற்ற பிறந்ததுதான் ஆர்.எஸ்.எஸ். அதை ஒழிக்கப் பிறந்ததுதான் திராவிடம்” என்றார். அதை இன்னமும் தெளிவாக்க, “ஜாதியை பாதுகாப்பது ஆர்.எஸ்.எஸ்.சின் சமூகக் கொள்கை. மாநிலங்களை ஒழிப்பது அதன் அரசியல் கொள்கை; அதன் இலக்கு ஒற்றையாட்சி; கூட்டாட்சி இருக்காது; இன்று நடப்பது அறிவிக்கப்படாத அதிபர் ஆட்சி” என்றெல்லாம் விவரித்துவிட்டு, “இதை வீழ்த்தும் வல்லமை திராவிட மாடலுக்குத்தான் உண்டு” என்று சொன்னதும் பலத்த கைதட்டல்கள் எழுந்து அடங்கின. தொடர்ந்து, திராவிடர் இயக்கம் பாலியல் நீதி கலந்த சமூகநீதியால் சாதித்ததை பட்டியலிட்டார். தொடர்ந்து, “நமது தலைவர்கள் பெற்றுத் தந்த உரிமைகளை தக்க வைக்கவும், விரிவாக்கவும் மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும். இது எங்களுக்காக அல்ல; உங்களுக்காக; உங்கள் பிள்ளைகளுக்காக; பேரப்பிள்ளைகளுக்காக” என்று, திராவிடர் இயக்கம் பற்றிய ஒரு தத்துவ வகுப்பாகவே, பொதுக்கூட்டத்தை மாற்றி, தான் ‘விடுதலை’ ஏட்டுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஆசிரியர்தான் என்பதை எண்பித்து, கூறி தமது உரையை நிறைவு செய்தார்.
நிறைவாக மாவட்டத் துணைத் தலைவர் த.கதிரவன் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார்.
பங்கேற்றோர்
நிகழ்வில், மாநில மகளிரணி துணைச் செயலாளர் மு.இந்திராகாந்தி, மாநில கலைத் துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மேனாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.மணிமொழி, பருகூர் ஒன்றியத் தலைவர் மே.மாரப்பன், ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், மு.சிலம்பரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.சிலம்பரசன், வே.புகழேந்தி, சி.வெங்கடாச்சலம், ஆர்.பழனி, பூ.இராசேந்திர பாபு, மு.வேடியப்பன், இராம.சகாதேவன், தி.அன்புச்செழியன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள், இந்தியா கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரைகளை செவிமடுத்துச்
சென்றனர்.
