சென்னை நவ 26 இந்திய அணி வீரர்களின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி ஆக்சன் கேமராவுடன் சென்று விளம்பரம் செய்து கொண்டு இருப்பதாக பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் விமர்சித்து உள்ளார்.
கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்பு களுக்கு மத்தியில் தொடங்கிய அய்சிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 19.11.2023 அன்று அன்று இறுதிப் போட்டியுடன் முடிந்தது. தொடர் முழுவதும் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் விளையாடிய இந்திய அணி, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது.
2 வதாக களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் டிராவிஸ் ஹெட்டும் லபுஷேனும் சேர்ந்து அபாரமாக ஆடி 43ஆவது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றனர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6 வது முறையாக உலகக்கோப்பையை வென்று அசத்தியது.
இந்தியா உலகக்கோப்பை வெல்லும் என்ற நம்பிக்கையில் இருந்த வீரர்கள், ரசிகர்கள் வேதனையில் கண்ணீர் வடித்தனர். விராட் கோலி, கேப்டன் ரோகித் ஷர்மா, முகம்மது சிராஜ், குல்தீப் யாதவ், முஹம்மது ஷமி, சுப்மன் கில் என அனைத்து இந்திய வீரர்களும் கண்ணீர் வடித்து சோகத்துடனே மைதானத்தை விட்டு வெளியேறினர். இந்திய அணி வீரர்கள் உடை மாற்றும் அறைக்குள் சென்று உடைந்து அழுததை பார்க்கையில் வேதனையாக இருந்ததாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமியின் தலையை பிடித்து பிரதமர் மோடி ஆறுதல் தெரிவிக்கும் ஒளிப்படம் வெளியானது. இதனை பகிர்ந்து பிரதமர் மோடிக்கு ஷமி நன்றி கூறி இருந்தார்.
இந்திய அணியின் உடை மாற்றும் அறைக்குள் பிரதமர் மோடி சென்று அனைத்து வீரர்களுக்கும் ஆறுதல் கூறும் காட்சிப் பதிவு வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து பாஜகவிலிருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் கருத்து கூறி இருக்கிறார். அவர் பேசுகையில், “டிரஸ்ஸிங் ரூமில்” கிரிக்கெட் வீரர்கள் கலக்கமடைந்த போது, மோடிஜி “மைக் கேமரா ஆக்ஷன்” மூலம் விளம்பரம் செய்து கொண்டிருந்தார், வீரர்கள் சங்கடமானார்கள். 1983 வாகையர்கள் பிசிசிஅய்யால் அவமரியாதை செய்யப் பட்டனர். எதிர்காலத்தில் நீங்களும் அதேபோல் மதிக்கப்படுவீர்கள்.
எல்லாம் நமது பிரதமர் மற்றும் பிசிசிஅய் ஹீரோ ஜெய் ஷா அவர்களை பற்றியது.
இது 140 கோடி மக்கள் மற்றும் உங்கள் உணர்வுகளை பற்றியது அல்ல. எல்லாம் விளம்பரம் பற்றியது. இந்திய அணி இழப்பு, குஜராத் வணிக லாபம் (விமானங்கள், ஓட்டல்கள், உணவு, லஞ்சம், மது). இது ஊழல் இல்லையா? நீங்கள் அனைவரும் அரசியல் ரீதியாக பிடிபட்டீர்கள்.”
இவ்வாறு நடிகை காய்த்ரி ரகுராம் குறிப்பிட்டு உள்ளார்.