தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விடும் சங்பரிவாரத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி!
– வீ. குமரேசன்
இந்தியாவில் வாழும் மக்களிடையே நிலவிடும் பாகுபாடு, வேறு எந்த நாட்டிலும் காணமுடியாதது. பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் சமூகச் சூழலை இந்திய நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. மனிதரிடையே பாகுபாடு கூடாது; சமத்துவமும், சமத்துவ வாய்ப்பும் நிலவிட வேண்டும் என நம் நாட்டை ஆளும் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் உருவாக்கத்தில் அதன் வரைவுக் குழுத் தலைவராக இருந்த பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், இந்திய சமூகத்தில் நிலவிடும் பாகுபாட்டை குறிப்பிடுகையில், “ஆதிக்க அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பு ஏறுமுக வாக்கிலான மேட்டிமை மரியாதையையும், இறங்குமுக வாக்கிலான இகழ்ச்சியையும் (ascending order of reverence and descending order of contempt) கொண்டது” என்று கூறுவார்.
- தொட்டிலை ஆட்டிவிட்டு, பிள்ளையையும் கிள்ளி விடும் சங்பரிவாரத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி!
- – வீ. குமரேசன்
- சமூகநீதி உயிர்பிக்கப்பட்டது
- தமிழர் தலைவரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் சாதனை!
- ஆதிக்க உயர் ஜாதி மாணவர்களின் போராட்டம்
- மருத்துவ மாணவர் தற்கொலை
- உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட மீறல்
- அய்ந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்
- சமூகநீதி உணர்வுமிக்க தமிழ்நாடு முதலமைச்சர்
சமூகநீதி உயிர்பிக்கப்பட்டது
இந்தப் பாகுபாடு களையப்பட வேண்டும். ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்ற முதுமொழிக்கேற்ப பாகுபாட்டைச் சரிசெய்திட, சற்று மாறுபட்ட பாகுபாட்டைக் (Positive Discrimination) கடைப்பிடித்திட வழிவகுத்திடும் வகுப்பு வாரி உரிமையினை வழங்க அன்றைய சென்னை இராஜதானியை ஆண்ட நீதிக்கட்சி அரசு ஆணை பிறப்பித்தது; பின்னாளில் நடைமுறைக்கும் வந்தது. விடுதலை பெற்ற இந்தியாவில் அந்த வகுப்புவாரி உரிமைக்கு சவால் ஏற்பட்டு, நாட்டின் உச்சநீதிமன்றம் செல்லாது என தீர்ப்பு வழங்கிய நிலையில் தந்தை பெரியார் ஒரு மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தியதால், ‘செல்லாது’ என்ற தீர்ப்பளிக்கப்பட்ட வகுப்புவாரி உரிமை, சமூகநீதிக்கான உரிமையாக உயிர்ப்பிக்கப்பட்டது. எந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15-அய் சுட்டிக்காட்டி வகுப்புவாரி உரிமை செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டதோ அந்தப் பிரிவில், கூடுதல் பிரிவாகச் (பிரிவு 15(4)) சேர்த்து சமத்துவத்திற்கான உரிமை நிலை நாட்டப்பட்டது. அந்த நேரத்தில் நாட்டின் சட்ட அமைச்சராக இருந்து அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரும் மசோதாவைக் கொள்கைப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியவர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆவார்.
தமிழர் தலைவரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் சாதனை!
அன்றிலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்களின் சமத்துவத்திற்கான உரிமைக்கு ஆதிக்க ஜாதியினர் சவாலை ஏற்படுத்திக் கொண்டே வந்துள்ளனர். அவ்வப்போது அந்தச் சவால்களை நேர்கொண்டு முறியடிக்கும் வகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய விழுமியமான “அனைவரும் சமம்; அனைவருக்கும் சமத்துவ வாய்ப்புகள்” என்பதைக் காப்பாற்றி வளர்த்தெடுப்பதில் திராவிடர் இயக்கத்தின் தாய் அமைப்பான திராவிடர் கழகமும், அதன் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், திராவிடர் இயக்கத்தின் ஏனைய அரசியல் கட்சி, அமைப்புகளுடன் இணைந்து, சமூகநீதியில் நாட்டம் கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட்டுச் சாதனை புரிந்து வந்துள்ளனர்.
சமூகநீதிக்கு எதிரான அப்படிப்பட்ட ஒரு சவாலை நேர்கொள்ளும் சூழல் தற்பொழுது எழுந்துள்ளது. பல்கலைக்கழக மானிய நல்கை ஆணையம் எனும் யு.ஜி.சி. (University Grants Commission) வெளியிட்டுள்ள ‘உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கான சமத்துவ வழிகாட்டல் நெறிமுறைகள் 2026′-அய் எதிர்த்து உயர் கல்வி நிலையங்களில் பயிலும் ஆதிக்க ஜாதி மாணவர்களைத் தூண்டி விட்டு, வடபுலத்தில் போராட்டங்கள் நடத்தும் சூழல்கள் ஏற்பட்டுள்ளன. அனைத்திந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பிற்கான இடஒதுக்கீடு ஆணை முதன்முறையாகப் பிறப்பிக்கப்பட்டபொழுது, இதே முறையில், இன்னும் கடுமையாக தங்களது உரிமை பாதிக்கப்பட்டதாக ஆதிக்க ஜாதி மாணவர்கள் போராட்டக் களத்தில் இறக்கப்பட்டனர். அது களத்தில் இறங்கிய போராட்டம் அல்ல; இறக்கப்பட்ட போராட்டம் என்பதை அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களே பின்னாளில் விளக்கமளித்தனர். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், பிரதமராக இருந்த பொழுது மண்டல் அறிக்கை அமல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தால் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு கிடைத்தது. சமூகநீதி நிலைநாட்டப்பட்டது. சமூகநீதிப் பயணத்தில் நீண்ட நெடிய தூரம் நாம் பயணித்து வந்தாலும், அந்தச் சமூகநீதி உரிமையைப் பெறும் மக்களிடையே இந்த உரிமை பற்றிய விழிப்புணர்வு உரிய அளவில் இல்லையென்பதே உண்மை நிலை.
ஆதிக்க உயர் ஜாதி மாணவர்களின் போராட்டம்
அய்தராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஜாதி, மதப் பாடுபாட்டின் காரணமாக தனது உயிரை மாய்த்துக் கொண்ட ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா மற்றும் மராட்டிய மாநிலத்தில் உள்ள தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவர் பயால் தத்வி என்ற முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்தவர் ஆகியோரின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உயர் கல்வி நிலையங்களில் ஜாதிப் பாகுபாட்டைப் போக்கிட ரோகித் வெமுலா பெயரில் ஒரு தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று பா.ஜ.க. ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யு.ஜி.சி. நிறுவனமானது 13 ஜனவரி 2026 அன்று வெளியிட்டுள்ள சமத்துவ விதிகளை (University Grants Commission) (Promotion of Equity in Higher Education Institutions) Regulations 2026 சுட்டிக்காட்டி தங்களது ஆதிக்கம் உயர் கல்வி நிலையங்களில் தடைபடக் கூடாது என்ற உள்நோக்கில், சமத்துவ விதிகள் தங்கள் மீது பாயக்கூடும் என்ற அச்சத்தில் ஆதிக்க ஜாதி மாணவர்கள் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையொட்டி உயர் ஜாதியினர் சார்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சமத்துவ விதிகளில் பாகுபாடு என்பது பற்றி தெளிவின்மை இருப்பதாகக் காரணமாக கூறி, யு.ஜி.சி.யின் விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. சமத்துவ விதிமுறைகளில் ‘பாகுபாடு’ என்பது மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம், மாற்றுத்திறன் ஆகிய இவற்றுள் ஒன்றில் அடிப்படையில் வெளிப்படையாகவோ, அல்லது மறைமுகமாகவோ காட்டப்படும் எந்தவொரு ‘நியாயமற்ற, வேறுபட்ட அல்லது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை யையோ அல்லது செயல்களையோ குறிக்கும்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த விதிமுறைகளின் மூலம் பாகுபாட்டை எதிர்த்து பல கட்டங்களில் குறை களைந்திடும் அமைப்புகளும், சமத்துவ வாய்ப்பு மய்யங்களும், சமத்துவக் குழுக்களும், சமத்துவக் கண்காணிப்புப் படைகளும் மற்றும் சமத்துவத் தூதுவர்கள் எனும் வகையில் ஒவ்வொரு உயர்கல்வி நிலையத்திலும் ஏற்படுத்திட வகை செய்யப்பட்டுள்ளது. பாகுபாட்டைக் கவனிக்காமல் இருக்கும் கல்வி நிலையங்களின் மீது பொறுப்புக் குற்றம் சுமத்தும் சூழலும் அந்த விதிமுறைகளில் உள்ளது. ஆனால் போராட்டக்காரர்களோ, பாகுபாடு குறித்து பொய்யான புகார் மனுமீது நடவடிக்கை எடுக்கும் விதிகள் சேர்க்கப்படவில்லை என உப்புச் சப்பில்லாத காரணங்களைக் கூறிவருகிறார்கள்.
உச்சநீதிமன்றம், இடைக்காலத் தடையாணை பிறப்பித்திருப்பதோடு, பாகுபாடு பற்றிய தெளிவை உயர்மட்ட அளவிலான குழு அமைத்து அதன் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இடைக்காலத் தடை நடைமுறையில் உள்ள காலத்தில், பாகுபாடு குறித்து 2012இல் யு.ஜி.சி. ஏற்படுத்திய சமத்துவ விதிமுறைகள் நடைமுறையில் இருக்க வேண்டும் எனவும் ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு வெளிவந்த யு.ஜி.சி.யின் விதிமுறைகளில் பட்டியலின / பழங்குடி மாணவர்கள் மீது நடத்தப்படும் பாகுபாட்டைக் களைந்திட, சமத்துவ வாய்ப்பு சிறு குழு (Equal Opportunity Cells) பற்றிக் குறிப்பிட்டுள்ளதோடு 25 வகையான பாகுபாட்டு செயல்களையும் சுட்டிக் காட்டியுள்ளது. விதியின் கூறுகள் விளக்கங்களின் விரிவாக்கமாகவே இருக்க வேண்டும், குறிப்பிட்ட செயல்களை மட்டும் சுட்டிக் காட்டிப் பேசக் கூடாது. Any law or rule must be exhaustive but not illustrative alone. 2024ஆம் ஆண்டு சமத்துவ விதி முறைகள் ஒரு பரந்துபட்ட தளத்தில் காட்டப்படும் பாகுபாட்டைக் குறிப்பிட்டு, அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
2012 விதிகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாகுபாடு பற்றிய குறிப்பு, எதுவும் இல்லை என்பதே ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளே பாகுபாட்டைக் காட்டுவதற்கு ஒப்பாகாதா?
மருத்துவ மாணவர் தற்கொலை
கடந்த காலங்களில் டில்லி எய்ம்ஸ் நிறுவனத்தில் தொடர்ந்து படிக்க இயலாத வகையில் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு தமிழ்நாடு திருப்பூர் நகரைச் சார்ந்த மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் பட்டியல் / பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர் அல்ல; இருந்தாலும் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் நிகழ்த்தப்படும் பாகுபாட்டுக்கு எதிரான பாதுகாப்பு கிடைத்திருந்தால் அந்த மாணவர் உயிர் போயிருக்காது.
பாகுபாட்டைக் களைந்திடும் நடவடிக்கை எடுத்திட 2012 விதிமுறைகளைவிட 2026 விதிமுறைகளில் உரிய வழிகள் உள்ளன.
‘பாகுபாடு’ குறித்த தெளிவின்மை என்று காரணம் காட்டி உச்சநீதிமன்றம் யு.ஜி.சி. 2026 – விதிமுறைகளின் நடைமுறைக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தெளிவின்மை இருப்பதாக உச்சநீதிமன்றம் கருதினால் அதைச் சரி செய்திட, தடை உத்தரவு தவிர வேறு வழிகளில் உச்சநீதிமன்ற உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கலாம். மேலும் அரிய வகை ஏழைகளான உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்கிட வழி ஏற்படுத்திய ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் எனக் குறிப்பிட்டு விட்டு அதற்கு விளக்கமாக ‘வேறு வகைகளில் இடஒதுக்கீடு பெறாத வகுப்பினர்’ என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏழைகள் எல்லா வகுப்பிலும் இருப்பார்கள். அவர்களுக்கான இட ஒதுக்கீடு என்பதாக இல்லாமல், அதுவரை இடஒதுக்கீட்டில் வராத வகுப்பினர் என பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க. அரசு தந்திரமாகச் செய்து முடித்தது. இது இடஒதுக்கீடுத் தத்துவத்திற்கு முரணானது. இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதுதான் அரசியலமைப்புச் சட்டப்படி ஆட்சி செய்பவர்களின் செயலாக இருக்க முடியும். இடஒதுக்கீட்டுக்கு எதிரான நடவடிககையில் அரசு செயல்பட முடியாது; செயல்படக் கூடாது.
உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட மீறல்
உச்சநீதிமன்றம், தனது ஆணையில் யு.ஜி.சி. விதிமுறைகளில் குறிப்பிடப்படாத ஒரு சொல்லாடலை பயன்படுத்தியுள்ளது. இடஒதுக்கீட்டின் கீழ் வராத பிரிவினர் (non-reserved classes) என வகைப்படுத்தியுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் விழுமியங்களுக்கு உடன்பாடானதா? ‘வழக்கில் ஆதிக்க ஜாதியினர்’, ‘அடக்கப்படும் ஜாதியினர்’ என்பதுதான் நிலைப்பாடு. இதில் ‘இடஒதுக்கீடு சாராத வகுப்பினர்’ என குறிப்பிட வேண்டியதன் அவசியத்தை தடை ஆணை விளக்கவில்லை. “பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு” என்ற பெயரில் உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கிய ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைக்கு ஒப்பான நடவடிக்கை போல் அல்லவா உள்ளது.
அய்ந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்
இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் சட்டமன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோரின் வாக்குபலம் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும். இவர்களின் வாக்குகளை அபகரிக்க ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த அடிப்படையிலான பா.ஜ.க. ஒன்றிய அரசு கடுமையாக முயற்சி செய்து வருகிறது.
அந்த நோக்கத்தில்தான் யு.ஜி.சி.யின் விதிறைகளை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொண்டு வந்தது. யு.ஜி.சி. என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றாலும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் செயல்பட்டு வருகிறது. ஆனால் சங்பரிவாரங்களின் ஆதார ஆதரவாளர்களான ஆதிக்க ஜாதியினர் விதிமுறைகளை எதிர்த்து போராட்டக் களத்தில் இறங்கியதும் – இறக்கப்பட்டதும் பா.ஜ.க. அரசு எதிர்பார்த்து நடைபெற்றதுதான்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற, தொட்டிலை ஆட்டி விட்டு – யு.ஜி.சி. விதிமுறைகளைச் சரி செய்வதாகக் காட்டி விட்டு – அந்த விதிமுறைகளை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆதிக்க ஜாதி மாணவர்களின் நடவடிக்கை குறித்து இதுநாள் வரை வாய் திறக்கவில்லை பா.ஜ.க.! இது ‘குழந்தையைக் கிள்ளிவிடும்’ செயலுக்கு ஒப்பானதாகும்.
சமூகநீதி உணர்வுமிக்க தமிழ்நாடு முதலமைச்சர்
மேலும் அரசு சார்பாக வாதிடுகையில், அரசு வழக்குரைஞர் அரசின் நிலைப்பாட்டை அழுத்தமாக எடுத்துரைத்து வாதிடுவதுதான் வழக்கம். ஆனால் யு.ஜி.சி. விதிமுறைகள் 2026 குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பாக வாதிட்ட வழக்குரைஞர், விதிமுறைகளின் விழுமியங்களை முழுமையாக வாதிடாமல் பின்வாங்கியுள்ளார். எஸ்.அய்.ஆர். என்று சொல்லக்கூடிய சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு பற்றி நீதிமன்றத்திலும், வீதி மன்றத்திலும் விளக்கம் அளித்த பா.ஜ.க. அரசு / சங்பரிவாரங்கள், ‘யு.ஜி.சி. விதிமுறை 2026′ பற்றிய வழக்கில் தீவிரம் காட்டாததேன்? இந்த பா.ஜ.க. ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாட்டை ஒடுக்கப்பட்ட மக்கள் முழுமையாக உணர வேண்டும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
‘யு.ஜி.சி. விதிமுறைகள் 2026′ எந்த வகையிலும் நீர்த்துப் போகக் கூடாது’ என துணிச்சலாக, சமூகநீதி உணர்வுமிக்க தமிழ்நாடு முதலமைச்சர் தான் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் போராட்டம் நடைபெற்றுள்ள உத்தரப்பிரதேசத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் – ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குப் போராடி வருவதாக கூறும் கட்சியினர் பெரும்பாலும், ஆதிக்க ஜாதியினர் நடத்திய போராட்டத்தைக் கண்டிக்க முன்வரவில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.
‘அரிய வகை ஏழை’களான உயர் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்திலும் எதிர்க்கட்சிகள் இப்படித்தான் நடந்து கொண்டன. ஒட்டு மொத்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புடன் இருந்து தேர்தல் காலங்களில் தங்களது வாக்கு பலத்தைத் தங்களது மேம்பாட்டுக்கும், நல வாழ்வுக்கும் பயன்படுத்துவதில் தான் எப்படிப்பட்ட ஆதிக்க சக்தியினரையும், அதிகார அமைப்பினரையும் வழிக்குக் கொண்டு வரமுடியும் என்பது நாடு முழுவதும் புரிய வேண்டும்.
