தங்களது கைப்பேனாவாளால் என் நூல்
பாராட்டும், வாழ்த்தும் பெற்றுவிட்டது!
27.1.2026 – ‘விடுதலை’யின் ஏட்டின் இரண் டாம் பக்க ‘வாழ்வியல் சிந்தனைகள்’ கட்டுரை வரிசையில் – ‘பெரியார் பற்றிய சிறப்பான நூல் ஒன்று இதோ’ எனத் தலைப்பிட்டு, எனது ‘பெரியார் என்னும் பேரொளி’ நூலுக்கு, தங்கப்பதக்கம் ஒன்று அணிவித்துள்ளீர்கள். ‘கடை விரித்தேன், கொள்வாரில்லை’ என வள்ளலார் வருந்திய வண்ணமே, நானும் கொஞ்சம் நெஞ்சம் கலங்கி யிருந்தேன். நம் எழுத்து போதிய வீரியமின்றி வாடிக் கிடக்கிறதோ என்று வருந்தியிருந்தேன். எழுத்து வளத்தில், வன்மையில் பற்றாக்குறையோ என, சற்றே மனபலவீனம் என்னும் சிறையில் அடைபட்டுக் கிடந்தேன். எனக்கு ‘விடுதலை’, தங்களது பேனா வழியாக விடுதலை வழங்கி விட்டது. மனச் சிறையிலிருந்து முழு ‘விடுதலை’ பெற்று விட்டேன்!
அய்யா, தாங்கள் தந்தை பெரியாரின் வழித்தோன்றல்! அவர் விட்டுச் சென்ற இமாலயப் பணியை இமைப் பொழுதும் சோராமல் செய்து வரும் செம்மல் தாங்கள்! தங்களது கைப்பேனாவாளால் என் நூல் பாராட்டும், வாழ்த்தும் பெற்றுவிட்டது!
நன்றி அய்யா! ஆயிரமாயிரம் நன்றிகள்!
– மு. பாலசுப்பிரமணியன், சின்னமனூர்
