ஈரோடு தமிழன்பன் குரல் தான் ஓய்ந்திருக்கிறது; கவிதைகள் அல்ல!
புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாம்; புகழ் வாழ்க்கையில் அல்ல!!
புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாம்; புகழ் வாழ்க்கையில் அல்ல!!
சென்னை, பிப்.5 ‘‘தப்புத் தமிழன் தான் பெரியாரை தவறு என்று பேசுவான் என்று எழுதிய ஈரோடு தமிழன்பன், புவி வாழ்க்கையில் வேண்டுமானால் மறைந்திருக்கலாம். புகழ் வாழ்க்கையில் இனிமேல் தான் தொடர இருக்கிறார்” என்று கவிஞரின் படத்தைத் திறந்து வைத்து, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கவித்துவமாக உரையாற்றினார்.
- ஈரோடு தமிழன்பன் குரல் தான் ஓய்ந்திருக்கிறது; கவிதைகள் அல்ல! புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாம்; புகழ் வாழ்க்கையில் அல்ல!!
- “இன்னும் இருக்கின்றன பக்கங்கள்” நூல் வெளியீடு!
- “அய்வர் அறக்கட்டளை” தொடக்கம்!
- ஈரோடு தமிழன்பன் எழுதிய “கருணை மறவர் பெரியார்!”
- “ஈரோடு தமிழன்பன் எழுதுகோல் பிடித்து எழுதவில்லை; பெரியாரின் கைத்தடி கொண்டு எழுதினார்!”
- கலந்துகொண்டோர்
சென்னை பல்கலைக்கழகம் தமிழ் மொழித்துறை சார்பில், மெரினா வளாகத்தில் உள்ள பவளவிழாக் கலையரங்கத்தில் 3.2.2026 அன்று காலை 10.30 மணியளவில், கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்மொழித் துறை தலைவர் பேராசிரியர் ய.மணிகண்டன் தலைமை ஏற்று உரையாற்றினார். முன்னதாக முனைவர் வாணி அறிவாளன் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். கவிஞர்கள் தி.அமிர்தகணேசன், கவிமுகில், விழிகள் தி.நடராசன், தமிழமுதன் ஆகியோர் கவிதைகளில் நினைவேந்தல் உரைகளை வழங்கினர். ஈரோடு தமிழன்பன் அவர்களின் வாழ்விணையர் சாந்தகுமாரி, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தோழர் ச.இன்பக்கனி, புலவர் பா.வீரமணி, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
“இன்னும் இருக்கின்றன பக்கங்கள்”
நூல் வெளியீடு!
நூல் வெளியீடு!
தோழர் இராம குருநாதன், தாம் எழுதி வைத்த கவிதையை நினைவேந்தல் உரையாக வாசித்தார். முன்னதாக கவிஞர் தமிழ் அமுதன் உள்ளிட்ட கவிஞர் பெருமக்களுக்கு கழகத் தலைவர் புத்தகங்கள் நினைவுப் பரிசாக வழங்கி மரியாதை செய்தார். தொடர்ந்து கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி நினைவேந்தல் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஈரோடு தமிழன்பன் எழுதி, விழிகள் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘‘100 ஆம் கவிதைப் புத்தகம்’’ என்ற சிறப்பு அடைமொழியோடு, “இன்னும் இருக்கின்றன பக்கங்கள்” என்ற தலைப்பிலான புத்தகத்தை வாழ்விணையர் சாந்தகுமாரி தமிழன்பன் அவர்கள் வெளியிட, கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கழகத் தலைவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து கால்டுவெல், பாப்லோ நெரூடா, விழிகள் வேணுகோபாலன், மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் ஆகியோர் முன்னிலை ஏற்று, ஈரோடு தமிழன்பன் பற்றி வெவ்வேறு கோணங்களில் நினைவேந்தல் உரையாற்றினர்.
“அய்வர் அறக்கட்டளை” தொடக்கம்!
முன்னதாக கவிதைகளில் நினைவேந்தல் வாசித்த தோழர்களுக்கு கழகத் தலைவர் நினைவுப் பரிசாக புத்தகங்கள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில், ஈரோடு தமிழன்பன் நினைவாக, “அய்வர் அறக்கட்டளை” எனும் பெயரில் அய்வர் ஒருங்கிணைக்கும் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது என்றும், ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. நிறைவாக ஈரோடு தமிழன்பன் படத்தைத் திறந்து வைத்த, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.

ஈரோடு தமிழன்பன் எழுதிய
“கருணை மறவர் பெரியார்!”
“கருணை மறவர் பெரியார்!”
அவர் தமது உரையில், ‘இயற்கையின் கோணல் புத்தி’ என்ற தந்தை பெரியார் சொன்ன சொற்றொடரைப் பயன்படுத்தி பேசிவிட்டு, இன்னமும் துக்கம் தொலையாமல் இருக்கும் சாந்தகுமாரி அம்மையாருக்கு ஆறுதல் தரும் விதமாக, ‘‘இன்னும் இருக்கின்றன பக்கங்கள்’ என்று ஈரோடு தமிழன்பன் எழுதியிருக்கிறார். ‘இன்னும் வேண்டுமா துக்கங்கள்’ என்று கேட்க விரும்புகிறேன்” என்றார். பொருத்தமான ஆறுதல் என்பது போல் அனைவரும் கைதட்டி அதை வரவேற்றனர். தொடர்ந்து, “கருணை மறவர் பெரியார்” எனும் தலைப்பில் ஈரோடு தமிழன்பன் எழுதிய, “மனிதனின் எந்த உரையாடலில் விடுதலையும், விடுமுறை போடாத தன்மானமும்” என்ற கவிதையைப் படித்துக் காட்டிவிட்டு, “சிலர் தன்மானத்திற்கு அவ்வப்போது விடுமுறை போட்டுவிடுகின்றனர். சிலரோ, அடமானமே வைத்து விடுகின்றனர்” என்று சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். முன்னதாக அந்தக் கவிதை வரியில் இருந்த சொல்லாடல்களை வியப்புடன் சுட்டிக்காட்டினார்.
“ஈரோடு தமிழன்பன் எழுதுகோல் பிடித்து எழுதவில்லை; பெரியாரின் கைத்தடி கொண்டு எழுதினார்!”
தொடர்ந்து, “இருள் மண்டபத்தில் இரவு நடத்தும் நட்சத்திரத் திருவிழாவுக்கு வருவதற்கு ஒப்புவானா சூரியன்? ஒப்பினால் பகலை யார் பாதுகாப்பது?” என்றும், “பெரியார் பாலஸ்தீனத்தில் பிறந்திருந்தால் யாசர் அராபத்தின் தோளில் துப்பாக்கி ஆகியிருப்பார்! அல்லது யாசர் அராபத் பெரியார் தோளுக்குத் துப்பாக்கி ஆகியிருப்பார்!” என்றும், “புலி தன் குட்டிகளைக் கவ்வுவது போல் பெரியார் தமிழர்களைக் கவ்வினார். பதிந்திருக்கலாம் பல்; படிந்திருக்கலாம் சுவடு; தாய்ப்புலியின் பாதுகாப்பு அது!” என்றும் தொடர்ந்து வாசிக்க, வாசிக்க, பார்வையாளர்கள் மயிர்கூச்செறிந்து கை தட்டல்களையே தங்களின் உணர்வுகளுக்கு வடிகால் ஆக்கிக் கொண்டனர். ஆசிரியர் தொடர்ந்தார். “ஈரோடு தமிழன்பன் எழுதுகோல் பிடித்து எழுதவில்லை; பெரியாரின் கைத்தடி கொண்டு எழுதினார்” என்றதும் தொடர்ந்த கைதட்டல், “தப்புத் தமிழன் தான் அவரைத் தவறு என்று பேசுவான்” என்று அடுத்து சொன்னதும், சிரித்துக்கொண்டே கைதட்டினர். மக்கள் சிரிப்பதைப் பார்த்து ஆசிரியர், “அது யாரென்று நான் சொல்லத் தேவையில்லை” என்றதும் மறுபடியும் சிரிப்பு அலையலையாக எழுந்து அடங்கியது. நிறைவாக, ’காக்கைச் சிறகினிலே’ என்ற சிற்றிதழில் தான் வாசித்த ஈரோடு தமிழன்பன் அவர்களின் ’கடைசிக் கவிதை’ யை, “கடைசிக் கவிதையைக் கேளுங்கள்” என்று மன இறுக்கத்துடன், “இருட்டைக் கண்டு இதயம் நடுங்கும் வெளிச்சமா சூரியன்? என்று தொடங்கும் கவிதையை வாசித்தார். நிறைவாக, “ஈரோடு தமிழன்பன் அவர்களின் குரல் ஓய்ந்திருக்கிறதே தவிர, கவிதைகள் அல்ல! புவி வாழ்க்கையில் மறைந்திருக்கலாமே தவிர, புகழ் வாழ்க்கையில் அல்ல! வாழ்க ஈரோடு தமிழன்பன் புகழ்!” என்று கூறி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.
கலந்துகொண்டோர்
விழிகள் நடராஜன், போளூர் பன்னீர்செல்வம், பெரியார் மாணாக்கன், அரும்பாக்கம் தாமோதரன், பெரியார் பெருந்தொண்டர்கள் தங்கமணி – தனலட்சுமி, கலைமணி, பழனி பாலு, உடுமலை வடிவேல், அருள், தாம்பரம் மோகன்ராஜ், புகழேந்தி மற்றும் ஏராளமான தமிழ்த்துறை ஆய்வு இருபால் மாணாக்கர்கள், கவிஞர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அரங்கம் நிறையும் அளவுக்கு வருகை தந்திருந்து கண்டு, கேட்டு, உண்டு மகிழ்ந்து விடைபெற்றுச் சென்றனர்.
