சென்னை, பிப்.4– தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 65 தொகுதிகள் கேட்கும் பாஜகவுக்கு, 25 தொகுதிகளை ஒதுக்கி சமாதானப்படுத்த அதிமுக திட்டமிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
65 தொகுதிகள்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. மீதமுள்ள 16 இடங்களில் இரண்டாம் இடம் பிடித்தது. அதிமுக கூட்டணியிலிருந்து விலகி பாஜக தனித்துப் போட்டியிட்ட நாடாளுமன்றத் தேர்தலில், 23 தொகுதிகளில் போட்டியிட்டது. சட்டமன்றத் தொகுதி வாரியான வாக்கு கணக்கீட்டில், 59 தொகுதிகளில் இரண்டாவது இடமும், 64 தொகுதிகளில் மூன்றாவது இடமும் பாஜகவுக்குக் கிடைத்துள்ளது.
இதனை முன்னிறுத்தி, தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதாகக் கூறி அதன் தேசியத் தலைமை 65 தொகுதிகளை அதிமுகவிடம் கோரியுள்ளது. உதாரணமாக, மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் கூட்டத்திற்குச் சுமார் 5 லட்சம் பேர் வந்ததாகவும், அதில் 3 லட்சம் பேர் பாஜகவினர் மட்டுமே என்பது கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டுவதாகவும் தலைமை வாதிடுகிறது.
அதிமுக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கப்படவில்லை என்றாலும், நட்பு ரீதியாகப் பேசும் அதிமுக தலைவர்கள் மூலம் கடந்த முறையை விடச் சற்று கூடுதலாக 25 தொகுதிகளை ஒதுக்க விரும்புவதாகத் தெரிகிறது
