முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர் ஆசிரியர்!-வி.சி.வில்வம்

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கட்டுரை

வழக்குரைஞர் மகாதேவன் இல்லத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர்….

முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ஒரு மனிதரைக் குறித்து அறிய சில மாதங்கள் ஆகலாம்; ஆனால் ஆசிரியர் குறித்து அறிய அரைமணி நேரம் போதும்! எதிர்மறை கருத்து உள்ளவர்கள் கூட ஒருமுறை சந்தித்தால் போதும், உள்ளக்கிடக்கையை எல்லாம் ஓரமாய் வைத்துவிடுவார்கள்.

பத்து நிமிடமேனும்
பார்த்துவிடுகிறோம்!

ஆசிரியரின் அணுகுமுறை ஆகட்டும்; பழகுமுறை ஆகட்டும்! பேச்சுமுறை ஆகட்டும்; பேசுவதைக் கேட்பது ஆகட்டும்! மரியாதைக் கொடுப்பது ஆகட்டும்; மனதிற்கு நெருக்கமாய் மாறுவது ஆகட்டும்! அன்பை வெளிப்படுத்துதல் ஆகட்டும்; அக்கறை பேணுதல் ஆகட்டும்! இவையனைத்தையும் ஒரே நேரத்தில் ஆசிரியரிடம் கண்டுவிடலாம்.

கட்டுரை

பி.என்.ஆர்.அரங்கநாயகி அம்மா இல்லத்தில்…

அந்த எளிமை மற்றும் ஈர்ப்பின் காரணமாகவும் கூட மரியாதை நிமித்தமேனும் ஆசிரியரைச் சந்தித்துவிட வேண்டும், 10 நிமிடமேனும் பார்த்துவிட வேண்டும் என வருவோர் ஏராளம்! அதிலும் வெளிநாட்டுத் தோழர்கள் தங்கள் பயணத் திட்டத்தில் பெரியார் திடலையும், ஆசிரியர் சந்திப்பையும் முக்கியமாய் குறித்து வைத்திருக்கிறார்கள்.

‘வாழ்வியல் சிந்தனைகள்’ எழுதும் ‘ஆசிரியர் வாழ்வு’ குறித்து நிறைய எழுத வேண்டியிருக்கிறது; தோழர்கள் பலரும் பதிவு செய்த வண்ணம் உள்ளனர்.

தாக்கத்தை ஏற்படுத்துவார்!

“ஆசிரியரை முதன்முதலில் சந்திக்கச் சென்றேன். தயக்கத்துடன் உள்ளே போனபோது, ‘வாங்க! வாங்க! நீங்கள் எழுதிய நூலைப் படித்தேன், மிகச் சிறப்பாக இருந்தது’, என்று கூறியதும் அதிர்ச்சியுற்றேன்”, என ஒரு பத்திரிகையாளர் எழுதினார். இப்படி எண்ணற்ற எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், பல்துறை மனிதர்கள் கூறுவதைக் கேட்டு வருகிறோம்.

நேற்று முன்தினம் கூட, தோழர் வாலாசா வல்லவன் தனது முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருந்தார்,

கட்டுரை

தமிழர் தலைவருடன், ஸ்காட்லாந்திலிருந்து வருகை தந்த தோழர் அருண் சந்திப்பு (சென்னை, 3.2.2026)

“இன்று காலை திராவிடர் கழகத் தலைவர், ‘விடுதலை’ ஆசிரியருடன், அரியலூரில் இருந்து திருமழப்பாடி வரை ஒரு மணி நேரம் பயணம் செய்தேன். பல வரலாற்று செய்திகளைக் கேட்டறிந்தேன். நல்ல நினைவாற்றலோடு, நான் கேட்ட அனைத்திற்கும் விளக்கம் அளித்தார். என்னைத் திராவிடர் கழகப் பொறுப்பாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு. ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை. அய்யா அவர்களுக்கு நன்றி”, என ஒரு இயல்பான சந்திப்பை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பதிவு செய்கிறார் என்றால், அந்தளவிற்குத் தாக்கத்தை உண்டு செய்பவர்தான் ஆசிரியர்.

வியக்கும் காரணமென்ன?

இதை ஆசிரியர் திட்டமிட்டு செய்வதில்லை. அவரது இயல்பாகவே அமைந்த ஒன்று. தம் இளம் வயதிலேயே தந்தை பெரியாருடன் அறிமுகமாகி, தமிழ்நாடு முழுவதும் பயணமாகி, அந்தக் காலத்தி லேயே வலியும், வேதனையும், அவமானமும், ஏமாற்றமும் கண்டு, மானமும், அறிவும் மனிதர்க்கு மட்டுமல்ல; இந்த இயக்கத்திற்கும் உண்டு என்பதை உலகுக்குக் காட்டி, அதற்கேற்ப தன்னையும் உருவாக்கிக் கொண்ட தலைவர் அல்லவா!

கட்டுரை

ஆசிரியர் என்கிறார்கள், திராவிடர் கழகத் தலைவர் என்கிறார்கள், தமிழர் தலைவர் என்கிறார்கள்… எண்ணற்ற பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், முதலமைச்சர்கள், ஆளுநர்கள், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, மக்களவை உறுப்பினர்கள் எனப் பலருடனும் சமகால அரசியல், சமூகநீதி உறவுகளை மேம்படுத்தியவர்… இவ்வளவு உயரத்தில் இருக்கும் ஒருவர், நமக்குத் தூரத்தில் தானே இருப்பார் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லை என்பதுதான் அவர்களின் வியப்பாக இருக்கிறது!

ஆரியம் அடியோடு தோற்ற இடம்
‘‘பெரியாரியம்!’’
இதற்கான அடிப்படை என்ன?

இறந்து 52 ஆண்டுகள் ஆன ஒருவரை, எதிரில் நிற்பவரைப் போல நினைத்து வேகமாக, கோபமாக, வெறி பிடித்துத் திட்டுகிறார்கள் என்றால், அதற்குண்டான தலைவர் இந்த உலகத்தில் பெரியார் ஒருவர்தான்! 1973 இல் அவர் மறைந்துவிட்டார். ஆனாலும் அவர் படித்தது, எழுதியது, பேசியது அனைத்தும் வலம் வந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாடு இருக்கும் வரையில் பெரியாரும் இருப்பார்!

கட்டுரை

ஒரு மனிதர் இறந்துவிட்டால் அவர் புகழ் மங்கும், கொள்கைகள் குன்றும், ஈர்ப்புகள் தளறும், ஆண்டுக்கொரு முறை நினைவு நாள் மட்டுமே தங்கும். இதுதான் உலக நியதி. ஆனால் பெரியார் என்பவரோ இறந்த பிறகும் உயிரோடு இருக்கிறார்; இரட்டிப்பாய் நிமிர்ந்து நடக்கிறார். இதைத் தான் ஆரியத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆரியம் அடியோடு தோற்ற இடம் “பெரியாரியம்” என்றால் அது மிகையாகாது!

பெரியாரின் ‘ஆக்சிஜன்’ வீரமணி!

மறைந்த தந்தை பெரியாருக்கு இன்னமும் ‘‘ஆக்சிஜன்’’ கொடுத்து வருபவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! திராவிடர் கழகம் என்பது ஒரு பல்நோக்கு மருத்துவமனை (Multy Speciality Hospital) என்றால், அதன் தலைமை மருத்துவர் ஆசிரியர்! அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஒவ்வொரு ஊழி யர்களும்  உயிர்காக்கும் கருஞ்சட்டைத் தோழர்களே!

கடந்த வாரம் ஆசிரியர் அவர்களுடன் திருச்சியில் இருந்து வாகனத்தில் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. வயது என்னவோ 93 என்கிறார்கள். சனிக்கிழமை காலை கல்லூரி பட்டமளிப்பு விழா, மாலை பெரம்ப லூர் பொதுக்கூட்டம், ஞாயிறு காலை திருமழப்பாடி படத்திறப்பு, மாலை முதலமைச்சர் அவர்களுடன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநாடு எனத் தொடர் பயணங்கள்; தொய்வில்லா ஓட்டங்கள்!

ஆசிரியரின் வேகம்
மணிக்கு 200 கிலோமீட்டர்!

சரி… சனி, ஞாயிறில் நடைபெற்ற பெரிய நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டோம். இடையில் என்ன நடந்தது என்பதையும் குறிக்க வேண்டும் அல்லவா? சனிக்கிழமை காலை நிகழ்ச்சியை முடித்து, மதிய உணவை முடித்து, இளைப்பாற இருந்ததோ இரண்டு மணிநேரம். அதிலும் ஒரு மணி நேரத்தைத் தியாகம் செய்துவிட்டு, மண்ணச்சநல்லூரில் அம்மா பி.என்.ஆர்.அரங்கநாயகி அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார் என்பதை அறிந்தது, அங்கு விரைந்துவிட்டார் ஆசிரியர்.

கட்டுரை

நவீன கண்டுபிடிப்பான வாகனங்களின் ஓட்டம் மணிக்கு 100 கிலோமீட்டர் என்றால், ஆசிரியரின் சிந்தனையோட்டமும், செயலோட்டமும் மணிக்கு 200 கிலோமீட்டர் செல்கிறது. திருச்சியில் இருந்து பெரம்பலூருக்கு நான்கு வழிச்சாலையில் செல்லாமல் நாலா பக்கமும் மாறி, மாறி மண்ணச்சநல்லூர் செல்கிறது வாகனம். கூடவே பயணிக்கும் தோழர்களுக்கு 25 வயது தொடங்கி 50 வயது வரை இருக்கலாம். அவர்களுக்கே சற்று இளைப்பாறுதல் தேவைப்படுகிறது.

ஆனால் ஆசிரியர் அவர்களோ, “நம் இயக்கத்தின் தொண்டர் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை; அவர்களுக்கு ஆறுதலும், தேறுதலும் கொடுக்க வேண்டும், இதில் எனது அலைச்சலை, எனது சிரமத்தை, எனது உடல்வலியைப் பொருட்படுத்த முடியுமா?”, என்று கேட்கிறார். பயணங்களிலும், கூட்டங்களிலும் வலியோடு இருந்தவர் பெரியார் என்பதைப் படித்துள்ளோம்; இப்போது தான் வேறு வடிவத்தில் பார்க்கிறோம்!

‘‘தலைவர் அய்யா!’’

வாகனம் மண்ணச்சநல்லூரைச் சென்றடைகிறது.‌ கருப்புச் சட்டைகள் சூழ வீட்டிற்குள் நுழைகிறார் ஆசிரியர். அங்கே அரங்கநாயகி அம்மா படுக்கையில் இருக்கிறார். இரண்டு கைகளும் நடுங்குகிறது. “நினைவுகளும் குன்றியது, பார்வையும் குறைந்தது’’, என்கிறார்கள் குடும்பத்தினர். அந்தச் சில நொடிகள் பேரமைதி. “அம்மா நல்லா இருக்கீங்களா? நான் யாரென்று தெரிகிறதா?”, என்கிற ஆசிரியரின் கணீரென்ற குரலால் அந்த இடத்தின் இறுக்கம் குறைகிறது!

என்ன வியப்பு… நான் யாரென்று தெரிகிறதா என்ற கேள்விக்கு, “தலைவர் அய்யா” என்று பதிலுரைத்தார் பி.என்.ஆர்.அரங்கநாயகி அம்மா! அந்த நிலையிலும் ஆசிரியரை அழைத்து இயக்க நன்கொடை அளித்தாரே… இதையெல்லாம் எந்தக் கல்வெட்டில், என்ன வார்த்தைகள் இட்டுப் பொறிப்பது? ஆசிரியரின் வயது 93 என்கிறார்கள், அந்த அம்மாவின் வயது 83 என்கிறார்கள். “கடவுள் இல்லை” என்கிற இயக்கத்தில் இருந்து கொண்டு, இத்தனை ஆண்டுகள் கழித்தும் பொருள் பொதிந்த வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், எதிரிகள் கதறி அழுவதில் வியப்பேது?

அம்மாவின் பேட்டியைப் படியுங்கள்!

‘‘இயக்க மகளிர் சந்திப்பு’’ என்கிற வாராந்திர தொடரில் (27.01.2024) இந்த அம்மாவின் நேர்காணல் ‘விடுதலை ஞாயிறு மலரில்’ இடம்பெற்றுள்ளது. அரங்கநாயகி அவர்கள் குறித்த அறியவும், நெகிழவும் நிறைய செய்திகள் அந்த நேர்காணலில் உள்ளது. ஒருமுறை வாசித்துப் பாருங்கள்! 83 வயது பாட்டி படுத்திருக்க, 8, 9 வயது கொள்ளுப் பெயரன், பெயர்த்திகள் சுற்றி நிற்கிறார்கள்; பெரியாரின் கொள்கைச் சுடரைத் தொடர்ந்து ஏற்றிட!

ஆசிரியரின் சுற்றிச் சுழலும் சூறாவளிப் பயணத்தில், இந்த அரைமணி ஒதுக்கீடு எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது பாருங்கள்! ஆசிரியர் வருகிறார் என்றவுடன் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத் தோழர்கள் எல்லாம் வந்துவிட்டனர். காரில் கொடி கட்டி, இந்த நேரத்திற்கு யார் வருகிறார்கள் என்று ஊரே வேடிக்கைப் பார்க்க, அதுவும் ஒரு பிரச்சாரமானது. அரங்கநாயகி அம்மா குடும்பத்திற்கும் மனரீதியான ஒரு மகிழ்ச்சி இருந்திருக்கும், அந்த அம்மா வாழ்ந்த வாழ்க்கைக்கும் கூடுதல் அங்கீகாரம் கிடைத்திருக்கும்! ஆக ஆசிரியர் தம் வலிகளைப் பொருத்துக் கொண்டு, எவ்வளவு வழிகளைத் திறந்துவிடுகிறார் பாருங்கள்!

சக்கரங்களுக்கு ஓய்வேது?

பொன்னி அரிசி மணக்கும் மண்ணச்சநல்லூரில் இருந்து, மீண்டும் வாகனத்தை இயக்குகிறார் ஓட்டுநர் தமிழ்ச்செல்வன்.‌ அதன் பிறகாவது பொதுக் கூட்ட மேடைக்குச் செல்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. சில நிமிடங்களை ஒதுக்கி, பெரம்பலூர் மகாதேவன் அவர்களைப் பார்த்து விட வேண்டும் என்கிறார் ஆசிரியர். வாகனத்தின் சக்கரங்கள் முன்னோக்கி ஓட, ஆசிரியரின் காலச் சக்கரம் பின்னோக்கி ஓடுகிறது.

‘‘மகாதேவன் அவர்கள் சிறந்த வழக்குரைஞர். சமூக உணர்வு மிக்கவர். ‘‘மண்டல் கமிசன்’’ நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்கான நமது பயணமும், போராட்டமும் நீண்ட நெடியது. அப்படி யாக நாம் நடத்திய ஓர் மாநாட்டில் பார்வையாளராக வந்தவர்தான் தோழர் மகாதேவன். அப்போது முதலே நமது இயக்க ஆதரவாளராக மாறிவிட்டார்.‌ பிள்ளைகளும் கொள்கையாளர்களாக இருக்கிறார்கள்’’, என நினைவு கூர்ந்தார் ஆசிரியர். வழக்குரைஞர் மகாதேவனிடம், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்கள் சட்டப் படிப்பை முடித்தவுடன் ‘பிராக்டீஸ்’ செய்தவர் என்பது கூடுதல் தகவல்.

பெரியாருக்கு பெருமை எது?

சிறிதளவே பார்வை தெரியும் மகாதேவன் அவர்க ளுக்கு வயது 92. அவரையும் பார்த்துவிட வேண்டும் என்றுதான் ஆசிரியர் அடுத்ததாக விரைகிறார். அவரது இல்லத்திற்குச் சென்று அனைவரிடமும் அளவளாவி, பிறகு இரவில் பொதுக்கூட்டம் முடித்து, அரியலூர் சென்று தங்கி, அங்கு படத்திறப்பை முடித்து, 300 கிலோமீட்டர் தூரமிருக்கும் சென்னையை நோக்கி விரைந்து, வேகமெடுத்து, பொதுவுடமை மாநாட்டுப் பந்தலை வந்து அடைகிறார்!

ஒருநாள் பயணமே ஒரு கட்டுரைக்கு வழி வகுக்கிறது என்றால், ஒவ்வொரு நாளும் கூடவே இருந்தால்… அதனால் தான் சொல்கிறோம், ‘‘முகம் காட்டும் இடங்களில் எல்லாம் முத்திரைப் பதிப்பவர்’’ என்று! பெரியாருக்குப் பெருமை சேர்ப்பது என்பது, பெரியார் வயதைக் கடந்தும் சுயமரியாதைச் சுடரை ஏந்திட வேண்டும்! அதனையும் நூற்றாண்டு கடந்து செய்து முடிப்பார் நம் ஆசிரியர்!

வாழ்க! வாழ்க!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *