அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய அறிக்கையின் தலைப்பு
‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே!
அதன் விரிவாக்கமே ‘திராவிட மாடல்’ ஆட்சி!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா நினைவு நாள் அறிக்கை
‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே!
அதன் விரிவாக்கமே ‘திராவிட மாடல்’ ஆட்சி!!
தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா நினைவு நாள் அறிக்கை
‘‘அய்யா, அண்ணா வழியில் நம் பயணம் தொடரும் – தொடரட்டும்’’ என்று அண்ணா நினைவு நாளில் , திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
- அண்ணா மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய அறிக்கையின் தலைப்பு ‘‘அண்ணா மறைந்தார்! அண்ணா வாழ்க!’’ என்பதே! அதன் விரிவாக்கமே ‘திராவிட மாடல்’ ஆட்சி!! தமிழர் தலைவர் ஆசிரியரின் அண்ணா நினைவு நாள் அறிக்கை
- அறிஞர் அண்ணா அவர்களின் 57 ஆவது நினைவு நாள்!
- ‘‘மாநிலங்கள் ஒன்றிய ஆட்சியின் அடிமைகள் அல்ல; ஒன்றியத்திற்குச் சுவாசம் தரும் மூச்சுக்காற்று!’’
- இப்போது நடைபெறுவது வெறும் அரசியல் போராட்டமல்ல; ஆரிய – திராவிட கொள்கை லட்சியப் போராட்டம்!
- ஆரியம் அலறுவது ஏன்?
அறிஞர் அண்ணா அவர்களின்
57 ஆவது நினைவு நாள்!
57 ஆவது நினைவு நாள்!
அறிவாசான், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரி யாரின் ஈரோட்டுக் குருகுலத்தின் தலை மாணாக்கர் அறிஞர் அண்ணா அவர்களின் 57 ஆவது நினைவு நாள் இன்று (3.2.2026).
இது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள். மற்றபடி பேரறிஞர் அண்ணாவை நாடும், நாமும் என்றும் மறந்தோமில்லை.
இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி என்ற ஒப்பற்ற ஆட்சியின் சரித்திர சாதனைகளிலும், ‘‘எல்லாம் எங்களுக்கே’’ என்று கருதி நடந்திடும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி என்ற மக்கள் விரோத ஆட்சியினரை எதிர்த்து, எதிர்நீச்சலில் வெற்றி கண்டு, போராடும் போராட்டக் களத்திலும், முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் முதுகெலும்புள்ள ஆட்சியின் முழக்கத்திலும் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைப் பின்னணியும், அண்ணாவின் அற்புதமான அரசியல் வியூகமும், விவேகமும் பதிந்தே இருக்கின்றன நாளும்!
அண்ணாவின் வழியில் அயராது உழைத்து, எடுத்துக்காட்டான ஆட்சியாக அண்ணா கட்டிய அரசியல் உறுதியான கட்டுமானத்தின் மேல் முதல் தளம் அமைத்தவர், துணிவுமிக்க நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
‘‘மாநிலங்கள் ஒன்றிய ஆட்சியின் அடிமைகள் அல்ல; ஒன்றியத்திற்குச் சுவாசம் தரும் மூச்சுக்காற்று!’’
அவர்கள் கட்டிய முதல் தளத்தின்மீது, அடுத்த மேல்தளம் அமைத்து, திராவிடக் கொள்கை மகுடத்தின் ஒளியை உலகெங்கும் பரவச் செய்து, அண்ணா எழுதிய உயில் (Will) போன்ற ‘‘மாநிலங்கள் ஒன்றிய ஆட்சியின் அடிமைகள் அல்ல; மாறாக, ஒன்றியத்திற்குச் சுவாசம் தரும் மூச்சுக்காற்று’’ என்பதற்கு மாறாக, ‘தானடித்த மூப்பாக’ நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சிக்கு அன்றாடம் பாடம் எடுக்கும் அரசியல் ஆளுமையிலும் அண்ணா என்றும் வாழ்கிறார்!
‘‘நீதிக்கட்சி ஆட்சியின் மீட்சி’’ என்றார் அண்ணா, ஆட்சிக்கு வந்தவுடன் 1967 இல்!
அதன் சாட்சியாக, ‘‘சரித்திரம் படைப்பதே எம் பணி’’ என்றார் அய்ந்து முறை முதலமைச்சராகி, புதுமைத் தமிழ்நாட்டினை பொலிவோடு காட்டிய நமது கலைஞர்.
இப்போது நடைபெறுவது
வெறும் அரசியல் போராட்டமல்ல;
ஆரிய – திராவிட கொள்கை லட்சியப் போராட்டம்!
வெறும் அரசியல் போராட்டமல்ல;
ஆரிய – திராவிட கொள்கை லட்சியப் போராட்டம்!
‘‘அவரது திராவிடத் தீர ஆட்சியின் நீட்சிதான் எனது கொள்கை வயப்பட்ட ஆட்சி’’ என்பதோடு, ‘‘இப்போது நடைபெறுவது வெறும் அரசியல் போராட்டமல்ல; ஆரிய – திராவிட கொள்கை லட்சியப் போராட்டம்’’ என்று துணிவுடன் கூறும் நம் முதலமைச்சரின் முழக்கங்களில், அறிஞர் அண்ணா கலங்கரை வெளிச்சம் போன்ற கொள்கை ஒளியாய்த் திகழ்கிறார்!
ஆரியம் அலறுவது ஏன்?
அறிஞர் அண்ணா ஏற்றிய அரசியல் விளக்கை, ஆரியம் அணைத்துவிடாமல், பெரியாரைத் துணைக் கொண்டு, துணிவுடன் கலைஞர் வகுத்த ஆட்சிப் பாதையை அகிலமும் பாராட்டிப் போற்றிடும் வகையில், தனது அயராத உழைப்பு என்பதன்மூலம், இன்றைய நம் முதலமைச்சர் அதனை சறுக்கல், சுருக்கல் இல்லாமல், பெருக்கல் மூலம் நாளும் பெரிதாக்கி, வரலாறு படைப்பதில்
பெரியாரும் வாழ்கிறார்,
அண்ணாவும் வாழ்கிறார்,
திராவிடமும் வாழுகிறது!
எனவே, ஆரியம் அலறுகிறது!
அண்ணா மறைந்த 1968, பிப்ரவரி 3 இரவு நடு நிசியில், அய்யா தந்தை பெரியார் எழுதிய அறிக்கைக்கு, அவர் இட்ட தலைப்பு என்ன தெரியுமா?
இளைய சமுதாயமே தெரிந்துகொள்ளுங்கள்,
‘‘அண்ணா மறைந்தார்; அண்ணா வாழ்க!’’ என்பதே!
அதன் விரிவாக்கமே இன்றைய தொடர் ‘திராவிட (மாடல்) ஆட்சி’கள்!
உரிமைப் போர் எங்கெல்லாம் வெடிக்கிறதோ, அங்கெல்லாம் அய்யாவும், அண்ணாவும் என்றும் இரட்டைக் குழலின் தோட்டாக்களாகவே இருப்பர் என்பது உறுதி! உறுதியிலும் உறுதி!
அய்யா, அண்ணா வழியில் பயணிப்போம்!
அண்ணா வாழ்க!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
3.2.2026
