தெலங்கானாவில் நடிகை டினா ஸ்ராவ்யா என்பவர் துலாபாரத்தில் நாய் வைக்கப்பட்ட காட்சிப் பதிவு பரவிய நிலையில், அதற்கு நடிகை விளக்கமளித்திருக்கிறார்.
தெலுங்கில் சமீபத்தில் வெளியான ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷோ’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை டினா ஸ்ராவ்யா. இவர் அண்மையில் தெலங்கானா மாநிலத்தில் பழங்குடியின தெய்வங்களான சம்மக்கா – சாரக்கா தரிசனத்திற்காக மேடாரம் பகுதிக்குச் சென்றிருந்தார்.
கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, பக்தர்கள் தங்களின் எடைக்கு நிகராக வெல்லத்தை துலா பாரத்தில் வைத்து வழங்குவது வழக்கம். ஆனால், நடிகை டினா ஸ்ராவ்யா தனது நாயைத் துலாபாரத் தில் அமர வைத்து, அதற்கு நிகராக வெல்லத்தை வைத்து எடை போட்டு வழங்கியிருக்கிறார்.
இது தொடர்பான காட்சிப் பதிவு சமூக வலை தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, “நடிகை டீனா ஸ்ராவ்யாவின் செயல் ‘புனித’மான இடத்தையும், பக்தர்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது” என பக்தர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்!
இந்த நிலையில், நடிகை டீனா ஸ்ராவ்யா தன் சமூக வலைதளப் பக்கத்தில் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “சமீபத்தில் எனது வளர்ப்பு நாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தது. அது குணமடைந்தால் அதன் எடைக்கு நிகராக வெல்லம் செலுத்துவதாக வேண்டிக்கொண்டேன். அந்த பக்தியின் காரணமாகவே நான் இந்த நேர்த்திக்கடனைச் செலுத்தினேன். மற்றபடி பழங்குடியின கலாச்சாரத்தையோ அல்லது பக்தர்களின் உணர்வுகளையோ புண்படுத்தும் நோக்கம் எனக்கு எள்ளளவும் இல்லை. யாரேனும் வருத்தமடைந்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்.” என்றிருக்கிறார்.
நடிகை தனது விளக்கத்தைத் தந்தபோதிலும், ‘புனிதமான சடங்குகளில் விலங்குகளை ஈடுபடுத்துவது முறையல்ல’ என ஒரு தரப்பினர் இன்னும் விமர்சித்து வருகின்றனர். ஏற்ெகனவே தெருநாய்கள் குறித்த விவாதங்கள் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பரபரக்கும் நிலையில், இந்தச் சம்பவம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயைத் துலாபாரத்தில் வைத்து வெல்லத்தை எடை போட்டதைக் குறை கூறும் பக்தர்களுக்கு ஒரு தகவல் தெரிந்திருக்க வேண்டும். இந்து மதத்தில் நாய்க்கு உள்ள நிலைப்பாடு என்ன என்பது தெரியுமா?
இந்து சமயத்தில் நாய், பைரவருக்கு (காலபைரவருக்கு) வாகனமாகக் கருதப்படுகிறது. பைரவர் சிவபெருமானின் ருத்ர வடிவமான காவல் தெய்வமாக விளங்குவதால், காவல் அடையாளமாக நாயைத் தனது வாகனமாக வைத்துக் கொண்டுள்ளாரே!
சிவாலயங்களில் காவல் தெய்வமாக பைரவருக்கு நாய் வாகனமும், நாய்க் கொடியும் உண்டல்லவா!
பைரவரை வழிபடுவதன் மூலம் துன்பங்கள் தீர்க்கப்பட்டு, பாதுகாப்புக் கிடைக்கும் என நம்பப்படுகிறது; வேதங்கள் நாய் வடிவத்தில் பைரவருக்கு வாகனமாக இருப்பதாகவும் கூறுகின்றனவே!
இப்படியெல்லாம் இந்து மதத்தில் புராணங்களும், வழிபாடுகளும் இருக்கின்றன.
இந்து மதத்தில் விஷ்ணு பன்றி (வராக) அவதாரம்கூட எடுத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அப்படி அவதாரம் எடுக்கப்பட்டு ‘பன்றிக்கும், பூமிக்கும் பிள்ளை பிறந்தது’ என்றும், அவன்தான் ‘நரகாசுரன்’ என்றும் கூறி தீபாவளி கொண்டாடப்படவில்லையா?
இவையெல்லாம் ஆபாசமானவை – மூடத்தனமானவை என்று பகுத்தறிவாளர்கள் சொல்லும்பொழுது, மூக்குப் புடைப்பவர்கள், இந்து மதத்தில் ‘பைரவர்’ என்று சொல்லப்படுபவர் சிவனின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒருவர் என்றும், அவரது வாகனம் நாய் என்றும் சொல்லப்பட்டு இருக்கும்போது, ‘நாய்க்காகத் துலாபாரம்’ கொடுத்ததைக் கண்டு கோபப்படுவானேன்? கடவுளை அவமதித்ததாக ஆத்திரப்படுவானேன்?
நாய் தன்னை வளர்த்தவருக்கு நன்றியுடன் இருப்பதும், எஜமானனுக்கு ஆபத்து வந்தால் பாதுகாக்கும் தன்மையும், மனிதர்களுக்குப் பாடமாக அமைகிறது.
ஒரு பக்கம் புராணக்கதைகளை நம்பிக் கொண்டு பைரவரின் வாகனமாகக் கும்பிட்டுக் கொண்டும், மறுபுறம் நாய்க்குத் துலாபாரம் செய்தால் ‘புனிதம்’ கெட்டு விட்டது என்றும் அதிருப்தியில் அலறுவதும் சரியா?
பகுத்தறிவோடு சிந்தித்தால் கல்லைக் கடவுளாக்கிக் காணிக்கைகளையும் கொட்டி, ‘கேட்ட வரத்தைக் கொடுப்பான்’ என்று நம்புவதெல்லாம் மூடத்தனம் என்பது வெள்ளிடை மலையாக விளங்குமே!
