ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா?

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மஞ்சை வசந்தன்

ஆன்மிகத்தின் அடிப்படை கடவுள். கடவுள், புராணம், சாஸ்திரம், சம்பிரதாயம் என்றாலே நம்பிக்கையின் அடிப்படையிலே கருத்துகள் கூறப்படுகின்றன. “நம்பு”, “எதிர்த்து கேள்வி கேட்காதே”, “அப்படியே ஏற்றுக்கொள்” என்று வலியுறுத்துகிறது ஆன்மிகம்!

மனித அறிவு வளர்ச்சியில்லாத காலத்தில் கூறப்பட்டக் கருத்துகளை, சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் அறிவு வளருமா?

கூறப்படுவது சரியா? உண்மையா? அப்படி நடக்குமா? என்று சிந்தித்தால் தானே அறிவு வளரும்?

சிவபெருமான் தலையில் நிலவு இருக்கிறது என்று ஆன்மிகம் கூறுகிறது. அதை அப்படியே ஏற்றுக் கொண்டு சிந்திக்காமல் இருந்தால் நிலவுக்குச் சென்று நடக்கும் அளவிற்கு அறிவு வளர்ந்திருக்குமா?

நிலவைப் பாம்பு விழும்குகிறது என்கிறது ஆன்மிகம். அதை ஏற்றால் அறிவு வளருமா? பூமியின் நிழல் விழுவதால் சந்திரகிரகணம் ஏற்படுகிறதே தவிர பாம்பு விழுங்குவதால் அல்ல. நிலவு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளது அங்கு பாம்பு செல்ல முடியாது. நிலவு என்பது ஒரு கோள். அது பரந்த நிலப்பரப்பு அதைப் பாம்பு விழுங்க முடியாது என்ற உண்மைக்கு மாறாய் ஆன்மிகம் கூறுவதை ஏற்றால் அறிவு வளருமா? அறிவியல் தான் வளருமா?

பூமியைப் பாயாய்ச் சுருட்டினான், சுருட்டிக் கொண்டு கடலில் பதுங்கிக் கொண்டான் என்கிறது ஆன்மிகம். பூமி தட்டையானது என்று நம்பப்பட்டக் காலத்தில் எழுதப்பட்ட புராணம் என்பதால் அப்படிக் கூறியுள்ளது. ஆனால் உண்மையில் பூமி தட்டையா? என்றால் இல்லை அது உருண்டையானது.

உண்மைக்கு மாறாய் கருத்துகூறும் ஆன்மிகம் அறிவைக் கொடுக்குமா? கெடுக்குமா?

கடல் என்பது பூமியின் பள்ளப் பகுதியில் நிற்கும் நீர் நிலை. எனவே, கடல் பூமியில் உள்ளதே தவிர அது தனியே உள்ளது அல்ல. அப்படியிருக்க பூமியைச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் பதுங்கினான் என்பது எவ்வளவு தப்பான, அறிவுக்குப் புறம்பான, அறிவைக் கெடுக்கும் கருத்து! சிந்தித்துப் பாருங்கள்!

“காலரா” காளியாத்தாள் கோபத்தால் வருவது, “அம்மை” மாரியாத்தாள் கோபத் தால் வருவது என்கிறது ஆன்மிகம். எனவே, காலரா வந்தால் காளியாத்தாளுக்குப் படையல் போட வேண்டும், அம்மை வந்தால் மாரியாத்தாளுக்குப் படையல் போட வேண்டும் என்கிறது ஆன்மிகம்.

காலரா என்பது ஒரு நோய். தூய நீர் குடிக்காமையால், அசுத்த நீரைக் குடிப்பதால் வரும் நோய். இது அறிவியல் உண்மை. ஆனால், இந்த உண்மைக்கு எதிராய், காலரா காளியாத்தாள் கோபத்தால் வருவது என்று கூறுவது அறிவுக்கு எதிரான, அறிவைக் கெடுக்கும் கருத்து அல்லவா?

அதேபோல் அம்மையென்பது ஒரு வெப்ப நோய். கோடைக் காலத்தில் வரக்கூடியது. உண்மை இப்படியிருக்க, மாரியாத்தாள் கோபத்தால் வருவது என்று மாரியாத்தாளுக்குப் படையல் போடுவது அறிவுக்கு உகந்த செயலா?

காலரா என்பதும், அம்மையென்பதும் தொற்று நோய். அப்படியிருக்க பாதிக்கப்பட்டவர்கள் தனிமையில் இருக்க வேண்டிய நிலையில் கும்பல் சேர்த்து படையல் போடுவது, பலருக்கும் பரவச் செய்யும் அறியாமையல்லவா? அறிவுக்கு எதிரான செயல் அல்லவா?

தூய குடிநீர் குடிப்பதன் மூலம், தடுப்பூசி போடுவதன் மூலம், காலராவும், அம்மையும் ஒழிக்கப்பட்டு விட்டன. கடவுள் கொடுப்பதாய் இருந்தால் ஒழிக்க முடியுமா? சிந்திக்க வேண்டாமா?

சிறப்புக் கட்டுரை

பல கடவுள்கள்

கடவுள் பெயரால் கணக்கற்றச் சடங்குகள் செய்யப்படுகின்றன. கடவுள் என்றால் என்ன என்று கேட்டால், நமக்கு அப்பாற்பட்ட சக்தி என்கின்றனர். அதற்கு உருவம் உண்டா? என்றால் இல்லை என்கின்றனர். அது எங்கேயுள்ளது என்றால் எல்லாவற்றிலும் இரண்டறக் கலந்தது என்கின்றனர். உன்னிலும், என்னிலும், விண்ணிலும், மண்ணிலும் கலந்துள்ள சக்தி என்கின்றனர்.

சக்திமயமான கடவுள் என்றால், அதற்கு உருவம் இல்லையென்றால், ஆண் கடவுள், பெண் கடவுள் என்று பல கடவுள்கள் எப்படி வந்தன. உருவம் இல்லாத சக்திக்கு ஆண், பெண் என்ற வேறுபாடு எப்படியிருக்க முடியும்? பல கடவுள் எப்படியிருக்க முடியும்?

பல கடவுள்கள் இல்லையென்றால் சிவன், திருமால், விநாயகர், பார்வதி, காளி, மாரி, லட்சுமி, சரஸ்வதி, சுப்ரமணியன், பிரம்மன் என்று எப்படி பல கடவுள்கள் கூறப்படுகின்றன.

பல கடவுள்கள் இல்லையென்றால், பல கடவுள்களைக் கூறி எழுதப்பட்ட புராணங்கள் எப்படி உண்மையாகும்?

பல கடவுள்கள் இல்லையென்றால் பல கடவுள்களுக்கான கோயில்கள் பலவிதமாக ஏன் கட்டப்படுகின்றன?

கடவுள் எது? அது எங்கே இருக்கிறது என்று கேட்டால் அதற்குப் பதில் கூற முடியாமல், கடவுளைக் காட்ட முடியாமல் அது எல்லாவற்றிலும் கலந்துள்ளது. அது கண்ணால் பார்க்க முடியாதது, சக்திமயமானது என்று கூறி தப்பிக்கின்ற கடவுள் நம்பிக்கையாளர்கள், மதத் தலைவர்கள், மனதால் எண்ணித் தானே வழிபட வேண்டும். மாறாக அதற்கு உருவம் கொடுப்பது அறிவுக்கும், அவர்கள் கூறும் கடவுள் விளக்கத்திற்கும் எதிரானது அல்லவா?

இப்படிக் கேட்கும் போது, சாதாரணமான பாமர மக்களுக்கு, சக்திமயமான கடவுளை மனதால் எண்ணி வழிபட முடியாது. அவர்கள் வணங்க ஓர் உருவம் வேண்டும். அதனால்தான் உருவமாக்கப்படுகிறார் என்று சமாதானம் கூறுகின்றனர்.

அவர்கள் வாதப்படியே வைத்துக் கொண்டாலும் ஒரு கல்லை நட்டித் தானே வழிபட வேண்டும்? உருவம் வடித்து வழிபடுவது எப்படிச் சரியாகும்? ஆண், பெண் உருவங்கள் வடித்து வழிபடுவது எப்படிச் சரியாகும்?

சக்திக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு எப்படி இருக்க முடியும்? சக்திக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாதே!

மனதை ஒருநிலைப்படுத்தத்தான் சிலை என்று கூறிவிட்டு பல கடவுள் சிலைகளை, பல கடவுள்களை உருவாக்கி, அவற்றிற்குப் பல கோயில்களைக் கட்டுவது எப்படி அறிவுக்கு உகந்ததாகும்?

அதிலும் இந்தக் கடவுள் உயர்ந்தது! அந்தக் கடவுள் சக்திமிக்கது என்று வேறு படுத்திக் காட்டுவது எப்படிச் சரியாகும்?

அதிலும் பிள்ளை வரம் தர ஒரு கடவுள், கல்வி தர ஒரு கடவுள், செல்வம் தர ஒரு கடவுள், வீரம் கொடுக்க ஒரு கடவுள், நோய் தீர்க்கத் தனியே கடவுள், அதிலும் ஒவ்வொரு நோய் தீர்க்க ஒவ்வொரு தனித்தனிக் கடவுள்கள் என்று கணக்கில்லா கடவுள்களை உருவாக்கி மக்களை மடையராக்குவது சரியா?

எல்லாவற்றிலும் முக்கியமாக ஆணுக்கும், ஆணுக்கும் குழந்தை பிறந்தது என்று ஒரு கடவுளை உருவாக்கி, அதுதான் சக்தி மிக்கது என்ற விளம்பரம் செய்து கூட்டம் கூட்டுவது அறிவுக்கு ஏற்றதா? நேர்மையான செயலா? இறைத் தத்துவத்திற்கு உகந்ததா?

சக்திமயமான கடவுளை உருவமாக வணங்குகிறேன் என்று உருவ வழிபாட்டை உண்டாக்கிவிட்டு, அதுலே எது சக்திமிக்கது என்று மோதிக்கொள்வது அறிவுக்கு ஏற்றதா?

கோயில்கள் ஏன்?

சக்திமயமான கடவுளை வணங்க, மனதை ஒரு நிலைப்படுத்த சிலை வணக்கம் என்று சொல்லிவிட்டு, அந்த சிலைக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கோயில் கட்டுவது அறிவுடமையா?

வீட்டிலே ஒரு சிலையை வைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி வணங்குவது தானே சரியாகும்? கோயிலைத் தேடிச் சென்று தான் வணங்க வேண்டும் என்பது, முதலில் கூறிய காரணத்திற்கு முரண் அல்லவா?

நாட்டிலே லட்சக்கணக்கான மக்கள் தங்கக் குடிசையின்றி தவிக்கும் நிலையில், கருங்கல் சிலைக்கு, செம்புச் சிலைக்கு கோயில்கள் கட்டுவது மக்கள் விரோதச் செயல் அல்லவா? கூர்மையாக நோக்கின் அது கடவுள் விரோதச் செயலும் அல்லவா?

குடமுழுக்கு சரியா?

சக்திமயமான இறையை வணங்க, மனதை ஒருநிலைப்படுத்திதான் சிலை யென்று சொல்லிவிட்டு, அச்சிலைக்கு கோயில் கட்டி, அதற்கு மந்திரம் சொல்லி குடமுழுக்குச் செய்கிறேன் என்பது தப்பு அல்லவா?

மனிதனால் உருவாக்கப்படும் சிலையை கோயிலுக்குள் வைத்து, அதற்கு யாக சாலையில் வேள்வி செய்து, அதன்பின் புனித நீரைக் கலசத்தில் ஊற்றுவதுதன் மூலம் கோயில் சிலைக்கு சக்தியைக் கொடுக்கிறோம் என்பது மோசடியல்லவா? ஏமாற்று அல்லவா? மக்களை மடைய ராக்கும் செயல் அல்லவா?

கடவுள் சக்திமயமானது, அது அனைத்திலும் நிறைந்துள்ளது. அதை ஒருநிலைப்படுத்தி வணங்கவே சிலை என்று கூறிவிட்டு, அந்த சிலைக்கு வேள்வி செய்து சக்தி ஊட்டுகிறேன் என்பது சரியா? சக்திமயமான இறைக்கு ஆரிய பார்ப்பான் ஓதும் மந்திரம் தான் சக்தி ஊட்டுகிறது என்பது உலக மகா மோசடி அல்லவா? மக்களை சிந்தனையற்ற மடையர்களாக்கும் மந்தைகளாக்கும் வேலையல்லவா? சிந்திக்க வேண்டாமா?

அபிஷேகம், ஆராதனை ஏன்?

சக்திமயமான கடவுளை வணங்க மனதை ஒருநிலைப்படுத்த சிலை என்று சொல்லிவிட்டு, அச்சிலைக்கு அபிஷேகம், ஆராதனை செய்வது தப்பான செயல் அல்லவா?

அதிலும், பல லிட்டர் பாலை ஊற்றிப் பாழாக்குவதும், எண்ணையை ஊற்றி வீணாக்குவதும், பழம் வாசனைத் திரவியங்களை ஊற்றுவது, பணத்தை விரயமாக்குவது தப்பல்லவா?

மனிதர்களுக்கு பயன்பட வேண்டிய பொருள்களைப் பாழாக்குவது நேர்மையா? ஆன்மிகத்திற்கு அழகா? ஏன் அந்த சக்திமயமான கடவுளே அதை ஏற்குமா? சிந்திக்க வேண்டாமா?

மக்கள் தொண்டு தானே
மகேசன் தொண்டு?

கடவுள் தத்துவம், ஆன்மிக அறிஞர் களும் என்ன கூறுகிறார்கள்? மக்களுக்குச் செய்யும் தொண்டே கடவுளுக்குச் செய்யும் தொண்டு, அதையே கடவுள் ஏற்கும் என்று கூறுவதோடு, அன்னசத்திரம் ஆயிரம், ஆலயம் பதினாறாயிரம் கட்டு வதைவிட ஓர் ஏழைக்கு பசி தீர்ப்பதும், கல்வியளிப்பதுமே புண்ணியச் செயல் என்று கூறியுள்ளனர்.

அப்படியிருக்க, கோடிக்கணக்கில் கோயில் கட்டுவதற்குச் செலவிடும் பணத்தை, ஏழைகளுக்கு வீடு, உணவு, கல்வி அளிக்கப் பயன்படுத்துவதுதானே அறச் செயலாகும்?

அப்படிச் செய்யாது ஆயிரக்கணக்கில் மேலும் மேலும் கோயில்கள் கட்டுவ தும், சடங்குகள், பூசைகள், தேர், திரு விழாக்கள் நடத்துவதும் ஏற்புடையதா? ஆன்மிகத்திற்கு அழகா?

ஆன்மிகவாதிகள் தாங்கள் கூறும் தத்துவங்களுக்கு எதிராகவே தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்வது குற்றமல்லவா?

அப்படி மனதை ஒருநிலைப்படுத்த உருவாக்கப்பட்ட கோயில்களில் அர்ச்சக ராக எல்லோருக்கும் உரிமை இல்லை, ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் வரைச் சென்று வாதிடுவது ஆன்மிகத்திற்கு அழகா? அறிவிற்கு ஏற்படையதா? மனித மாண்புக்கு உகந்ததா?

இன்னொரு மதத்தார் கோயிலை இடித்துவிட்டு, தன் கோயிலைக் கட்டுவது சரியா? அதன் மூலம் மதக் கலவரங்களை உருவாக்கி, மோதல்களைச் செய்து, உடல் பாதிப்பை, உயிரிழப்பை உண்டாக்குவது நேர்மையா? ஆன்மிகத்திற்கு அழகா?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *